தேவர்கள் கூட்டம் எதிர்வந்து வரவேற்க; இறந்து விண்ணிடை - இறந்து மேல்உலகத்தின்கண்; ஏகினன் - சென்றான்: வாட்டம் தரும் நெஞ்சு - தன்னைப் பிரிந்தமையால் கண் இழந்த பெற்றோர் முதுமையில்உதவுவாரின்றி வாடுவர் என்பது பற்றிய வாட்டம் என்க. இறுதி ‘ஏ’ காரம் ஈற்றசை. 81 | 1687. | ‘ “அறுத்தாய் கணையால் எனவே, அடியேன்தன்னை, ஐயா! கறுத்தே அருளாய், யானோ கண்ணின் கண்டேன் அல்லேன், மறுத் தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்; பொறுத்தே அருள்வாய்!” என்னா, இரு தாள் சென்னி புனைந்தேன். |
‘ஐயா! - ஐயனே; கணையால் அறுத்தாய் எனவே - (என் மகனை) அம்பால்எய்து அழித்தாய் என்று; அடியேன் தன்னை - அடியேனை; கறுத்தே அருளாய் -கோபித்து விடாமல் இருப்பாயாக; மறுத்தான் இல்லான் - களங்கம் சிறிதும் இல்லாதவனாயநின்மகன்; வனம் மொண்டிடும் ஓதையின் - நீரை முகக்கின்ற ஓசையினால்; எய்தது அலால் - அம்பு எய்தது அல்லாமல்; யானோ கண்ணில் கண்டேன் அல்லேன் - யான்கண்ணால் பார்த்து (அம்பு எய்தேன் அல்லேன்); பொறுத்து அருள்வாய்’ - (இந்த எனதுபிழையைப்) பொறுத்தருள்வாயாக; என்னா - என்று; இரு தாள் - (அம்முனிவனது) இரு திருவடிகளையும்; சென்னி புனைந்தேன் - (விழுந்து வணங்கி) என் தலைமேல் சூடிக்கொண்டேன். கறுத்தல்- கோபித்தல். “கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள்” (தொல். சொல்.372.) என்பது காண்க. அருளுதல் துணைவினை. கறுத்தருளாய் என ஒன்றாக்குக. பெரியோர் செயலைச்சொல்லும் இடத்து ‘அருளாய் ’ எனும் சொல் வரும். அருளாய் என்பதில் ஆகாரம் எதிர்மறை. 82 | 1688. | ‘வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; “விழி போயிற்று, இன்று” என்றார்; ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; “ஐயா! ஐயா!” என்றார்; “போழ்ந்தாய் நெஞ்சை” என்றார்; “பொன்நாடு அதனில் போய், நீ வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே.” |
|