பக்கம் எண் :

630ஆரணிய காண்டம்

3488. நின்று, பின்னரும் நெடு நெறி
     கடந்து, உற நிமிரச்
சென்று நோக்கினர்; திரி
     சிகைக் கொடு நெடுஞ் சூலம்
ஒன்று, பல் கணை மழை
     உறு புட்டிலோடு இரண்டு
குன்று போல்வன கிடந்த கண்டு
     அதிசயம் கொண்டார்.

    நின்று - (அவ்வாறு எண்ணிக் கொண்டு) நின்று; பின்னரும்
நெடுநெறி கடந்து -
(அதற்குப்) பின்பு நீண்ட வழியைக் கடந்து; நிமிர
உறச் சென்று -
நேராக (தெற்கு திசையில்) நீண்ட தூரம் சென்று; திரி
சிகைக் கொடு நெடுஞ்சூலம் ஒன்று -
மூன்று தலையை உடைய
கொடுமையான பெரிய சூலம் ஒன்றினையும்; பல்கணை மழை உறு
புட்டிலோடு இரண்டு -
பல அம்புகளின் தொகுதி நிறைந்துள்ள
அம்பறாத்தூணியாகிய இரண்டினையும்; குன்று போல்வன கிடந்த கண்டு
-
மலைகள் போல் கிடந்தவற்றைக் கண்டு; அதிசயம் கொண்டார்
நோக்கினர் -
வியப்புக் கொண்டவர்களாய்ப் பார்த்தனர்.

     நீண்ட தூரம் தெற்கே நேராகச் சென்று முத்தலைச் சூலம், அம்பு
அறாத் தூணி ஆகியவை விழுந்து கிடந்ததைக் கண்டு வியப்போடு நோக்கி
நின்றனர். சிகை - தலை, உச்சி. மழை - தொகுதி. அந்தாதித் தொடை
காண்க.                                                     86

3489. மறித்தும் சென்றனர்; வானிடை
     வயங்குற வழங்கி
எறிக்கும் சோதிகள் யாவையும்
     தொக்கன எனலாம்,
நெறிக் கொள் கானகம் மறைதர,
     நிருதர்கோன் நெஞ்சின்,
பறித்து வீசிய, கவசமும்
     கிடந்தது பார்த்தார்.

    மறித்தும் சென்றனர் - மீண்டும் (தொடர்ந்து) சென்றனர்; வானிடை
வயங்குற வழங்கி -
வானத்தில் விளக்கம் உண்டாகும் படி சஞ்சரித்து;
எறிக்கும் சோதிகள் - ஒளி வீசுகிற சூரிய சந்திரர்கள்; யாவையும்
தொக்கன எனலாம் -
முதலிய எல்லாம் ஒருங்கே சேர்ந்தன என்று
சொல்லுமாறு; நெறிக் கொள் கானகம் மறைதர - செல்லும் வழி உடைய
காட்டு இடம் மறையுமாறு; நிருதர் கோன் நெஞ்சின் பறித்து வீசிய -
அரக்கர் தலைவனாகிய இராவணனின் நெஞ்சில் இருந்து (சடாயு) பறித்து
எறிந்திருந்த; கவசமும் கிடந்தது பார்த்தார் - கவசம் கிடந்ததையும்
(இராமலக்குவர் இருவரும்) கண்டார்கள்.