|
115
|
கம்புட் கோழியுங் கனைகுர னாரையுஞ்
செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும்
|
|
கம்புட் கோழியும் - சம்பங் கோழியும், கனைகுரல் நாரையும் - ஒலிக்கும் குரலினையுடைய
நாரையும், செங்கால் அன்னமும் - சிவந்த காலினையுடைய அன்னப்புள்ளும், பைங் காற்கொக்கும்
- பசிய காலினையுடைய கொக்கும், கானக் கோழியும் - கானாங் கோழியும், நீர்நிறக்
காக்கையும் -- நீரில் நீந்துமியல்புள்ள நீர்க்காக்கையும், உள்ளும் - உள்ளானும், ஊரலும்
- குளுவையும், புள்ளும் - கணந்துட்பறவையும், புதாவும் - பெருநாரையும், வெல்போர் வேந்தர்
முனையிடம்போல - வென்றி காணும் போரை வல்ல அரசரிருவர் பொருமிடம்போல, பல்வேறு குழூஉக்குரல்
பரந்த ஓதையும் - பலவாக வேறுபட்ட திறத்தான் ஒலிக்கும் மிக்க ஓசையும் ;
கானக்கோழி - காட்டுக்கோழி என்பாருமுளர்.
நிறம் - தன்மை. ஊரல் - நீர்மேலூர்வது ஆகலின் ஆகுபெயர் என்பர் அடியார்க்கு நல்லார்.
புதா - போதா என்பதன் விகாரம். வெல்போர், முனையிடம், வினைத்தொகை. குழூஉக்குரல்
பரந்த ஓசை - பல்வேறு கூட்டங்களின் குரல் பரந்து ஒன்றான ஓசையெனலுமாம். |
|