7. ஆய்ச்சியர் குரவை

2

மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார் ;


2
உரை
2

           "மயிலெருத் . . . . . . நரம்புளர்வார்" மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் பயில் இதழ் மலர் மேனித் தம் முனோன் இடத்து உளாள் கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை- சிறுபுறமாகிய பிடரை வளைத்து நின்ற நப்பின்னை ஆண்மயிலின் புறக் கழுத்தினை ஒத்த மேனியையுடைய மாயவன் வலப்பக்கத்துள்ளாள் ; மிக்க வெள்ளிய மலர்போலும் மேனியையுடைய அம் மாயவன் தமையனாகிய பலதேவன் இடப்பக்கத்துள்ளாள்; சீர் புறங் காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் - அவளுடைய தாளவறுதியைப் புறங்காக்கின்றவர் குயிலுவருள் இசை புணர்ந்திருக்கும் தாளவறுதியையுடைய நரம்பினை உருவி வாசிக்கும் நாரதனார் ;

கயிலாகிய எருத்தென்க; கயில் - பிடர். குயிலுவர் - தோற் கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, உருக்குக் கருவி இவற்றையுடையார். கொளை - இசை ; ஒற்றறுப்பு என்றுமாம்.