7. ஆய்ச்சியர் குரவை



1
               படர்க்கைப் பரவல்

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ;


1
உரை
1

         படர்க்கைப் பரவல்-தாம் பரவும் பொருளைப் படர்க்கையிடத்து வைத்துப் பராவுதல்.

       "மூவுலகும்...செவியே" மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடிய - முறைப்பட்ட மூன்றுலகங்களும் இரண்டு அடிகட்கு நிரம்புந் தன்மையின்றி முற்றும் வண்ணம், தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து - தாவி அளந்த அச்சிவந்த அடிகள் நடத்தலாற் சிவக்கும் வண்ணம் தம்பியாகிய இலக்குவனோடுங் காட்டிற்குச் சென்று, சோ அரணும் போர் மடியத் தொல் இலங்கை கட்டழித்த - சோ வென்னும் அரணமும் அவ்வரணத்துள்ளாரும் போரின்கண் தொலையப் பழமையான இலங்கை நகரின் காவலினையும் அழித்த, சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே - வீரனுடைய புகழினைக் கேளாத செவி என்ன செவியாகும், திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே - அத் திருமாலினுடைய சிறப்பினைக் கேளாத செவி என்ன செவியாம்;

     ஈரடியான் - ஈரடிக்கு. நிரம்பாமை - குறைவுபடுதல். சோ என்பது ஓர் அரண்; அன்றி ஒரு நகர் எனவும் உரைப்ப. அரண் மடியவே அரணத்துள்ளார் மடிந்தமையும் உணரப்படும். கான் போந்து இலங்கை கட்டழித்த வென்க. கட்டழித்தல் - நிலை குலை வித்தலுமாம். செவி என்ன செவி என்றது தான் கேட்டற்குரியன கேட்டுப் பயன் பெறாத செவி என்றவாறாம் ; பின்வருங் கண் முதலிய வற்றிற்கும் இங்ஙனமே கொள்க. இனி, சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே என்பதற்குச் சேவகன் சிறப்பினைக் கேளாத செவியும் சில செவியே எனவுரைத்து, மண்ணினும் மரத்தினும் கல்லினும் செவியுண்டாகலான் இங்ஙனங் கூறினார் என்பர் அடியார்க்குநல்லார். பின்வருங் கண் முதலியவற்றிற்கும் இங்ஙனமே உரைப்பர்.

     உலகமளந்தானும் சோவரணை மடித்தானும் இலங்கை கட்டழித்தானும் திருமாலே யென்றார் .