பக்கம் எண் :

240அயோத்தியா காண்டம்

  கூனீயும் அல்லால்,
     கொடியார் பிறர் உளரோ? -
மேனீயும் இன்றி,
     வெறு நீரே ஆயினார்.

     ‘ஞானீயும் உய்கலான்’ என்னாதே - உலகில் பிறந்தார்க்குப் பிரிவும்
சிறப்பும் இயல்பானவை என்பதைத் தெளிய உணர்ந்த ஞானியும்கூட இராமன்
பிரிவால் பிழைக்க மாட்டான் என்று கருதாமல்;  நாயகனைக் ‘கான் ஈயும்’
என்று உரைத்த கைகேசியும்
- தன் கணவனைப் பார்த்து  (இராமனுக்குக்)
காட்டைக் கொடும்  என்று  சொல்லிய கைகேயியும்; கொடிய கூனீயும்
அல்லால்
- அவளுக்குத் துர்ப்போதனை செய்த கூனியும் தவிர;  பிறர்
கொடியார் உளரோ?
- வேறு யாரேனும் மிகக் கொடியவர்கள்
இருக்கின்றார்களோ  (மற்றவர்கள் அனைவரும்);  மேனீயும் இன்றி -
உடம்பும்  இல்லாமல்;  வெறு நீரே ஆயினார் - வெறுமைத் தன்மை
அடைந்தவர் ஆயினர்.

     ‘கான் ஈயும் ’ என்பதற்கு ஏற்ப,  ஞானி,  கூனி,  மேனி என்ற
இகரங்கள் நீண்டன எதுகை நயம் பற்றி. ‘ஞானியே உய்கலான்’ என்றால்
மற்றவர் நிலை சொல்லவேண்டுவதில்லை என்றபடி.

1705.

தேறாது  அறிவு அழிந்தார்
     எங்கு உலப்பார்? தேர் ஓட
நீறு ஆகி,  சுண்ணம்
    நிறைந்த தெரு எல்லாம்,
ஆறு ஆகி ஓடின
    கண்ணீர்;  அரு நெஞ்சம்
கூறு ஆகி ஓடாத
    இத்துணையே குற்றமே.

     (இராமனது பிரிவால்) தேறாது - தெளியாமல்;  அறிவு அழித்தார் - அறிவு நீங்கப் பெற்றவர்கள்;  எங்கு உலப்பார்? - எவ்விடத்து எந்நிலைமையால் கணக்கில் அடங்குவர்;  தேர்  ஓட நீறு ஆகிச் சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் - தேர் ஓடுவதனால் புழுதி ஆகி மண் பொடி நிறைந்திருந்த தெருக்களில் எல்லாம்;  கண்ணீர் - மக்கள் அழுத கண்ணீர்;  ஆறு ஆகி ஓடின - ஆறு போலச் சென்று ஓடின;  அரு நெஞ்சம் - அவர்களது  அரிய மனம்;  கூறு ஆகி ஓடாத இத் துணையே குற்றம் - பிளந்து  பிரிந்து  நீங்காத இவ்வளவே குற்றம்.

     துயரத்தால் அறிவு மயங்கியவர்கள் கணக்கில் அடங்கார் என்பதை ‘எங்கு உலப்பார்’ என்று குறித்தார். புழுதி நிறைந்த தெரு ஆறாகிவிட்டது  என்றால் கண்ணீரின் பெருக்கத்தை அறிய முடிகிறது.  நெஞ்சம் பிளந்து  ஓடியதைப் பார்க்க முடியவில்லையே தவிர மற்றவை எல்லாம் நடந்து  முடிந்துவிட்டன என்பார் இத்துணையே குற்றம் ’ என்றார்.   ‘ஏ’ காரம் ஈற்றசை.                                              100