504.

உமையாள் ஒக்கும் மங்கையர்`
   உச்சிக் கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர்.
   காட்சிக் கரை காணார்.
‘இமையா நாட்டம் பெற்றிலம்’
   என்றார்; ‘இரு கண்ணால்
அமையாது’ என்றார் - அந்தர
   வானத்தவர் எல்லாம்.
 

உமையாள் ஒக்கும் மங்கையர்- உமாதேவி போன்ற சிறப்புடைய
மாதர்களும்; உச்சிக் கரம் வைக்கும் - (தங்கள்) தலைமேல் கைகளை
வைத்து  வணக்கம் செய்வதற்குரிய;  கமையால் - பொறுமை முதலிய
நற்பண்புகளையுடைய சீதையின்; மேனி கண்டவர் - உடல் அழகைப்
பார்த்த மண்ணுலகத்தவர்; காட்சிக்  கரை காணார் - இந்த அழகின்
எல்லையை (முழுதும்) காணாமல்;  இமையா  நாட்டம்  - (நாங்கள்)
இமை    மூடப்பெறாத    கண்களை;   பெற்றிலம்    என்றார் -
பெறவில்லையே என்று   குறை  பட்டனர்;  அந்தரம்  வானத்தவர்
எல்லாம்
-  (இமையாத  கண்களைப்  பெற்றுள்ள)   வான்   உலகத்
தேவர்கள்  எல்லாரும்;  இரு  கண்ணால்   அமையாது  -  (இந்த
அழகைப் பார்க்க) நம்முடைய இரண்டு கண்களால் முடியாது; என்றார்
- என்று கூறி வருந்தினர்.   

மண்ணவர். விண்ணவர்: சீதையைப் பார்த்தவர்கள்அவளது  மேனி
யழகிற்கு  எல்லை  காண  முடியாது  வருந்தினார்கள்.  அவர்களிலே
நிலவுலகத்தவர்  தேவர்களைப்  போலத்  தமக்கு  இமையா  நாட்டம்
இல்லையே  என்று  வருந்தினர். ஆனால் அவ் வானத்தவரோ தமக்கு
இமையா  நாட்டம்  இருந்தும்  அவை  இரண்டாக அமைந்தமையால்
சீதையின்  அழகை  முற்றும்  ஒருங்கே பார்க்க அவை போதா என்று
குறைபட்டனர்.                                            25