[தலைமகள் குறிப்பறிதலுற்றான் சொல்லியது] அடுநறா- காய்ச்சப்படும் இனிய மது; உண்டார் கண் அல்லது- தன்னைப் பருகினவருக்கன்றி; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று- காதலிக்கப்பட்ட பெண்போலத் தன்னைப் பார்த்தவருக்கும் மகிழ்ச்சி தருதலில்லை. அடுநறா, சுவையும் மணமும் மிக்கனவும் உடம்பிற்கு உரஞ்செய் வனவும் சிறிது மயக்கந்தருவனவுமாக, கூலங்களினின்றும் கனிகளினின்றும் காயச்சரக்குகள் சேர்த்துக் காய்ச்சி யிறக்கப்படும் மட்டு வகைகள். மகிழ் என்பது, களி என்னுஞ்சொற்போல இன்பத்தையும் மயக்கத்தையும் உணர்த்தும். காமம் என்றது இங்கு அதை நுகர்தற்கு இடமானவரை. அவர் ஆடவர்க்குப் பெண்டிரும் பெண்டிர்க்கு ஆடவருமாவர். கண்டார் கண் என்பதிற் கண்ணென்னும் இடப்பொருளுருபு தொக்கது. இவள் காதற் குறிப்பை இன்னும் அறியாமையால் கண்டாரின்பமே யன்றி உண்டாரின்பம் யான் பெற்றிலேன் என்பது குறிப்பெச்சம்.
|