பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 56. கொடுங் கோன்மை

அஃதாவது , அரசனாற் கையாளப்படும் நேர்மை யில்லா ஆட்சி முறைமை, நேர்மையில்லா ஆட்சி வளைந்த கோல் போலிருத்தலால் கொடுங்கோல் எனப்பட்டது . கொடுங்கோலின் தன்மை கொடுங்கோன்மை . இது செங்கோன்மைக்கு மாறாகலின் , அது கூடாதென்பதற்கு அதன்பின் வைக்கப்பட்டது.

 

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.

 

அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் . வேந்து - பொருளாசையாற் குடிகளை வருத்துந் தொழிலை மேற்கொண்டு முறையல்லாதவற்றைச் செய்தொழுகும் வேந்தன் ; கொலை மேற்கொண்டாரின் கொடிதே - பகைமையினாற் கொல்லுதல் தொழிலை மேற்கொண் டொழுகுவாரினுங் கொடியனேயாவன் .

சிறிது பொழுதே செய்யுங்கொலைத்துன்பத்தினும் எப்பொழுதும் செய்யும் அலைத்துன்பங் கொடிது என்பதாம் . 'வேந்து' பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணையாதலின் அஃறிணை முடிபு கொண்டது . ஏகாரம் தேற்றம் .