இராமன் அவ்வாறு செல்வதே நலம் என்று ஏற்றுக்கொள்ள, இருவரும் அங்கங்கே தேடிச் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு காற்றுப் போலவும் காற்றாடி போலவும் சென்று கொண்டிருந்தபொழுது இந்திரவில் முறிந்து கிடப்பது போலவும், கடலில் ஓங்கி எழுகின்ற அலை போலவும் முறிந்து கிடந்த வலிமை உள்ள வில் ஒன்றைக் கண்டார்கள். படி - நிலம், கால் - காற்று கறங்கு - காற்றாடி, மாடு - பக்கம்; கால் மாடு தலைமாடு என்ற பேச்சு வழக்கை எண்ணுக. இராமலக்குவர் பல்வேறு இடங்களிலும் சுற்றித் துருவித் துருவிப் பார்த்துக் கொண்டு செல்வதால் அவர்களுக்குக் காற்றும் கறங்கும் உவமையாயின. தேடிச் சென்றவர் இருவர் ஆகையால் இரண்டு உவமை அமைந்தது எனலுமாம். இராவணனது முறிந்து கிடந்த வில்லுக்கும் இரண்டு உவமைகள் வந்துள்ளமை காண்க. விண்ணிடு வில் முறிதல் அவனது வில் முறிந்து கிடத்தலுக்கும், கடலின் மாடு உயர் திரை என்பது கடல் மட்டத்திற்கு மேல் உயர்ந்து வரும் அலைகள் போல நில மட்டத்தில் இருந்து அவ்வில் உயர்ந்து கிடந்தது என்பதையும் காட்டவே கம்பர் இவ்வுவமைகளை இரண்டாக அமைத்துள்ளார் என்க. 84 | 3487. | 'சிலை கிடந்ததால், இலக்குவ! தேவர் நீர் கடைந்த மலை கிடந்தென வலியது; வடிவினால் மதியின் கலை கிடந்தன்ன காட்சியது; இது கடித்து ஒடித்தான்; நிலை கிடந்தவா நோக்கு' என, நோக்கினன் நின்றான். |
இலக்குவ - இலக்குவனே; சிலை கிடந்ததால் - (இங்கே ஒரு) வில் கிடக்கின்றது; தேவர் நீர் கடைந்த மலை கிடந்தென வலியது - (அவ்வில்) தேவர்கள் பாற்கடலைக் கடையப் (பயன்படுத்திய) மந்தர மலை நிலத்தில் கிடப்பது போல வலிமை உடையது; வடிவினால் மதியின் கலை கிடந்தன்ன காட்சியது - வடிவத்தால் பிறைச் சந்திரன் போன்ற காட்சி அமைப்புக் கொண்டது; இது கடித்து ஒடித்தான் - இவ்வில்லை தன் மூக்கால் கொத்தி ஒடித்திட்டவன் ஆகிய (சடாயுவினது); நிலை கிடந்தவா நோக்கு என - வலிமை இருந்த தன்மையைப் பார் என்று; நோக்கினன் நின்றான் - (இராமன் அவனது தன்மைகளைப் பற்றி) எண்ணிக் கொண்டு நின்றான். தொடர்வதே நலம் எனத் தொடர்ந்து சென்ற இராமலக்குவர், வழியில் மந்தர மலையைப் போலவும், பிறைச் சந்திரனைப் போலவும் காணப்பட்ட வில் ஒன்று கிடந்ததைக் கண்டனர். அதைக் கண்ட இராமன் அவ்வில்லை ஒடித்திட்டவனாகிய சடாயுவினது வலிமையைப் பற்றி எண்ணிக் கொண்டு நின்றான். மலை - மந்தரம். வில்லின் வலிமைக்கு மந்தர மலையும் வடிவத்துக்குப் பிறைச் சந்திரனும் உவமை என்க. நீர் - கடலுக்கு ஆகுபெயர். இங்கு இலக்கணையால் பாற்கடலைக் குறித்தது. 85 |