பக்கம் எண் :

632ஆரணிய காண்டம்

நிலத்தில் கிடந்தது போல; மணியின் குண்டலம் பல - மணிகள் பதிக்கப்
பெற்ற பல குண்டங்களும்; குலமணிப் பூண்களின் குவியல் - மிகுதியாக
மணிகள் பதிக்கப் பெற்ற அணிகலன்களின் மிகுதியையும்; கண்டு -
இராமலக்குவர் பார்த்து; அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் -
அசையும் தன்மை உள்ள தங்கள் கைகள் (வியப்பினால் தோன்றி
அச்சத்தால்) நடுங்க நின்றார்கள்.

     உலக ஊழிக் காலத்தில் ஒளி விளங்குகிற சூரிய மண்டலம் தனக்கு
உரிய இடமாகிய வானத்தை விட்டு நீங்கி நிலத்தில் கிடப்பது போல்,
மணிகள் பதிக்கப் பெற்ற குண்டலங்களும் அணிகலன்களும் மிகுதியாகக்
கிடப்பவை கண்டு இராமலக்குவர் மலர்க்கரம் விதிர்ப்புற்றார்கள்.
அலங்குதல் - அசைதல் அலங்குளைப் புரவி (புறநானூறு 2) என்ற வழக்குக்
காண்க, விதிர்த்தல் - நடுங்குதல்.                                    89

இராமன் 'பொருதவர் பலர்" எனல்

3492.'தோள் அணிக் குலம் பல
     உள; குண்டலத் தொகுதி
வாள் இமைப்பன பல உள;
     மணி முடி பலவால்;
நாள் அனைத்தையும் கடந்தனன்,
     தமியன், நம் தாதை;
யாளி போல்பவர் பலர் உளர்
     பொருதனர்; இளையோய்!

    இளையோய் - இளையவனே; தோள் அணிக்குலம் பல உள -
தோள் வளைகளின் தொகுதி மிகுதியாகக் கிடக்கின்றன; வாள் இமைப்பன
குண்டலத் தொகுதி பல உள -
ஒளி விடுவனவாகிய காதணிகளின்
தொகுதிகள் மிகுதியாக உள்ளன; மணிமுடி பலவால் - மணிகள் பதிக்கப்
பெற்ற முடிகள் பல விழுந்து கிடக்கின்றன; நாள் அனைத்தையும்
கடந்தனன் தமியன் நம் தாதை -
நீண்ட நாட்கள் (வாழ்ந்து)
கழித்தவனும், துணையற்றவனுமாகிய நமது தந்தை (சடாயு); பொருதனர் -
போர் செய்தோர்; யாளி போல்பவர் பலர் உளர் - சிங்கம் போன்ற (வீரர்)
பலர் உளர் போலும் (என்று இராமன் இலக்குவனை நோக்கிக் கூறினான்).

     தோள் வளையங்களும், காதணிகளும் மணமுடிகளும் பல சிந்தி
விழுந்து கிடப்பதால் வயதான, துணையில்லாத நம் தாதையாகிய
சடாயுவுடன் பொருதவர் பலர் போலும் என்று இராமன் இலக்குவனிடம்
கூறினான். வாள் - ஒளி. நாள் அனைத்தையும் கடந்தனன் - மிக மிக
வயதானவன்,                                                 90

'பொருதவன் இராவணன் ஒருவனே' என இலக்குவன் கூறல்

3493. திருவின் நாயகன் உரைசெய,
     சுமித்திரை சிங்கம்,