பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 667

பெருமான்   தங்கியுள்ள   கயிலை   மலையைக்   கண்டு    மகிழ்ச்சி
கொண்டான்.
 

                                                (43)
 

8746.

வட குண திசையில் தோன்றும், மழுவலான் ஆண்டு வைகும்
தட வரை அதனை நோக்கி, தாமரைக் கைகள் கூப்பி,
படர்குவான்தன்னை, அன்பால் பரமனும் விசும்பில்
                                   பார்த்தான்;
தட முலை உமைக்குக் காட்டி, ‘வாயுவின் தனயன்’ என்றான்.
 

வடகுண திசையில்  தோன்றும்   -   வடகிழக்குத்     திசையில்
தோன்றுகின்றதும்;  மழுவலான்  ஆண்டு  வைகும்  - மழுப்படையை
உடைய  சிவபெருமான்   தங்கி இருப்பதும் ஆகிய; தடவரை அதனை
நோக்கி    தாமரைக்  கைகள்  கூப்பி
  -   பெரிய   மலையினை
(கயிலையை)ப்பார்த்துத்    தாமரை  போலச் சிவந்த கைகளைக் குவித்து
வணங்கி; படர்குவான்   தன்னை  அன்பால்  பரமனும்  விசும்பில்
பார்த்தான்
 - செல்லுகின்ற அனுமனைப் பெருமையிற்  சிறந்தவனாகிய
சிவபரம்  பொருளும் விரும்பிப் பார்த்து; தடமுலை உமைக்குக் காட்டி
‘வாயுவின்   தனையன்’  என்றான்
 -  பருத்த  தனங்களை உடைய
உமாதேவிக்குக் காண்பித்து, ‘வாயுதேவனுடைய மகன் அனுமன்’   என்று
கூறினான்.
 

வடகுணதிசை     ஈசான்யம். இதற்குரிய தெய்வம் சிவாம்சம்  பெற்ற
ஈசானன். மழு-எரியீட்டி. இதனைத் தாருகாவனத்து  முனிவர்கள்   தமது
ஆபிசார   யாகத்தால்   தோற்றுவித்து   அனுப்ப  அதனைச்   சிவன்
வலக்கரம் ஏற்றனன் என்பது புராணம்.
 

                                                (44)
 

                           உமையின் வினாவும், ஈசனது உரையும்
 

8747.

‘என்,  இவன் எழுந்த  தன்மை?’  என்று,  உலகு  ஈன்றாள்
                                           கேட்ப,
‘மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர்
தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நன்னுதல்! நாமும் வெம் போர் காணுதும், நாளை என்றான்.