| 3524. | 'நாள்செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல் தோள் செய்த வீரம் என்னில் கண்டனை; சொல்லும் உண்டோ? தாள் செய்ய கமலத்தானே முதலினர், தலை பத்து உள்ளாற்கு ஆட் செய்கின்றார்கள்; அன்றி, அறம் செய்கின்றார்கள் யாரே? |
நாள் செய்த கமலத்து அண்ணல் - அன்று மலர்ந்த செந்தாமரை மலரில் தோன்றிய தலைவனான பிரமன்; நல்கிய - தந்த (வரத்தினால் பெற்ற); நவை இல் ஆற்றல் - குற்றம் இல்லாத வலிமை உடைய; தோள் - தோளினால்; செய்த வீரம் - (இராவணன்) செய்த வீரச் செயலை; என்னில் கண்டனை - (சிறகு அறுபட்டு வீழ்ந்த நிலையில்) என்னிடத்தில் (நேரடியாகக்) கண்டாய்; சொல்லும் உண்டோ? - (அவ்வீர ஆற்றல் பற்றி வேறு) சொல்ல வேண்டுவதும் உள்ளதா?; தாள் செய்ய கமலத்தானே முதலினர் - நாளத்தொடு உள்ள செந்தாமரை மலரில் தோன்றிய பிரமன் முதலிய தேவர்கள்; தலை பத்து உள்ளாற்கு - தலை பத்து உள்ள இராவணனுக்கு; ஆட் செய்கின்றார்கள் - அடிமைத் தொழில் செய்கின்றார்கள்; அன்றி - அல்லாமல்; அறம் செய்கின்றார்கள் யாரே - (அவர்களின்) உரிய அறம் செய்கின்றவர்கள் யார்? என்றபடி (ஒருவருமில்லை என்பதாம்). ஆற்றல் மிக்க என்னையே சிறகு அறுபட்டு விழுமாறு செய்த இராவணனை எதிர்த்து வெல்லும் வலிமை பிரமனை முதலாகக் கொண்ட தேவர்களுக்கு இல்லையாம் படியினாலே, நீ அவர்கள் மீது சினம் கொள்ளாதே என்றவாறு. சினம் பொங்கினால் செயல் மங்கும் என்பது சடாயு கவலை நாள் செய்த கமலம் - அன்று மலர்ந்த செந்தாமரை, நவை - குற்றம், தாள் - நாளம், தண்டு, ஆட் செய்தல் - அடிமைத் தொழில் செய்தல், 122 | 3525. | 'தெண் திரை உலகம் தன்னில், செறுநர் மாட்டு ஏவல் செய்து பெண்டிரின் வாழ்வர் அன்றே? இது அன்றோ தேவர் பெற்றி! பண்டு உலகு அளந்தோன் நல்க, பாற்கடல் அமுதம் அந்நாள் உண்டிலர் ஆகில், இந்நாள் அன்னவர்க்கு உய்தி உண்டோ?' |
தெண்திரை உலகம் தன்னில் - தெளிந்த அலைகளை உடைய (கடலால் சூழப்பட்ட இந்த) உலகத்தில்; பெண்டிரின் - பெண்களைப் போல; செறுநர் மாட்டு ஏவல் செய்து - பகைவர்களாகிய (அரக்கர்களிடம்) ஏவல் |