27. கிருட்டிணன் தூதுச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும்
                  பிரியான் ஆகி,
சீர் படைத்த கேண்மையினால், தேர் ஊர்தற்கு இசைந்து
                  அருளும் செங் கண் மாலை,
பார் படைத்த சுயோதனற்கு, 'படை எடேன் அமரில்!'
                  எனப் பணித்த கோவை,
கார் படைத்த நிறத்தோனை, கை தொழுவார் பிறவு
                  ஆழிக் கரை கண்டாரே.

1
உரை
   


சஞ்சய முனி போனபின், கண்ணனைத் துரியோதனாதியரிடம்
தூது விட எண்ணிய தருமனது உரை

ஞானம் அன்பொடு இனிது உரைத்து, ஞானமுனி அகன்றதற்பின்,
                  சாம, பேத,
தான, தண்டம், என நிருபர் தருமம் முறைமையில் புகலும்
                  தகுதி நோக்கி,
தூ நறுந் தண் துளவோனைத் தூது விடுவதற்கு எண்ணி,
                  சுனைகள்தோறும்
ஏனல் அம் தண் கிரிப் பெருந் தேன் இறைக்கும் எழில்
                  குருநாடன் இயம்புவானே:

2
உரை
   


'செஞ்சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும்,
                  முன் சென்ற காலை,
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும்,
                  நீ அறிதி அன்றே;
நஞ்சுதனை மிக அருந்தி, நன் மருந்தும் மந்திரமும்
                  விரைந்து நாடாது,
எஞ்சினர் தங்களைப் போல இருக்குமதோ? யார் மனத்தும்
                  இருக்கும் சோதி!

3
உரை
   


தருமன் உரை கேட்டு, அவன் தம்பியரையும்
உடன் இருத்தி, 'உங்கள் நினைவு யாது?'

'அருஞ் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும்,
                  அறம் ஒன்று இன்றி,
பெருஞ் சமரம் விளைக்குமது கடன் அன்று' என்று, அருள்
                  வெள்ளம் பெருகக் கூறும்
பொரும் சமர நெடு முரசப் பூங்கொடியோன்தனை நோக்கி,
                  புயப் போர் வாணன்
இருஞ் சமரம் தொலைத்த பிரான் இளைஞரையும் உடன்
                  இருத்தி, இயம்புவானே:

4
உரை
   

'செய் வரால்இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ?
                  சென்று மீளப்
பைவராய், அருங் கானில் பயின்று திரிதர நினைவோ?
                  பகைத்த போரில்,
'உய்வர் ஆர்?' என, விரைவின் உருத்து, எழுந்து, பொர
                  நினைவோ? உண்மையாக
ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது?' என்று அருள்புரிந்தான்
                  அமரர் கோமான்.
5
உரை
   


'சந்து செய்தருள்!' எனத் தருமன் கண்ணனை வேண்டுதல்

'வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின்,
                  உயர் வரைக்காடு என்ன,
செயிர் அமரில் வெகுளி பொர, சேர இரு திறத்தேமும்
                  சென்று மாள்வோம்;
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் குருநாட்டில்
                  கலந்து, வாழ,
உயிர் அனையாய்! சந்துபட உரைத்தருள்!' என்றான்,
                  அறத்தின் உருவம் போல்வான்.

6
உரை
   

'குரவரையும், கிளைஞரையும், குலத்து உரிய துணைவரையும்,
                  கொன்று, போர் வென்று,
அரவ நெடுங் கடல் ஆடை அவனி எலாம் தனி
                  ஆளும் அரசுதன்னில்,
கரவு உறையும் மனத் தாதை முனிக்கு உரைத்த
                  மொழிப்படியே, கானம்தோறும்,
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து, உயிர் வாழ்தல்
                  இனிது, நன்றே!
7
உரை
   

'நீ தூது நடந்தருளி, எமது நினைவு அவர்க்கு உரைத்தால்,
                  நினைவின் வண்ணம்
தாது ஊதி அளி முரலும் தண் பதியும், தாயமும்,
                  தான் தாரான்ஆகில்,
மீது ஊது வளைக் குலமும் வலம் புரியும் மிக முழங்க,
                  வெய்ய காலன்
மா தூதர் மனம் களிக்க, பொருது எனினும், பெறுவன்;
                  இது வசையும் அன்றே.
8
உரை
   

'முந்து ஊர் வெம் பணிக் கொடியோன் மூதூரில் நடந்து,
           உழவர் முன்றில்தோறும்
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு; நாடு
           ஒன்றும் நல்கான்ஆகில்,
ஐந்து ஊர் வேண்டு; அவை இல் எனில், ஐந்து இலம்
           வேண்டு; அவை மறுத்தால், அடு போ வேண்டு:-
சிந்தூரத் திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த
           செங்கண் மாலே!'
9
உரை
   


வீமன் தருமன் உரையை வெறுத்துக் கூறுதல்


மூத்தோன் மற்று இவை உரைப்ப, இளையோன் வெஞ்
                  சினம் மனத்தில் மூளமூள,
நாத் தோம் இல் உரை பதற, கதுமென உற்று எழுந்து,
                  இறைஞ்சி, 'ஞாலம் எல்லாம்
பூத்தோனே! பூந் தவிசில் பூவை புணர் மணி மார்பா!
                  புன்மை யாவும்
தீர்த்தோனே! ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு
                  என் செய்வது?' என்றான்.

