வாய்மைக் குடிக்கு- எக்காலத்துந் திரிபில்லாது ஒரே சரியாய் ஒழுகும் உயர்குடிப் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்- இரவலரும் இரப்போரும் வறிய வுறவினரும் தம்மையடைந்தபோது, முகம் மலர்தலும் இயன்றன கொடுத்தலும் இன்சொற் சொல்லுதலும் தாழ்வாகக் கருதாமையும் ஆகிய நான்கு குணமும்; வகை என்ப- இயல்பாக வுரிய கூறென்பர் அறிந்தோர். எக்காலத்தும் தவறாது ஒழுகுதலும் வழங்குதலும் பற்றி வைகையைப் "பொய்யாக் குலக்குடி" (சிலப். புறஞ்சேரி 170) என்றதுபோல, நற்குடியை 'வாய்மைக்குடி' என்றும், இல்லாரை இல்லாளும் ஈன்றாளும் உட்பட எல்லாரும் எள்ளுவராகலின், இகழாமையைக் குடிப்பிறந்தார்க்குச் சிறப்பாக்கியும்; கூறினார். 'குடி' ஆகுபெயர். இரவலராவார் புலவர் பாணர் கூத்தர் முதலியோர். "நான்கின் வகையென்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கான் உளதாமென்றுரைக்க" என்று பரிமேலழகர் கூறியிருப்பது பொருத்தமே இம்முன்று குறளாலும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.
|