பக்கம் எண் :

விடா அது சென்றாரைக் கண்ணினாற் காணப்
படாஅதி வாழி மதி.

 

வன்புறை யெதிரழிந்த தலைமகளின் காமமிக்க கழிபடர் கிளவி.

மதி- நிலாவே! ; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப் படாதி - என் நெஞ்சில் இடைவிடாதிருந்தே விட்டுப்போன என்காதலரை நான் என் கண்ணளவாலாயினுந் தலைக்கூடும் வகை, நீ மேற்றிசையில் மறையா திருப்பாயாக; வாழி - நீ(அங்ஙனஞ் செய்யின்) நீடு வாழ்க!

கண்ணளவால் தலைக்கூடுதலாவது, மதி இருவராலும் நோக்கப் படும்போது இருவர் கண்ணும் அதன்கண் சேர்தல். முதலொடு சினைக் கொற்றுமை யுண்மையால் 'சென்றாரைக் கண்ணினாற் காண' என்றும், குறையிரக்கின்றாளாதலின் 'வாழி' என்றும், கூறினாள். 'விடா அது', 'படா அதி' இசைநிறை யளபெடைகள்.

இனிப் படாது என்பது பாடமாயின் காதலரைக் கனவிற் கண்ணாற் காணுமாறு மதிபடுகின்றதில்லையென, அதனால் தூக்கம்பெறாது வருந்தும் தலைமகள் கூற்றாகக் கொள்ளப்படும்.