10
உரை
   

'விரி குழல் பைந்தொடி நாணி வேத்தவையில் முறையிடுநாள்,
                  'வெகுளேல்!' என்று,
மரபினுக்கும் நமக்கும், உலகு உள்ள அளவும், தீராத
                  வசையே கண்டாய்!
எரி தழல் கானகம் அகன்றும், இன்னமும் வெம் பகை முடிக்க
                  இளையாநின்றாய்!
அரவு உயர்த்தோன் கொடுமையினும், முரசு உயர்த்தோய்!
                  உனது அருளுக்கு அஞ்சினேனே!
11
உரை
   

'கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலிதன்
                  காதல் மைந்தன்
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடைக் கீழ் நீ
                  ஆளத் தருவன், இன்றே;
மேல்நாள், நம் உரிமை அறக் கவர்ந்த பெருந் துணைவன்,
                  உனை வெறாதவண்ணம்,
வான் ஆள, வானவர்கோன்தன் பதம் மற்று அவன்தனக்கே
                  வழங்குவேனே.
12
உரை
   

'போர் முடித்தான்; அமர் பாருது, புலம்புறு சொல்
                  பாஞ்சாலி பூந் தண் கூந்தல்
கார் முடித்தான்; இளையோர்முன் கழறிய வஞ்சினம்
                  முடித்தான்; கடவுள்-கங்கை
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய, வசை இன்றி,
                  நிலை நின்று ஓங்கும்
பேர் முடித்தான்; இப்படியே யார் முடித்தார்? இவனுடனே
                  பிறப்பதே நான்!
13
உரை
   

'அணிந்து வரும் சமரில் எதிர்ந்து, அரவு உயர்த்தோனுடன்
                  அரசர் உடலம் எல்லாம்
துணிந்து, இரண்டு படப் பொருது, தொல்லை உலகு அரசு
                  ஆளத் துணிவது அல்லால்,
தணிந்து, அறமும் கிளை உறவும் கொண்டாடி, தான் இன்னம்
                  தனித் தூது ஏவி,
பணிந்து, இரந்து, புவி பெற்று, உண்டிருப்பதற்கே
                  துணிகின்றான்; பட்ட பாடே!'
14
உரை
   


தருமன் அவனைக் கையமர்த்தி, சமாதானம் செய்தல்

பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர்க்கை
                  பணித்து, நோக்கி,
'குருகுலத்தோர் போர்ஏறே! குற்றமது பார்க்குங்கால்
                  சுற்றம் இல்லை;
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினைப்போல்
                  உறுதி உண்டோ?
இருவருக்கும் வசை அன்றோ, இரு நிலம் காரணமாக
                  எதிர்ப்பது?ன்றான்.
15
உரை
   

'உரிமையுடன் தம்பியர் அன்று, உணர்வு அறியாமையின்,
                  அவைக்கண் உரைத்த மாற்றம்
பரிபவமோ? கேட்டோர்க்குப் பரிபவம் என்பது பிறரால்
                  பட்டால் அன்றோ?
கருதில், இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? கண் மலரில்
                  கை படாதோ?
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே!' என
                  மொழிந்தான்-புகழே பூண்பான்.
16
உரை
   


வீமன் மீண்டும் போரையே வற்புறுத்தி மொழிதால்


'சூடுகின்ற துழாய் முடியோன், சுரருடனே முனிவர்களும்
                  சுருதி நான்கும்
தேடுகின்ற பதம் சிவப்ப, திரு நாடு பெறத் தூது
                  செல்ல வேண்டா;
வாடுகின்ற மடப்பாவைதன் வரமும், என் வரமும்,
                  வழுவா வண்ணம்,
கோடுகின்ற மொழியவன்பால், எனைத் தூது விடுக! இனி,
                  கொற்ற வேந்தே!
17
உரை
   

'மலை கண்டதென என் கைம் மறத் தண்டின் வலி
                  கண்டும், மகவான் மைந்தன்
சிலை கண்டும், இருவர் பொரும் திறல் கண்டும்,
                  எமக்காகத் திருமால் நின்ற
நிலை கண்டும், இவள் விரித்த குழல் கண்டும்,
                  இமைப்பொழுதில் நேரார்தம்மைக்
கொலைகண்டு மகிழாமல், அவன் குடைக் கீழ் உயிர்
                  வாழக் குறிக்கின்றாயே!'
18
உரை
   


கண்ணன் வீமனது கடுங் கோபத்தைத் தணித்தல்

வெம் புய வீமனும் வெகுண்டு, மீண்டும், இவை எடுத்து
                  உரைப்ப, மேக மேனிப்
பைம் பொன் நெடுந் தனித் திகிரிப் பரந்தாமன்,
                  கருணையுடன், பரிந்து நோக்கி,
'அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை
                  உரைத்தால், அது கேளாமல்,
தம்பியரும் மறுப்பரோ? தலைவ! இனிக் கடுங் கோபம்
                  தணிக!' என்றான்.

19
உரை
   


விசயனும் போரையே வற்புறுத்தி, 'தூது
பயன் படாது' என மொழிதல்

மைக் கால முகில் ஊர்தி வானவர்கோன் திரு மதலை
                  வணங்கி நின்று,
முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும்
                  மொழிவான் மன்னோ:
'அக் காலம் பொறுத்த எலாம் அமையாமல், இன்னம்
                  இருந்து அறமே சொன்னால்,
எக்காலம் பகை முடித்து, திரௌபதியும் குழல் முடிக்க,
                  இருக்கின்றாளே?

20
உரை
   

'தேவர்ஆயினும், பழைய தெயித்தியர் ஆயினும்,
                  மற்றும் செப்புகின்றோர்
யாவர்ஆயினும், எதிர்ந்தோர் உயிர் உண என்று
                  இருப்பதுவே, என் கை வாளி;
மூவர் ஆய், அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி!
                  முகில் தோய் பூக-
மீ வரால் உகளும் வயல் குரு நாடு, என், இவன்
                  அவன்பால் வேண்டுமாறே?
21
உரை
   

'தீண்டாத கற்புடைய செழுந் திருவைத் துகில் உரிய,
                  செயல் ஒன்று இன்றி,
"நீண்டானே! கரியானே! நிமலா!" என்று அரற்றினளாய்
                  நின்று சோர,
மாண்டார்போல், அது கண்டும், மன் அவையில் யாம்
                  இருந்த மாசு தீர
வேண்டாவோ? வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ?
                  வேந்தர் வேந்தே!
22
உரை
   

