7. ஆய்ச்சியர் குரவை




1
              பாட்டு
 மாயவனது வருகையையும் குழலோசையையும் பாடுதல

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ ;


1
உரை
1

       "கன்று குணிலா ......... தோழீ" கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன் - வஞ்சத்தால் வந்துநின்ற ஆவின் கன்றினைக் குணிலாகக் கொண்டு அங்ஙனமே நின்ற விளவின் கனியை உதிர்த்த கண்ணன், இன்று நம் ஆனுள் வருமேல் - இற்றைப் பொழுது நம் வழிபாட்டால் நம் பசு நிரையிடத்து வருவானாயின், அவன் வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி - அவன் வாயினால் ஊதுகின்ற கொன்றைக் குழலின் இனிய இசையைக் கேட்போம் தோழீ ;

குணில் - குறுந்தடி. ஆனுள் : உள் ஏழுனுருபு ; மேல்வருவனவும் இன்ன. தோழீ கேளாமோ என்க. கேளாமோ. ஈரெதிர்மறை ஓருடன்பாடு; பின்வருவனவும் இன்ன.