74
காமக்கிழத்தி கூற்று

பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த
நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை,
மை தபு, கிளர் கொட்டை மாண் பதிப் படர்தரூஉம்,
5கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர!
'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி,
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை
கண்டும், நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்
10முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்து,
பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்
என ஆங்கு
'கிண்கிணி மணித் தாரோடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப்
பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என,
15ஊரவர் உடன் நகத் திரிதரும்
தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனொடு ஊடிய காமக்கிழத்தியை, அவன் 'இவ்வகையான கூற, நீ ஏமுற்றாயோ?' என்றாற்கு அவன் கூறியது