7. ஆய்ச்சியர் குரவை



1
                   ஒன்றன் பகுதி    

கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள
மதிபுரையு நறுமேனித் தம்முனேன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார் ;


1
உரை
1

            ஒன்றன் பகுதி - ஒற்றைத் தாளத்தின் கூறு.

          "கதிர்திகிரி . . . . நரம்புளர்வார்" கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளாள் மதி புரையும் நறுமேனித் தம்முனோன் வலத்து உளாள் பொதி அவிழ் மலர்க் கூந்தற் பிஞ்ஞை - கட்டவிழ்ந்த மலரினைச் சூடிய கூந்தலையுடைய பின்னைதான் ஞாயிற்றைத் தன் கையிலுள்ள சக்கரப் படையான் மறைத்த கடல்போலும் நிறமுடைய கண்ணனுக்கு இடப் பக்கத்தும் திங்களை ஒத்த நறிய மேனியையுடைய அக் கடல் வண்ணன் முன்னோனாகிய பலதேவற்கு வலப் பக்கத்துமாக உள்ளாள் ; சீர் புறங் காப்பார் முதுமறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் - அவளது தாள வொற்றறுப்பைக் காப்பார் முதிய வேதத்தினை ஆராய்ந்த பழைய முறையானே நரம் பினைத் தடவி வாசிக்கும் நாரதனார் ;

         பிஞ்ஞை இடத்துளாள் வலத்துளாள் எனவும், நரம்புளர்வார் நாரதனார் புறங்காப்பார் எனவும் மாறுக. மறை - வேதத்தின் அங்கமாகிய சிக்கை ; இதனை நாரத சிக்கை என்பர். சிக்கை - இசைநூல்.