'பொன் ஆரும் திகிரியினான் போனாலும், பொறைவேந்தன்
                  புகன்ற எல்லாம்
சொன்னாலும், அவன் கேளான்; விதி வலியால் கெடு மதி
                  கண் தோன்றாது அன்றே!
எந் நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும்
                  விளைவு எய்திடாது;
பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழியப்
                  பயன் கொடாதே.'
23
உரை
   


நகுலனும், 'தூது பயன் இன்று' என்று உரைத்தல்

பார்த்தன் இவை புகன்று, இறைவன் பணித்தருள
                  இருந்ததற்பின், பரிவினோடும்
தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி, தருமனையும் கைதொழுது,
                  சினம் கொள் வேலான்,
' "நீத்த நெடுங் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர்"
                  எனும் நிகழ்ச்சி பொய்யோ?
கோத் தருமந்தனில் ஆண்மை கூறாதோ? கூறுக நீ!
                  கொற்ற வேந்தே!

24
உரை
   

'கேவலம் தீர் வலிய பகை கிடக்க, முதல் கிளர் மழைக்குக்
                  கிரி ஒன்று ஏந்து
கோவலன் போய் உரைத்தாலும், குருநாடும் அரசும்
                  அவன் கொடுக்கமாட்டான்;
நாவலம் பூதலத்து அரசர், "நாடு இரந்தோம்" என நம்மை
                  நகையாவண்ணம்,
காவலன்தன் படை வலியும், எமது தடம் புய வலியும்
                  காணலாமே!
25
உரை
   

'அன்ன நடை அரம்பைதனை அவுணர் கவர்ந்திட,
                  இமையோர் அரசுக்காக,
முன்னம் அவருடன் பொருது, சிறை மீட்டான், நம்
                  குலத்து முதல்வன் அன்றோ?
மன் அவையில் யாம் காண, மடவரலைத் துகில்
                  உரிந்த வலியோன்தன்பால்
இன்னம் இரந்து, அவன் குடைக்கீழ் இருந்தக்கால், நம்மை
                  உலகு என் சொலாதே!
26
உரை
   

"கானகம் போய்க் கரந்து உறைந்து, கடவ நாள்
                  கழித்ததற்பின், கானம் நீங்கி,
ஈனம் இலாவகை வந்தார், நம் துணைவர்" என, சிறிதும்
                  இரங்கான்ஆகில்,
மா நகரும் வள நாடும் உரிமையும் தன்
                  மொழிப்படியே வழங்கான்ஆகில்,
தான் அறியாதவன் பிறர் போய்க் கற்பித்தால்,
                  அறிவனோ?-தரணி வேந்தே!'
27
உரை
   


கண்ணன் வேண்ட, சகாதேவன் தன் கருத்தை உரைத்தல்

நகுலன் இவை உரைத்ததற்பின், 'நன்று!' எனக் கை
                  அமைத்தருளி, 'நகுலன் சொல்லும்,
இகல் விசயன்தன் மொழியும், திறல் வீமன் இயம்பியதும்,
                  யாவும் கேட்டோம்;
புகல் அரிய உணர்வு உடையோய்! புகழ் உடையோய்!
                  திறல் உடையோய்! புகல், நீ' என்ன,
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம்
                  உருக, மொழிகின்றானே:

28
உரை
   

'சிந்தித்தபடி நீயும் சென்றால் என்? ஒழிந்தால் என்?
                  செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால்
                  என்? வழங்கினால் என்?
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால்
                  என்? குறித்த செய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத்
                  தெரியுமோ?-ஆதி மூர்த்தி!
29
உரை
   

'முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று
                  அலகை முலைப்பால் உண்டு,
மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,
                  பொதுவர் மனை வளர்ந்த மாலே!
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான்
                  அறிவேன், உண்மையாக;
திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!'
                  என்றான், தெய்வம் அன்னான்.
30
உரை
   


'அந்தத்தில் முடியும் வகை யார்க்குத் தெரியும்?' என்ற,
சகாதேவனைக் கண்ணன் தனியிடம் கொண்டு சென்று, 'பாரதப்
போர் நிகழாதிருக்க உபாயம் என்?' எனல

இவ் வண்ணம் சாதேவன் இயம்புதலும், நகைத்தருளி,
                  'இகலோர் சொன்ன
அவ் வண்ணம் புகலாமல், விரகு உரைத்தான், இவன்!'
                  என்ன, அவனோடு ஆங்கு ஓர்
பை வண்ண மணிக் கூடம்தனில் எய்தி, 'பாரதப் போர்
                  பயிலா வண்ணம்
உய்வண்ணம் சொல்லுக, நீ உபாயம்' என, தொழுது
                  உரைப்பான், உரம் கொள் வேலான்;

31
உரை
   


சகாதேவன் உரைத்த உபாயம்

'நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,
மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?

32
உரை
   

'பார் ஆளக் கன்னன், இகல் பார்த்தனை முன்
                  கொன்று, அணங்கின்
கார் ஆர் குழல் களைந்து, காலில் தளை பூட்டி
நேராகக் கைப் பிடித்து, நின்னையும் யான் கட்டுவனேல்,
வாராமல் காக்கலாம் மா பாரதம்' என்றான்.
33
உரை
   


'நீ உரைத்தபடி யாவும் முடிப்பினும், என்னைக்
கட்ட இயலுமோ'' என்ற கண்ணனுக்கு, 'உன் வடிவு
காட்டின் இயலும்!' என்றான் சகாதேவன்

'முன்னம் நீ கூறியவை எல்லாம் முடித்தாலும்,
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு?'என மாயன்
'ன்னை நீதானும் உணராதாய்! உன் வடிவம்-
தன்னை நீ காட்ட, தளைந்திடுவன் யான்!'என்றான்.

