59
தலைவன் கூற்று

தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி,
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர், அரி, முன்கை,
5சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட, அரி பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால
என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி:
10மருளி, யான் மருள் உற, ‘ "இவன் உற்றது எவன்?" என்னும்
அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால்,
வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?
உருளிழாய்! ‘ "ஒளி வாட, இவன் உள் நோய் யாது?" என்னும்
15அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால்,
பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?
ஆய்தொடி! ' "ஐது உயிர்த்து, இவன் உள் நோய் யாது?" என்னும்
நோய் இலை இவட்கு’ என நொதுமலர் பழிக்குங்கால்,
20சிறு முத்தனைப் பேணி, சிறு சோறு மடுத்து, நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ?
என ஆங்கு,
அனையவை உளையவும், யான் நினக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாயாயின், சேயிழாய்!
25செய்ததன் பயம் பற்று விடாது;
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே

இரந்து குறையுற்றுப் பின்னின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி ‘இங்ஙனம் வருத்துவையாயின், நீ செய் தவம் இன்றாம்’ எனக் கூறியது