பக்கம் எண் :

அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
கடுத்தது காட்டு முகம்.

 

அடுத்தது காட்டும் பளிங்குபோல்-தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் நிறத்தையும் தன்னுட்காட்டும் கண்ணாடி போல; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்- ஒருவர் மனத்தில் தோன்றிய கருத்தை அவர் முகமே காட்டிவிடும்.

'அடுத்தது' ஆகு பொருளது. ஒரு கருத்து ஒருவர் உள்ளத்தில் முன்னில்லாது புதிதாய்த் தோன்றிய மிகையாதலின்,'கடுத்தது' எனப்பட்டது. கடுத்தல் மிகுதல். இவ்வுவமையில், தொடர்பினால் ஒன்றையொன்று காட்டுதல் பொதுத்தன்மையாம். பளிங்கு புறப்பொருளை அகத்திற் காட்டுவது; முகம் அகப்பொருளைப் புறத்திற் காட்டுவது.