34
உரை
   


கண்ணன் பல வடிவு கொள்ள, சகாதேவன் கருத்தினால்
மூலவடிவைப் பிணித்தல்

மாயவனும் அன்பன் மனம் அறிவான், 'கட்டுக!' என்று,
ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான்;
தூயவனும், மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து, எவ் உலகும்
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான்.

35
உரை
   


'பாதப் பிணிப்பை விடுக' என்று கண்ணன் கூற,
சகாதேவன் போரில் ஐவரையும் காக்க வரம் வேண்டுதல்

'நீ தேவன்!' என்று அறிந்து, நெஞ்சால் தனைக் கட்டும்
சாதேவன் கண் களிக்க, தானே ஆய், முன் நின்றான்-
பூதேவரும், கனகப் பூங்கா நிழல் வைகும்
மா தேவரும், தேடிக் காணா மலர் அடியோன்.

36
உரை
   

'அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று;
என் பாதம்தன்னை இனி விடுக!' என்று உரைப்ப,
'வன் பாரதப் போரில் வந்து அடைந்தேம் ஐவரையும்,
நின் பார்வையால் காக்க வேண்டும், நெடுமாலே!'
37
உரை
   


என்று என்று இறைஞ்சி, இரு தாமரைத் தாளில்
ஒன்றும் கதிர் முடியாற்கு, 'ஓம்!' என்று உரைத்தருளி,
'இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக!' என்றான்.

38
உரை
   


மீண்டு பாண்டவரை அடைந்த சகாதேவனும் கண்ணனும்,
'சந்து செய்தல் இனிது!' என்ன, பாஞ்சாலி அழுது,
கண்ணனிடம் முறையிடுதல்

ஆண்டு இருந்த அவை நீங்கி, அறிவுடையோர் இருவோரும்,
பாண்டவர்கள் முன் எய்தி, பழுது இல் புகழ்ப் பாஞ்சாலி
நீண்ட கருங் குழல் சோர நின்றாளை முகம் நோக்கி,
ஈண்டு அவரில் இளையோனும், 'சந்து மிக இனிது!' என்றான்.

39
உரை
   
'
தருமனுக்கும் கருத்து இதுவே; தமருடன் போர் புரியாமல்
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு'
                  என்று உரைத்தான்;
வரி மலர்க் கண் புனல் சோர, மலர் மறந்த குழல் சோர,
விரை மலர்ச் செஞ் சேவடிக் கீழ் வீழ்ந்து, அழுதாள்,
                  மின் அனையாள்.
40
உரை
   


'சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்!
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!

41
உரை
   

'கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன்
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்;
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி,
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?
42
உரை
   

'மன்றில் அழைத்து, எனக்கு மாசு அளித்த மன்னவன்பால்
சென்று, தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால்,
அன்று விரித்த அருங் கூந்தல், வல் வினையேன்,
என்று முடிப்பது, இனி? எம் பெருமான்!' என்று அழுதாள்.
43
உரை
   


சாத்தகியும் சமாதானத்தை வெறுத்து மொழிதல்

' "தண்டு இருந்தது, இவன் கரத்தில்; தனு இருந்தது,
                  அவன் கரத்தில்;
வண்டு இருந்த பூங் குழல்மேல் மாசு இருந்தது"
                  என இருந்தாள்;
கண்டு இருந்தீர், எல்லீரும்; கருதலர்பால் ஊர் வேண்டி
உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர்; உரையீரே!

44
உரை
   


'சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்தனக்கு அஞ்சி,
வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட,
திண் திறல் மாதவன் மதியோ?-திகழ் தருமன்தன் மதியோ?-
பண்டும் அவர் கருத்து அறிந்தும், பார் போய்
                 
வேண்டுவது?' என்றான்.

45
உரை
   


'நானே உன் குழல் முடித்து வைப்பேன்' என, கண்ணன்
திரௌபதியைத் தேற்றுதல்

சாத்தகி நின்று இவை உரைப்ப, சடைக் குழலாள்
                 
அழுது அரற்ற,
கோத் தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும்
பார்த்தருளி, அருள் பொழியும் பங்கயக் கண் நெடுமாலும்,
ஏத்த அரிய பெருங் கற்பின் இளையாளுக்கு
                 
இவை உரைப்பான்;

46
உரை
   

'தொல் ஆண்மைப் பாண்டவர்க்குத் தூது
                  போய் மீண்டதற்பின்,
நல்லாய்! உன் பைங் கூந்தல் நானே முடிக்கின்றேன்;
எல்லாரும் காண, இனி விரிப்பது, எண்ண அரிய
புல்லார்தம் அந்தப்புர மாதர் பூங் குழலே.
47
உரை
   


'மைக் குழலாய்! கேளாய்: மருவார் உடற்புலத்துப்
புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு,
தொக்கு உழலும் வெங் கோன்மைத் தொல்
                  வேந்தர்தம் குலமும்,
இக் குழலும், சேர முடியாது இரான்' என்றான்.

48
உரை
   


பெண் நீர்மை குன்றாப் பெருந் திருவின் செங்கமலக்
கண் நீர் துடைத்து, இரு தன் கண்ணில் கருணை எனும்
தெள் நீரினால் பொருந்தத் தேற்றினான்-சாற்றுகின்ற
மண், நீர், அனல், அனிலம், வான், வடிவு ஆம் மா மாயன்.

49
உரை
   


கண்ணனைத் 'தூது ஏகு' எனத் தருமன் வேண்ட, அவனும்
தேர்மேல் ஏறி அத்தினாபுரியை அடைதல்

'துன்று பிணியோர், துறந்தோர், அடங்காதோர்,
கன்று சின மனத்தோர், கல்லாதவர், இளையோர்,
ஒன்றும் முறைமை உணராதவர், மகளிர்,
என்றும் இவர் மந்திரத்தின் எய்தப் பெறாதாரே.'

