7. ஆய்ச்சியர் குரவை

3

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாவென்னா நாவென்ன நாவே ;


3
உரை
3

        "மடந்தாழும் ......... நாவே" மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை - அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும், நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை - நான்கு திக்குகளிலும் உள்ளோர் யாவரும் போற்றவும் தன் பின்னே தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும் பாண்டவர் பொருட்டுத் துரியோதனாதியரிடம் தூதாக நடந்து சென்றோனும் ஆய கண்ணனை, ஏத்தாத நா என்ன நாவே - போற்றாநா எப் பயன் பெற்ற நாவாகும். நாராயணா என்னா நா என்ன நாவே - நாராயணா என்று கூறப் பெறாத நா என்ன பயன் பெற்ற நாவாகும்;

      தாழ்தல் - தங்கல். கஞ்சனார் - செறலின்கண் பால் மயக்கம். நாற்றிசை, ஆகுபெயர். படர்தல் -செல்லுதல்.

      இவை மூன்றும் படர்க்கைப் பரவல்.