கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை கெடாது பழைமையாக வந்த நட்பையுடையாரின் உறவை; விடார் - அவர் செய்த தவறு பற்றி விடாதவரை; உலகு விழையும் - உலகம் விரும்பும். கேண்மையை விடுதற்கு இருக்கக்கூடிய கரணியம் வருவித்துரைக்கப்பட்டது. உலகம் விரும்புதலாவது புகழ்ந்து போற்றுதலும் அவரோடு நட்புக் கொள்ளுதலும், 'கெடா' ஈறுகெட்ட எதிர் மறை வினையெச்சம். 'கெடாஅ', 'விடாஅர்' இசைநிறையளபெடைகள். 'கெடாஅர்' என்பது மணக்குடவ காலிங்க பரிப்பெருமாளர் கொண்ட பாடம். 'நட்பிற் கெடாராய்' என்பது மணக்குடவர் உரை. காலிங்கர் 'விடாஅர்' என்பதையும் இங்ஙனமே முற்றெச்சமாக்கி "ஒருகால் ஒழியாதே" என்று பொருளுரைப்பர். 'உலகு' ஆகுபெயர்.
|