50
உரை
   


என்னக் கழறி, இருந்தோர் உரை தவிர்த்து,
'நின் ஒப்பவர் இல்லாய்! நீ ஏகு' என உரைப்ப,
மன்னர்க்கு மன்னவன்பால் மாயோனும் தூது ஆகி,
பொன் உற்ற நேமிப் பொரு பரித் தேர்மேல் கொண்டான்.

51
உரை
   

சங்கும், மணி முரசும், சல்லரியும், தாரைகளும்,
எங்கும் முழங்க, எழில் வெண்குடை நிழற்ற,
பொங்கு கவரி புடை இரட்ட, எண் இல்லா
அங்கம் ஒரு நான்கும், அவனிபரும், தற் சூழ,
52
உரை
   

கல் வரையும், பாலைக் கடுஞ் சுரமும், கான் யாறும்,
நல் வரையும், நீர் நாடும், நாள் இரண்டில் சென்றருளி,
தொல் வரைய கோபுரமும், நீள் மதிலும், சூழ்ந்து இலங்கும்
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான்.
53
உரை
   


அத்தினாபுரியின் இயற்கை வளங்கள்

மேவு செந் துகிர்த் திரளும், மா மரகத விதமும்,
கோவை வெண் கதிர்த் தரளமும், நிரை நிரை குயிற்றி,
தாவும் வெம் பரித் தேரினான் தனக்கு எதிர் சமைத்த
காவணங்களின் தோன்றின, பச்சிளங் கமுகம்.

54
உரை
   


வம்பு உலாம் அகில், சந்தனம், வருக்கை, மாகந்தம்,
சம்பகம், தமாலம், பல திசைதொறும் தயங்க;
உம்பர் நாயகன் வரவு கண்டு, உளம் களி கூர்ந்து,
தும்பி பாடின; தோகை நின்று ஆடின-சோலை.

55
உரை
   


அணி கொள் அத்தினாபுரி எனும் அணங்கு, செந்திருவின்
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப,
மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த
புணரியின் பெரும் புனலையும் கொள்வன-பொய்கை.

56
உரை
   


அகழி, மதில், முதலியவற்றின் தோற்றம்

நடந்த நாயகன், கோலம் ஆய், வேலை சூழ் ஞாலம்
இடந்த நாளிடை, அது வழியாக வந்து, எழுந்து,
படர்ந்த பாதல கங்கை அப் படர் மதில் சூழ்ந்து,
கிடந்தது ஆம் என, சிறந்தது-தாழ் புனல் கிடங்கு.

57
உரை
   


அடி நிலத்திலே படிவன, இடி முகில் அனைத்தும்;
முடி நிலத்தினுக்கு உடு பதத்தினும் முடிவு இல்லை;
நெடிய சக்கரப் பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர்
படி வகுத்தது ஆம் எனும்படி பரந்தது-புரிசை.

58
உரை
   


பகலினும் கடும் பரிதி தன் கதிர் பரப்பாமல்
இகலி, எங்கணும் எறிந்து, கால் பொருதலின், எற்றி,
புகலுகின்ற மந்தாகினித் தரங்கமே போல,
அகல் விசும்பிடை மிடைவன-நெடுங் கொடி ஆடை
.

59
உரை
   


'புயங்க பூமியோ, புரந்தரற்கு அமைத்த பொன்னுலகோ;
தயங்கு செல்வம் நீடு அளகையோ, நிகர்?' எனும் தரத்த;
இயங்கு கார் முகில் வரையின்நின்று எழுவன போல,
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன-மாடம்.

60
உரை
   


பல வகை வீதிகளும் சேனைகளின் பெருக்கமும்

மன்னர் வேழமும், சேனையும், எதிர் எதிர் மயங்க,
பின்னும், முன்னும், எம் மருங்கினும், பெயர்
               இடம் பெறாமல்,
துன்னி நின்றவர், 'ஏகுமின், ஏகுமின், தொடர!'
என்னும் ஓசையே உள்ளன-வீதிகள் எல்லாம்.

61
உரை
   

வரை எலாம், பல வனம் எலாம், கடல் எலாம், வளைந்த
தரை எலாம், படு பொருள் எலாம் தனித்தனி குவித்த
நிரை எலாம் கவர் ஆவண நீர்மையை, புலவோர்
உரை எலாம் தொடுத்து உரைப்பினும், உவமை வேறு உளதோ!
62
உரை
   

விரவு கான் மலரினும் பல, வீரரின் விதங்கள்;
பரவை வெண் மணலினும் பல, புரவியின் பந்தி;
இரவில் வான மீனினும் பல, யானையின் ஈட்டம்;
நிரை கொள் கார்த் துளியினும் பல, தேர் அணி நிலையே;
63
உரை
   


அந்தணர் முதலியோர் இருப்பிடங்களும்,
பல வகை ஓசைகளும்

ஆசு இலா மறை அந்தணர் ஆலயம் ஒருபால்;
மாசு இலா முடி மன்னவர் மாளிகை ஒருபால்;
காசு இலா மதி அமைச்சர்தம் கடி மனை ஒருபால்;
பேசு இலா வள வணிகர்தம் பேரிடம் ஒருபால்.

64
உரை
   


.மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை;
திங்கள் தோய் நெடுந் தலம் எலாம் செழுஞ்
               சிலம்பு ஓசை;
அம் கண் மா நகர் அனைத்தும் மும் முரசு
               அதிர் ஓசை;
எங்கணும், கடவுளர் இடம்தொறும், முழவு ஓசை.

65
உரை
   


முன்றிலின்கண் நின்று, இடம் பெறா அரசர்
               மா முடிகள்
ஒன்றொடு ஒன்று அறைந்து, எற்றி, மேல்
               ஒளிர் பொறி சிதறி,
சென்ற சென்ற எத் திசைதொறும் திகழ்ந்தது,
               செம்பொன்
குன்று எனும்படி-குருகுல நாயகன் கோயில்.

