காற்றும்; கதிரொடும் திரிய - கதிரவன் நிலவு உடன் சுழல; காவல் விண்ணகம் திரிய - தேவர்கள் காக்கும் மேல் உலகம் சுழல; மேலை விரிஞ்சனும் திரிய - மேல் உலகில் உள்ள பிரமனும் சுழல; வீரன் - வீரனாகிய இராமன்; எண் அரும் பொருள்கள் எல்லாம் என்பது - தான் எண்ண முடியாத உலகப் பொருள்கள் எல்லாவற்றின் வடிவமாக உள்ளவன் என்பது; தெரிந்தது அன்றே - நன்கு விளங்கியது. அனைத்தும் அவனான படியினாலே அவன் மனநிலை மாறிச் சினந்தவுடன் அனைத்துப் பொருள்களும் நிலை திரிந்தன என்றபடி. கால் - காற்று, விரிஞ்சன் - பிரமன், மால்வரை - உரிச்சொல் தொடர், ஐ - சாரியை, அன்றே - ஏகாரம் தேற்றம். 115 | 3518. | 'குறித்த வெங் கோபம் யார்மேல் கோளுறும்கொல்?' என்று அஞ்சி, வெறித்துநின்று, உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை, பொறிப் பிதிர் படலை, செந் தீப் புகையொடும் பொடிப்ப 'பொம்' என்று எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான்: |
குறித்த வெங்கோபம் - (இராமன் மனத்தில்) கொண்ட கொடிய சினம்; யார் மேல் கோளுறுங் கொல் - யாவர் மேல் செலுத்தப்படும் கொல்; என்று அஞ்சி - என்று எண்ணி அஞ்சி; உலகம் எல்லாம் - உலகங்கள் எல்லாம்; வெறித்து நின்று - திகைப்படைந்து நின்று; விம்முறுகின்ற வேலை - கலங்குகிற நேரத்தில்; பொறிப் பிதிர் படலை - பொறிகளின் தொகுதி; செந்தீப் புகையொடும் பொடிப்ப - சிவந்த நெருப்பு புகையுடன் தோன்றும் படி; எறிப்பது ஓர் முறுவல் பொம் என்று தோன்ற - ஒளி விடுவதான ஒப்பற்ற புன்சிரிப்பு பொம் என்று தோன்ற; இராமனும் இயம்பல் உற்றான் - இராமனும் சில கூறத் தொடங்கினான். இராமனது சினம் யார் மேல் செல்லுமோ என அனைத்துலகும் திகைத்து நின்ற நிலையில், செந்தீப் புகையொடு எழ அவன் வெகுளி கொண்டு புன்முறுவல் பூத்துக் கூறலானான் என்பதாம். கோளுறுதல் - செல்லுதல். வெறித்து - திகைத்து. படலை - கொழுந்துத் தொகுதி. பொம் - ஒலிக் குறிப்பு; பிதிர்தல் - சிதறல். கொல் - ஐயப் பொருள் தருவதோர் இடைச்சொல். உலகம் - இடவாகுபெயர். 116 | 3519. | 'பெண் தனி ஒருத்திதன்னை, பேதை வாள் அரக்கன் பற்றிக் கொண்டனன் ஏக, நீ இக் கோளுற, குலுங்கல் செல்லா |
|