10. நாடுகாண் காதை






70

வெயினிறம் பொறாஅ மெல்லியற் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவ மெனினே
மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச்
சண்பக நிறைத்த தாதுசோர் பொங்கர்

பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்
கையறு துன்பங் காட்டினுங் காட்டும்



66
உரை
71

       வெயில் நிறம் பொறாஅ மெல்லியற் கொண்டு - வெயிலின் தன்மையைப் பொறாத மெல்லிய இயல்பினையுடைய இவளைக் கொண்டு, பயில்பூந் தண்டலை படர்குவம் எனினே - மிக்க மலர்களையுடைய சோலையின்கண் செல்வோமாயின், மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை - நிலம் பிளக்க இறங்கிய வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுத்ததனாலாய குழிகளை, சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் - சண்பக மரங்கள் நிரப்பிய பூந்துகள் சோர்ந்த பழம் பூக்கள், பொய்யறைப் படுத்து - பொய்க் குழிப் படுத்தி, போற்றா மாக்கட்கு - பாது காத்துச் செல்லாத மக்களுக்கு, கையறு துன்பம் காட்டினும் காட்டும் - செயலறவாகிய துன்பத்தைக் காட்டுதலையும் செய்யும் ;
        நிறம் - தன்மை ; நிறமெனவே கொண்டு, அதனைக் கண்ணாற் பார்க்கவும் பொறாத எனலுமாம். பொங்கர் - பழம் பூ. கையறு துன்பம் - மீளாத் துன்ப மெனலுமாம். சண்பகம் நிறைத்த பொங்கர் பொய்யறைப் படுத்துக் காட்டும் என்க.