66
உரை
   


நகரின் தென்பாலுள்ள சோலையில் கண்ணன்
அமர்ந்திருக்க, அவன் ஐவர்க்குத் தூதாக வந்துள்ளமையைத்
துரியோதனனுக்குத் தூதுவர் உரைத்தலா

என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுடக்
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி,
தென் திசைக் குளிர் செண்பக மலருடன் சிறந்து,
நின்று இசைக்கும் வண் சோலைவாய்
               அமர்ந்தனன், நெடுமால்.

67
உரை
   


'அன்று தூது கொண்டு, இலங்கை தீ விளைத்தவன் ஐவர்க்கு
இன்று தூது வந்து, எயிற் புறத்து இறுத்தனன்' என்னா,
துன்று தூது வண்டுஇனம் முரல் தொடையலான் தனக்கு,
சென்று, தூதுவர் இயம்பினர், சேவடி வணங்கி.

68
உரை
   


துரியோதனன் நகரை அலங்கரிக்கப் பணித்து, கண்ணனை
எதிர்கொள்ளச் செல்ல, சகுனி தடுத்து நிறுத்துதல்

'தொல்லை நாயகன் வந்தனன்!' என்றலும், சுரும்பு ஆர்
மல்லல் மாலையான் ஏவலால், மா நகர் மாக்கள்
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழு நூறாம்
செல்வ மா நகர்த் தெருவினை ஒப்பனை செய்தார்.

69
உரை
   


மின்னும் மா முகில் பல் இய விதங்கள் முன் முழங்க,
மன்னர் மன்னவன் எழுந்தனன், மால் எதிர்கொள்வான்;
'என்னை, நீ அவற்கு எதிர் செல்வது?' என்று தன் மருகன்-
தன்னை வன்பொடு தகைந்தனன், கொடுமை கூர் சகுனி.

70
உரை
   


கண்ணனுக்கு இடம் முதலியன அமைத்து, துரியோதனன் சபையில்
வீற்றிருத்தல்

சீர் வலம்புரி திகிரி சேர் செங் கையான் தனக்குக்
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து,
போர் வலம் புரி நிருபரும் இளைஞரும் போற்ற,
தார் வலம்புரியவன் இருந்தனன், பொலந் தவிசின்.

71
உரை
   


வீடுமன் முதலியோர் கண்ணனை எதிர்கொள்ள, அவன்
நகருள் வந்து, விதுரன் மனையில் புகுதல்

தொல் பகீரதி மைந்தனும், துரோணனும், சுதனும்,
வில் விதூரனும், கிருபனும், முதலிய வேந்தர்,
மல்கு மூ-இரு பத்து நூறாயிரர் மகிழ்ந்து,
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார்.

72
உரை
   

வந்து வந்து, இரு மருங்கினும் மன்னவர் வணங்க,
பைந் துழாய் முடிப் பரமனும் கண்மலர் பரப்பி,
அந்த மா நகர் புகுந்தபின், அரசன் இல் புகாமல்,
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான்.
73
உரை
   


வேந்தர்களுக்கு விடைகொடுத்து அனுப்பியபின், விதுரன்
மாளிகையின் நடுவில் உள்ள ஒரு மண்டபத்தில், கண்ணன்
அரியாசனத்தில் வீற்றிருத்தல்

வேந்தர் யாரையும் விடை கொடுத்து, அகன்ற
               பின், விமலன்
வாய்ந்த மாளிகை நடுவண் ஓர் மண்டபம் குறுகி,
ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு
ஏந்தும் ஆசனம் இட, பொலிந்து அதன்மிசை இருந்தான்.

74
உரை
   


.விதுரன் கண்ணனைக் கண்டு களித்து, மனம்
உருகி, அவனுக்கு முகமன் கூறுதல

இருந்து உவந்தருள் இறைவனை இறைஞ்சினான்; இறைஞ்சி,
பெருந் துவந்தனைப் பிறப்பையும் இறப்பையும் பிரித்தான்-
'மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன்
விருந்து வந்தனன்!' என்று, உளம் உருகிய விதுரன்.

75
உரை
   


கோடு கொண்ட கைக் குரிசிலை, அலர்ந்த கோகனதக்
காடு கண்டெனக் கண்டு, தன் கண் இணை களியா,
தோடு கொண்ட தார் விதுரன், இப் பிறப்பையும்
               தொலைத்தான்;
வீடு கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ? வேண்டா.

76
உரை
   


உள்ளினான்; உணர்ந்து, உள்ளமும் உருகினான்; எழுந்து
துள்ளினான்; விழுந்து, இணை அடி சூடினான்; துயரைத்
தள்ளினான்; மலர்த் தடக் கையால் தத்துவ அமுதை
அள்ளினான் எனக் கண்களால் அருந்தினான்-அளியோன்.

77
உரை
   


'முன்னமே துயின்றருளிய முது பயோததியோ!
பன்னகாதிபப் பாயலோ! பச்சை ஆல் இலையோ!
சொன்ன நால் வகைச் சுருதியோ! கருதி நீ எய்தற்கு
என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான்.

78
உரை
   


கண்ணனும் ஏனையோரும் விதுரன் மனையில் விருந்து உண்டு
மகிழ்ந்திருத்தல்

'மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் அருந்தும்
எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான்;
அம்ம!' என்றனன்; ஆறு-நூறாயிரம் மடையர்-
தம்மை நோக்கினன்; அவர்களும் விரைவுடன் சமைத்தார்.

79
உரை
   


வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும்,
கந்து அடர்ப்பன கரிக்கும், வெங் கவன வாம் பரிக்கும்,
ஐந்து-பத்து நூறாயிரம் அரசர்க்கும், எவர்க்கும்,
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற,

80
உரை
   


அமைத்த வாச நல் நீர் கொடு மஞ்சனம் ஆடி,
சமைத்த பல் கறி, அடிசில், தம் விருப்பினால் அருந்தி,
உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ
இமைப்பிலார் அமுது அருந்திய இயல்பு என, இருந்தார்.

