மதி நலத்தின் மாண்ட அறிவினவர்- இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வியறிவினையுடையார்; பொது நலத்தார் புல் நலம் தோயார் - பொருள் கொடுத்தாரெல்லாரும் பொதுவாக நுகர்தற்குரிய விலைமகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத்திற் படியார். இயற்கையான மதிநலம் முற்பிறப்புகளிற் செய்த நல்வினைகளாலும் கற்ற கல்வியாலும் அமைவது. மதிநலத்தாலேயே கல்வியறிவு மாட்சிமைப் படுதலால் 'மதிநலத்தின் மாண்டறிவினவர்' என்றும், மாட்சிமைப்பட்ட அறிவினர்க்கு விலைமகளிர் நலத்தின் பொதுமையும் புன்மையும் விளங்கித் தோன்றுதலால் 'தோயார்' என்றும், கூறினார்.
|