| 8734. | வால் விசைத்து, கைந் நிமிர்த்து, வாயினையும் சிறிது அகல வகுத்து, மானக் கால் நிலத்தினிடை ஊன்றி, உரம் நெருக்கி, கழுத்தினையும் சுருக்கிக் காட்டி, தோல் மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப, விசைத்து எழுந்தான். அவ் இலங்கை, துளங்கிச் சூழ்ந்த வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம்போல், சுரித்து உலைய,-விசையத் தோளான். |
விசயத்தோளான் - வெற்றிபொருந்திய தோளை உடைய அனுமன்; வால்விசைத்து கைந்நிமிர்த்து வாயினையும் சிறிதகல வகுத்து - தன் வாலினை விசைத்துக் கொண்டு, வாயினையும் சிறிது விரிந்திருக்குமாறு செய்து கொண்டு; மானக்கால் நிலத்தினிடை ஊன்றி - பெருமைபொருந்திய கால்களை நிலத்தில் ஊன்றிக்கொண்டு; உரம் நெருக்கிக் கழுத்தினையும் சுருக்கிக் காட்டி-மார்பினை நெருக்கிக் கொண்டு, கழுத்தினையும் சுருக்கிக்காண்பித்து; தோல்மயிர்க்குந்தளம் சிலிர்ப்ப - தோலில் உள்ள மயிர்க்கூச்சுகள் சிலிர்க்க; அவ்விலங்கை துளங்கிச் சூழ்ந்த வேலையில்புக்கு அழுந்தியது மரக்கலம் போல்- அவ்விலங்கை, குலைந்து தன்னைச் சுற்றிய கடலில் நுழைந்து அழுந்தப்பெற்ற ஒரு கப்பலைப் போன்று; சுரித்து உலைய விசைத்து எழுந்தான் - சுழன்றுவருந்த விரைவுடன் கிளம்பினான். |