81
உரை
   


வாச நீரும், வண் சுண்ணமும், முறை முறை வழங்க,
பூசுறும் தொழில் பூசினார்; சூடினார்; புனைந்தார்;
வீசு சாமரம் இரட்ட, வெண் மதிக்குடை நிழற்ற,
கேசவன் மணிக் கேசரித் தவிசிடைக் கிளர்ந்தான்.

82
உரை
   


சூரியன் மறைவும், அந்தி மாலையின் தோற்றமும்

ஞான கஞ்சுக விதுரன் வாழ் மனையில், நாயகனும்,
போனகம் பரிவுடன் நுகர்ந்து, இருந்த அப் பொழுதில்,
தானும் மேருவுக்கு அப்புறத்து அவ் அமுது அருந்த,
பானுவும், பெருங் குட திசைப் பரவையில் படிந்தான்.

83
உரை
   


கருதி அந்தணர் யாவரும் தம் கடன் கழிப்ப,
சுருதி என்னும் வெஞ் சாபமேல் அம்பு கை தொடுத்து,
பருதிதன் பெரும் பகைவர்மேல் விடுத்தலின், பரந்த
குருதி ஆம் என நிவந்து எழ, சிவந்தது, குடபால்.

84
உரை
   


தரங்க வாரிதிப் புறத்து, எதிர் மலைந்த வெஞ் சமரில்,
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர்
துரங்கம் ஏழுடைக் கடவுளை நிரை நிரை துணித்த
கரங்கள் போன்றன-கரைதொறும் வளர் துகிர்க் காடு.

85
உரை
   


நீதியின் புகல் பகல் எலாம் நீர்அரமகளிர்
மீது உறைத்து எழும் வெவ் வெயில் படாவகை விரித்து,
'போது புக்கது' என்று, இதம்படச் சுருக்கிய பூம் பட்டு-
ஆதபத்திரம் போன்றன-தாமரை அடவி.

86
உரை
   


கலந்து மங்கல முழவு வெண் சங்கொடு கறங்க,
மிலைந்த பூங் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப,
கலந்த தாமரைத் தடம் எலாம் குவிந்தது கண்டு,
மலர்ந்த தாமரை வாவி போன்றது-நகர் வட்டம்.

87
உரை
   


விதுரன் கண்ணனைப் போற்றி, அவன் தனி வந்த
காரணம் வினவ, கண்ணன் தான் ஐவர்க்குத் தூதாக
வந்தமையைத் தெரிவித்தல்

உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம்
இரு மருங்கினும் ஆயிரம் ஆயிரம் ஏந்த,
அரி சுமந்த பேர் ஆசனத்து அழகுடன் இருந்த
புரவலன்தனைப் புண்ணிய விதுரனும் போற்றி,

88
உரை
   


'பொங்கு அரா-அணை பொலிவு அறப் போந்தபின், பொதுவர்-
தங்கள் பாடியில் வளர்ந்து, மா மருதிடைத் தவழ்ந்து,
கங்கை மா நதி கால் வழி கருணை அம் கடலே!
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள்!' என்றான்.

89
உரை
   


தோட்டு வந்து செந் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய்!
காட்டு உவந்து முன் திரிந்து, தம் கடவ நாள் கழித்து,
நாட்டு வந்த பேர் ஐவர்க்கும் நல் குருநாடு
கேட்டு வந்தனம்' என்றனன்; விதுரனும் கேட்டான்.

90
உரை
   


'துரியோதனன் முறைமையால் அரசு கொடான்' என்ற விதுரனுக்கு,
'கொடாவிடின் பாண்டவர் பொருது பெறுவர்' எனக் கண்ணன்
உரைத்தல்

'முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்தனக்கு உரிமை
வழக்கினால் அறிந்து, அடல் அரவு உயர்த்த
               கோன் வழங்கான்;
தழக்கின் நால்-இரு திசையினும் முரசு எழ, சமரில்
உழக்கினால் அலது, உணர்வனோ?' என்று,
               அவன் உரைத்தான்.

91
உரை
   


'வாளை வாவியில் உகண்டு எழ, வளர் இளங் கமுகின்
பாளைவாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான்,
நாளை, வாழ்வு அவர்க்கு அளித்திலன்எனில், எதிர் நடந்து,
மூளை வாய் உக முடிப்பர், வெம் போர்' என மொழிந்தான்.

92
உரை
   


உலக இயல்பை விதுரனுக்கு உரைத்து, அவனுக்கு விடை
கொடுத்து, கண்ணன் கண்வளர்தல்

'விரைந்து பாய் பரி மன்னவர், இதம்பட மெலிவுற்று,
இரந்து வேண்டினும், கிளைஞருக்கு ஒரு பொருள் ஈயார்;
பரந்த போரினில் எதிர்த்து, அவர் படப்படப் பகழி
துரந்தபோது அவர்க்கு உதவுவர், சொன்னவை எல்லாம்.'

93
உரை
   


என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி,
வென்று, போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி,
குன்றுபோல் புயக் காவலர் கொடுந் துடி கறங்க,
மன்றல் நாள் மலர்ப் பாயலின்மீது, கண்வளர்ந்தான்.

94
உரை
   


இரவின் இயற்கையும், இரவியின் தோற்றமும்

குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி,
தளவ வாள் நகை பரப்பி, வண் சத தள மலர்க்கை
அளவிலே குவித்து, அளியொடும் அகன்றிலாமையினால்,
களி கொள் தோள் விலைக் கணிகையைப்
               போன்றது-அக் கங்குல்.

