பக்கம் எண் :

774யுத்த காண்டம் 

அனைத்தின் அழகான உறுப்புகளை ஒன்று சேர்த்து ஒருபெண்
வடிவத்தை   உருவாக்கி,   திலோத்தமை   என்று  பெயர் இட்டு
அவர்கள்   முன் அனுப்பினார்.   கள்ளுண்டு களித்துத்  தம்மை
மறந்து   மயங்கிய   நிலையில்   இவளைக்  கண்டு   காமமுற்று
ஒவ்வொருவரும்    ஒவ்வொரு   கைகளைப்   பற்றி   இழுக்கத் 
தொடங்கினர். தனக்கே உரியவள் என்று வாதிட்டனர். அண்ணன்
மனைவி தம்பிக்கு தாயன்றோ   என சுந்தனும்,   தம்பி மனைவி
அண்ணனுக்கு    மகள்   அன்றோ   என   உபசுந்தனும் கூறி
ஒருவரையொருவர்   எதிர்த்தனர்.   போரிட்டுக்    கொண்டனர்.
இருவரும் ஒருவர் ஒருவரால் அழிந்தனர்.
 

44. ''நஞ்சுவரு மிடற்று அரவுக்கு அமிழ்து நனி 

கொடுத்து ஆயைக் கலுழன் நண்ணும்'' என்பதில் 

அடங்கியுள்ள வரலாறு (4471)
  

காசியப முனிவருக்கு இரண்டு மனைவியர். ஒருத்தி விநதை.
மற்றொருத்தி கத்துரு. இவர்கள் இருவரும் ஒருநாள் வானத்தில்
சென்ற   உச்சைச்சிரவம்  என்ற   தேவலோக   குதிரையைக்
கண்டனர். விநதை அதன்  வாலின் நிறம் வெண்மை என்றாள்.
கத்துரு கருமை  என்றாள். இருவர்க்கும் போட்டியும் பகையும்
முற்றியது.   கத்துரு தன் மக்களாகிய   கருநாகங்களை  ஏவி
அக்குதிரையின் வாலைச் சுற்றிக்கொள்ளச் செய்து போட்டியில்
வென்றாள்.   எனவே போட்டியின்படி   விநதை கத்துருவிற்கு
அடிமையானாள்.   விநதையின் புதல்வன்    கருடன். எனவே
கருடனும்   விநதையும் கத்துருவையும் அவள் புதல்வர்களான
நாகங்களையும் சுமக்க  வேண்டியவராயினர். கருடனும் அவள்
தாயும் அடிமை விலக்கம்   பெற வேண்டுமானால் தேவருலக
அமிர்தம் கொணர்ந்தாக வேண்டும் எனக் கருநாகங்கள் கூறின.
அதன்படி   கருடன் சென்று அசுரர்களை   வென்று அமிர்தம்
கொணர்கையில்   தேவேந்திரனிடம்   இந்த  அமிர்தத்தை  நீ
தந்திரமாக திரும்ப எடுத்துவந்து விடு என வழியும் சொன்னான்
கருடன்.   அமிர்தத்தைக் கொணர்ந்து   தர்ப்பைப்   புல் மீது
வைத்துப் பாம்புகள் மகிழ்ந்தன. கத்துருவும், கலுழனும் அடிமை
விலக்குப்   பெற்றனர். தூயர்களாய்  வந்து உண்ணுதல் நல்லது
எனக் கலுழன் கூற  அவை குளிக்கப்   போனபோது இந்திரன்
அமிர்தத்தை  எடுத்துச் சென்று   விட்டான்.  வந்து   பார்த்த
பாம்புகள்   வருந்தி,  வைத்த இடத்தில் சிந்தியாவது இருக்கும்
என  எண்ணி தர்ப்பையை நக்கின. அவற்றின் நா இரண்டானது
தான் மிச்சம்.