பக்கம் எண் :

648ஆரணிய காண்டம்

இன்று பட்டது - இச் செயல் இன்று நடந்தது; என்றான் - என்று (சடாயு
இராமனிடம்) கூறினான்.

     வடு - மாவடு. வார் - நீண்ட; வார் கூந்தல் - பண்புத் தொகை.
கூந்தலாள் - குறிப்பு வினையாலணையும் பெயர். எடுத்தனன் - முற்றெச்சம்,
ஆவது எல்லாம் - ஒருமை பன்மை மயக்கம்.                      113

இராமன் சீற்றம்

3516. கூறின மாற்றம் சென்று
     செவித்தலம் குறுகாமுன்னம்,
ஊறின உதிரம், செங் கண்;
     உயிர்த்தன, உயிர்ப்புச் செந் தீ;
ஏறின புருவம் மேல்மேல்; இரிந்தன
     சுடர்கள் எங்கும்;
கீறினது அண்டகோளம்; கிழிந்தன
     கிரிகள் எல்லாம்.

    கூறின மாற்றம் - (சடாயு) கூறிய சொற்கள்; சென்று செவித் தலம்
குறுகாமுன்னம் -
சென்று (இராமனது) காதினிடத்துச் சேருவதற்கு முன்பு;
செங்கண் உதிரம் ஊறின - (முன்பே) சிவந்த கண்களில் குருதி ஊறிச்
சொரிந்தன; உயிர்ப்புச் செந்தீ உயிர்த்தன - பெருமூச்சாகிய சிவந்த தீ
வெளிப்பட்டன; புருவம் மேல் மேல் ஏறின - புருவங்கள் மேலும் மேலும்
மேலே ஏறின; சுடர்கள் எங்கும் இரிந்தன - (கதிரவன் முதலிய) சுடர்கள்
எங்கும் அஞ்சி ஓடின; அண்ட கோளம் கீறினது - அண்டமாகிய
உருண்டை பிளவுபட்டது; கிரிகள் எல்லாம் கிழிந்தன - மலைகள் எல்லாம்
உடைபட்டன.

     செம்பொருளே சினந்தால் சிதறாவோ எவையும் எங்கும்! கவிதை நெறி
அறிந்தோர் இதனை வெறும் உயர்வு நவிற்சி எனக் கொண்டமையார்.    114

3517. மண்ணகம் திரிய, நின்ற மால்
     வரை திரிய, மற்றைக்
கண் அகன் புனலும் காலும்
     கதிரொடும் திரிய, காவல்
விண்ணகம் திரிய, மேலை
     விரிஞ்சனும் திரிய, வீரன்,
எண் அரும் பொருள்கள்
     எல்லாம்' என்பது தெரிந்ததுஅன்றே?

    மண்ணகம் திரிய - நிலவுலகம் (தன் நிலை கெட்டுச்) சுழல; நின்ற
மால் வரை திரிய -
அசையாது நிற்கும் பெரிய மலைகள் சுழல; மற்றை -
மற்றும்; கண் அகன் புனலும் - இடமகன்ற (கடல்) நீரும்; காலும் -