பக்கம் எண் :

நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது.

 

நத்தம் போல் கேடும் - புகழுடம்பின் கரு வளரச்சியடைவது போல் (முழு வளரச்சிபுற்ற) பூதவுடம்பு தளர்ச்சியடைவதும்; உளது ஆகும் சாக்காடும் - அப்புகழுடம்பின் பிறப்பாகிய பூதவுடம்பின் இறப்பும்; வித்தகர்க்கு அல்லால் அரிது - திறப்பாடுடையவர்க்கன்றி ஆகாவாம்.

பொதுவாக, ஒருவன் வாழ்க்கைப் பொறுப் பேற்ற பின்பே புகழுக் கேற்ற ஈகை வினைகளையும் தொண்டுகளையுஞ் செய்ய முடியும். அதற்குள் அவன் உடம்பு முழு வளர்ச்சி யடைந்திருக்கும். புகழ்த் தொண்டி லீடுபட்டுக் காலஞ் செல்லச் செல்ல, மூப்பினால் உடம்பு தளர்ந்து வருகின்றது. இறுதியில் சாக்காடு நேர்கின்றது. அதுவரை பொதுநலத் தொண்டைத் தொடர்ந்து செய்து வந்ததினால், புகழும் படிப்படியாக வளர்ந்து அவன் சாக்காட்டுச் சமையத்தில் முழுவளர்ச்சி யடைந்து, பூதவுடம்பு மறைந்தபின் தானே விளங்கித் தோன்றுகின்றது.

புகழை ஓர் உடம்பாக உருவகிப்பது இலக்கிய மரபு. பூதவுடம்பு தாய்வயிற்றிற் கருவாகத் தொடங்கிப் படிப்படியாக வளர்ந்து பத்தாம் மாதம் முழுவளர்ச்சி யடைந்து குழவியாகப் பிறக்கின்றது. இந்நிலைமையைப் புகழுடம்பிற்கும் பொருத்திக் கூறியுள்ளார் ஆசிரியர் வள்ளுவனார். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் பொதுநல வூழியத்தைத் தொடங்கும்போது, புகழுடம்பு கருக்கொள்கின்றது. ஊழியம் நீட நீடப் புகழுடம்பு வளர்கின்றது. பூதவுடம்பு தளர்கின்றது. சாக்காட்டிற் புகழுடம்பு வளர்கின்றது. பூதவுடம்பு இறக்கின்றது. இதையே ' நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்' என்றார். போல் என்பது வளர்ச்சிக்கும் தளர்ச்சிக்கும் ஒப்புமை கூறிய உவமையுருபு. இது குழவி வளர்ந்தது போலக்கிழவி தளர்ந்தாள் என்பது போன்றது. ஆதலால், போல் என்பது பரிமேலழகர் கூறுவது போல் உரையசையன்று. நந்துதல் வளர்தல்.நத்தம்-வளர்ச்சி; முதனிலை வலித்து ஈறுபெற்ற தொழிற் பெயர். 'அம்' முதனிலைப் பொருளீறு (பகுதிப் பொருள் விகுதி) அன்று. வாழ்நாள் முழுதும் பொதுநலத் தொண்டாற்றுவது திறப்பாடான செயலே.