பக்கம் எண் :

ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு.

 

உலகு அவாம் பேரறிவாளன் திரு - உலகிலுள்ள உயிர்களையெல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையான் செல்வம்; ஊருணி நீர்நிறைந்த அற்றே - ஊர்வாழ்நரின் குடிநீர்க்குளம் நிரம்பினாற் போன்றதே.

பாரி முல்லைக்குத் தேரும் பேகன் மயிலுக்குப் போர்வையும் உதவிய செயல்கள், ஒப்புரவாளர் அஃறினை யுயிர்களையும் விரும்புவதை அறிவிக்கும். ஊருண்பது ஊருணி. இது பாண்டி நாட்டு வழக்கு. இல்லற நிலையிலேயே இருதிணையுயிர்களிடத்தும் அன்பு செய்பவனைப் பேரறிவாளன் என்றார். ஊருணி என்ற உவமத்தால் மாபெரும் செல்வம் என்பதும் ஒப்புரவாளன் வாழுங் காலமெல்லாம் எல்லார்க்கும் என்றும் எளிதில் உதவும் என்பதும் பெறப்படும். ' நீர்நிறைதல் ' ஒரு சொற்றன்மையது. ஏகாரம் தேற்றம்.