2780. | 'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்; 'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால், அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்றான். |
வள்ளலும் - (அது கேட்ட) இராமனும்; நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் - இவள் எல்லோரும் பழிக்கத்தக்க அரக்கி என்பதுடன் நியாய நெறியில் நில்லாதவள்; மற்று வினை எண்ணி வந்தனள் ஆகும் என்றே மனத்துள் கொண்டான் - வேறு ஒரு தீவினையைச் செய்ய நினைத்து இங்கு வந்தாள் ஆக வேண்டும் எனவே மனத்தினுள் முடிவாகக் கருதியவனாய்; சுந்தரி - அழகிய பெண்ணே; யான் அரசரில் வந்தேன் - நான் மன்னர் குலத்தில் பிறந்தவன்; நீ அந்தணர் பாவை - நீயோ அந்தணர் குலத்தில் பிறந்த பெண்; மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்று என்றான் - மணம் புரியும் சாதிமரபு முறைக்கு ஏற்ற தொன்று தொட்ட ஒழுக்க நெறிக்கு உறுதி அளிப்பது அன்று என்று சொன்னான்; ஆல் - அசை. தன்னிடம் காமங் கொண்டு வந்தாள் என்பதை 'வினை மற்றெண்ணி' என இடக்கரடக்கில் எண்ணினான். இராமனுக்கு இப்போதுதான் சூர்ப்பணகை கருத்து நன்கு வெளிப்பட்டது. எனவே, நகைச்சுவை தோன்ற 'மரபிற்கு ஒத்த.. அன்று' எனவும் 'பிறப்பால் வேறுபட்டவர்' எனவும் இராமன் கூறுகிறான். பண்டைய மரபுப் படி மேற் குலப் பெண்ணை மணத்தல் கூடாது. அந்தணர் பாவை என்றது சூர்ப்பணகையின் புலத்தியர் வழி மரபைக் குறித்ததாகும். சுந்தரி என்ற விளி அழகி எனினும் மரபால் ஏற்கத்தக்கவள் அன்று என்பதைக் குறிக்கும். தொன்மை-பண்பாகு பெயர்-பழைய ஒழுக்கத்திற்கு ஆகி வந்தது. 49 |