7. ஆய்ச்சியர் குரவை

2
அறுபொரு ளிவனென்றே யமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே யுலகடைய வுண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே


2
உரை
2

      "அறுபொருள்...........மருட்கைத்தே" அறுபொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே - தீர்ந்த பொருள் இவனே எனக் கொண்டு தேவர் கூட்டம் வணங்கிப் போற்ற நீ மிக்க பசி ஒன்று இல்லாது எல்லா உலகங்களையும் உண்டாய், உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் - அங்ஙனம் உலகமுண்ட வாய் களவின்கண் உறிக்கண் உள்ள வெண்ணெயை உண்ட வாயாகும், வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே - வளவிய துழாய் மாலையை உடையாய் இஃது ஒரு மாயமோ மிகவும் மருட்கையினை யுடைத்தாயிருந்தது;

      வண்டுழாய் மாலையாய் என்பதனை முதற்கண் உரைக்க. அறு பொருள் - தீர்ந்தபொருள் ; அறுதியிடப்பட்ட பொருள் ; இனி, இதற்கு ஐயமற்ற பொருள் என்றும், அறுவகைச் சமயத்தாரும் துணிந்த பொருள் என்றும் கூறுவாருமுளர். உறுபசி - உற்றபசியுமாம். அடைய - முழுவதும்.