பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 641

மயிலை - அழகிய பேச்சினிமை உடைய மயில் போன்ற சாயல்
கொண்டவளும்; அருந்ததியை - அருந்ததி போன்ற கற்பு நிலை
உள்ளவளும் ஆகிய சீதையை; நீங்கினிரோ - (பர்ண சாலையில் தனியாக
விட்டுவிட்டுப்) பிரிந்து போய் விட்டீர்களோ?; என்று உரைத்தான் - என்று
(சடாயு) கூறினான்.

     'இராவணன் சீதையைத் தூக்கி வந்தது சூழ்ச்சியால்தான் இருக்க
வேண்டும் என்று என் மனம் கருதியது. எனினும், நீவிர் இருவரும் கற்பின்
கொழுந்தைத் தனியே விட்டு விட்டுப் போய் வீட்டீர்களோ?' என்று சடாயு
கேட்டான். நீங்கினிரோ - தந்தை என்ற உறவு முறை கருதிக் கூறிய கடுஞ்
சொல் என்க. நீங்கள் சீதையைத் தனியாக விட்டு விட்டுச் சென்றது
தெரிந்திருந்தால் நான் சற்று விழிப்பாக இருந்து இருப்பேன் என்பது குறிப்பு.
இதனை

     வார்ப் பொற் கொங்கை மருகியை மக்களை
    ஏற்பச் சிந்தனையிட்டு,-அவ் அரக்கர்தம்
    சீர்ப்பைச் சிக்கறத் தேறினன்-சேக்கையில்
    பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் (2731)

என்ற சடாயு காண்படலப் பாடல் உறுதி செய்வதை எண்ணுக. நினைவித்தது
- நினைத்தது. பிறவினை தன் வினைப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மயில், அருந்ததி - உவமை ஆகுபெயர்கள்.                       103

கலிவிருத்தம்

3506. என்று அவன் இயம்பலும்,
     இளைய கோமகன்,
ஒன்றும் ஆண்டு உறு
     பொருள் ஒழிவுறாவகை,
வன் திறல் மாய மான்
     வந்தது ஆதியா
நின்றதும், நிகழ்ந்ததும்,
     நிரப்பினான் அரோ.

    என்று அவன் இயம்பலும் - என்று அச்சடாயு கூறிய உடனே;
இளைய கோ மகன் - தசரதனின் மக்களில் இளையவனான (இலக்குவன்);
ஆண்டு உறுபொருள் ஒன்றும் ஒழிவுறா வகை - அந்த இடத்தில் நடந்த
செயல்களில் ஒன்றையும் விட்டு விடாதபடி; வன்திறல் மாயமான் வந்தது
ஆதியா -
மிக்க வலிமை உடைய மாயமான் வந்தது முதலாக; நின்றதும்
நிகழ்ந்ததும் -
நிகழ்ந்து நின்ற செயல்களை; நிரப்பினான் (அரோ) -
முழுதும் கூறி முடித்தான்.

     சடாயுவுக்கு இலக்குவன் மாய மான் வந்தது முதல் நடந்த
செயல்களை ஒன்று விடாது உரைத்தனன் என்க. அரோ - அசை. நின்றதும்
நிகழ்ந்ததும் என்பதை