நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் - மாபெருங்கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தடிந்துதான் நல்காதாகிவிடின் - முகில் (மேகம்) அதனைக் குறைத்துப் பின்புதான் அதன்கண் பெய்யாது விடின். தன்னியல்பு குறைதலாவது மீன் முதலியன கலியாமையும் முத்து முதலியன விளையாமையும். கடலைக் குறைத்தலென்பது அதில் நீரை முகத்தல். இது பண்டை நம் பிக்கை. 'கடல்குறை படுத்தநீர் கல்குறைபட வெறிந்து' என்று பரிபாடலும் (20), "இலங்க லாழியி னான்களிற் றீட்டம்போற் கலங்கு தெண்டிரை மேய்ந்து கனமழை". என்று சிந்தாமணியும் (32) கூறுதல் காண்க. முகப்பது முகில். முகந்தபின் மேலெழுவது எழிலி. கடல்நீர் ஆவியாக மாறி மேலெழுவது முகிலாவதால், பண்டை நம்பிக்கையும் ஒருமருங்கு உண்மை யானதே. மழைக்கு மூலமாகிய மாபெரு நீர்நிலைக்கும் மழை வேண்டும் என்று மழையின் சிறப்புக் கூறியவாறு. உம்மை சிறப்பும்மை. |