பக்கம் எண் :

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்.

 

அஞ்சுவது அ ஞ் சா மை பேதைமை - அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் -அஞ்சவேண்டுவதற்கு அஞ்சுவது அறிவுடை யார் செயலாம்.

அறங்கடையும் (பாவமும்) பழியும் அழிவும் அஞ்சப்படுவன. அவற்றை 'அஞ்சுவது' என்றது வகுப்பொருமை. அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாமைபோன்றே, அஞ்சவேண்டாதற்கு அஞ்சுவதும் பேதைமையாம். இருட்டிடமும் நாட்டுப்போரும் அவைப்பேச்சும் அஞ்சவேண்டாதன, 'அஞ்சாமை' பொருட்படுத்தாது செய்து துன்புறுதல் அல்லது கெடுதல். 'அஞ்சல்' பொருட்படுத்தித் தவிர்ந்து இன்புறுதல். அஞ்சுவதஞ்சல் அறிஞர் இயல் பென்றற்கு 'அறிவார் தொழில்' என்றார்.

முன்பு அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப் பட்டமையால் (382). அதற்கு மாறான அஞ்சுவதும் அரசனுக்குண்டென்று இங்குக் கூறியவாறு.