பக்கம் எண் :

கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

 

ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி -ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல-மற்றப் பொருட் செல்வங்களெல்லாம் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோந் தன்மையன வாதலின் சிறந்த செல்வங்களாகா.

கல்வியின் கேடின்மையை,

"வெள்ளத்தாற் போகாது வெந்தழலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது கல்வியெனும்
உள்ளத்தே பொருளிருக்க வுலகெல்லாம் பொருள்தேடி யுழல்வதேனோ"


என்னும் பழந்தனியனால் அறிக.கல்விச் சிறப்பு அறிவொழுக்கமும் அரசனாலும் மதிக்கப்பெறுதலும் மறுமையில் நற்பதப்பேறுமாம்.

"அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும்-உறுங்கவலொன்
றுற்றுழியுங் கைக்கொடுக்குங் கல்வியி னூங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை".


என்பது நீதிநெறி விளக்கம்(2).

முதற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக் கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. மேலைநாடுகளிலும் இங்ஙனமே மாடு செல்வமாகக் கொள்ளப்பெற்றது.

L.pecu-cattle, pecunia-money. E. pecuniary-(consisting) of money.