மலர் நீட்டம் வெள்ளத்து அனைய -நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அவை நிற்கும் நீரின் அளவாகும்; உயர்வு மாந்தர்தம் உள்ளத்து அனையது - அது போல மாந்தரின் வாழ்வுயர்ச்சி அவருடைய ஊக்கத்தின் அளவாகும். உயர்வு அரசர்க்கு நாடு பொருள் படைகளும் பிறர்க்குச் செல்வம் பதவி வினைஞரும் மிகுதலாம். சில மலர்க் காம்புகள் நீர் மட்டத்திற்கு மேலும் நிற்றலால் ,நீரளவாய் நிற்பனவே இங்கு உவமையாவன என அறிக. 'மலர்' ஆகுபொருள். நீரை வெள்ளம் என்பது மலையாள நாட்டு வழக்கமாதலால், திருவள்ளுவர் பண்டைச் சேரநாட்டொடு பழகியிருந்தமை உய்த்துணரப்படும். இதை "இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇயற்று" (குறள்.613) என்னும் உவமமும் வலியுறுத்தும். இக்குறளில் வந்துள்ள அணி எடுத்துக்காட்டுவமை.
|