95
உரை
   


அளைந்த ஆர் இருள்-கடல் பொறாது, ஒரு
               புடை அண்டம்
பிளந்தது ஆம் என, கரும் படாம் பீறியதென்ன,
வளைந்த ஏழ் கடல் வற்ற, மேல் வடவையின் முகத் தீக்
கிளர்ந்தது ஆம் எனக் கிளர்ந்தன, இரவியின் கிரண

96
உரை
   


இகலும் வாள் அரவு உயர்த்தவன் இருந்த
               தொல் பதியில்
அகில நாயகன் ஒரு தனி நடந்தவாறு அறிந்து,
மகர வாரிதி அகன்று, மா மருங்குற அணைந்த
திகிரி போல வந்து எழுந்தனன், இரவி, கீழ்த்திசையில்.

97
உரை
   


துரியோதனன் அரசு வீற்றிருத்தல்

சோதி வான நதி மைந்தனும், பழைய சுருதியால்
               உயர் துரோணனும்,
ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர்
               அநேகரும்,
நீதி ஆறுவகை ஐந்து பத்தொடு அறுபத்தொர்
               ஆயிரவர் நிருபரும்,
தீது இலாத திறல் அக்குரோணி பதினொன்று பெற்ற
               மிகு சேனையும்,

98
உரை
   


தொக்க வெண் கவரி, ஆல வட்ட நிரை, சொட்டை,
               வாள், பரிசை, துகிலுடன்,
கைக் களாசி, இவை கொண்டு உலாவி வரு கன்னி
               மங்கையர்கள் அனைவரும்,
மிக்க வேதியர்கள், வல்ல பல் கலை விதத்தில்
               உள்ளவர்கள், யாவரும்,
தக்க தம்பியரும், வந்து சூழ, உயர் தரணிமேல்
               நிருபர் தம்பிரான்,

99
உரை
   


நிரை கதிர்க் கனக நீள் சுவர்ப் பவள உத்தரத்து இடை
               நிரைத்த ஒண்
பரு மணிக் கிரண பற்பராக வயிரத் துலாம் மிசை
               பரப்பி, வெண்
தரள வர்க்க வயிடூரியப் புதிய கோமளப் பலகை
               தைத்து, மா
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப
               மருங்குஅரோ,

100
உரை
   


முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின், நகைத்த சீர் அரி
               முகத்த கால்
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடமிசை, வாசவன்கொல்
               என, வைகினான்-
பட்டவர்த்தனரும், மகுடவர்த்தனரும், வந்து சேவடி
               பணிந்தபின்,
'இட்ட பொன்-தவிசின் முறைமையால் இனிது இருக்க!'
               என்று, அவரை ஏவியே,

101
உரை
   


'கண்ணன் அவைக்கு வரும்போது யாரும் எதிர் கொள்ளக்
கூடாது' எனத் துரியோதனன் கட்டளையிடுதல்

காவல் மன்னவர் முகங்கள்தோறும் இரு கண்
                பரப்பி, 'அமர் கருதுவோர்
ஏவலின்கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று
                நம் அவையில் எய்தினால்,
ஓவல் இன்றி, எதிர் சென்று, கண்டு தொழுது, உறவு
                கூறில், இனி உங்கள் ஊர்
தீ வலம் செய அடர்ப்பன்!' என்று, நனி சீறினான்,
                முறைமை மாறினான்.

102
உரை
   


வீடுமன் முதலியோர் எதிர் கொள்ள, கண்ணன்
அவை புகுந்து, ஆசனத்து அமர்தல்

இந்த வண்ணம் உரைசெய்து, மன் அவையில்
                ராசராசனும் இருக்கவே,
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல்-ஒளி தங்கு
                கண் துயில் உணர்ந்தபின்,
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது, காலையில்
                பல கடன் கழித்து,
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில்
                ஏயினான்-இசை கொள் வேயினான

103
உரை
   


துன்னு கங்கை மகனும், துரோணனொடு சுதனும்,
                நீதி புனை விதுரனும்,
மன்னர் மன்னனை ஒழிந்த மன்னவரும், வந்து
                சேவடி வணங்கினார்;
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன்; அழன்று,
                உளம் சகுனி கருகினான்;
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடமிசை மொய் துழாய்
                முகிலும் எய்தினான்.

104
உரை
   


'நேற்றே இந் நகர் வந்தும், என் இல்லிற்கு வாராது, விதுரன்
இல்லில் தங்கியது ஏன்?' எனத் துரியோதனன் வினாவுதல்

முன் நகம் குடை கவித்த காள முகில் முன்
                இருந்தபின், முகம் கொடாது
'என் அகம்தனை ஒழித்து, நென்னலிடை இந்த
                மா நகரில் எய்தியும்,
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது
                என்கொல்? இது புகல்!' எனா,
பன்னகந்தனை உயர்த்த கோவும் உரை பகர, மாலும்
                எதிர் பகருவான்:

105
உரை
   


கண்ணன் மறுமொழி கூறுதல்

'என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை; இது என் இல்;
                நின் இல் அது; என்னினும்;
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன்
                வந்து எதிர் விளம்பினான்;
உன்னில், இன்னம் உளது ஒன்று; பஞ்சவர் உரைக்க
                வந்த ஒரு தூதன் யான்;
நின் இல் இன் அடிசில் உண்டு, நின்னுடன் வெறுக்க
                எண்ணுவது நீதியோ?

106
உரை
   


'அரவம் மல்கிய பதாகையாய்! மதி அமைச்சர் ஆய்
                அரசு அழிப்பினும்,
குரவர் நல் உரை மறுக்கினும், பிறர் புரிந்த
                நன்றியது கொல்லினும்,
ஒருவர் வாழ் மனையில் உண்டு, பின்னும், அவருடன்
                அழன்று பொர உன்னினும்,
இரவி உள்ளளவும், மதியம் உள்ளளவும், இவர்களே
                நரகில் எய்துவார்.'

107
உரை
   


'தூதாக வந்த காரியத்தை விளம்புக!' என்ற துரியோதனனிடம்,
கண்ணன், யஐவர்க்கும் உரிய நாட்டைக் கொடுப்பாய்ய எனல்

சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும்
                தெரிய, ஒப்பு இலா
நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி,
                மிக நகைசெயா,
யதூதன் ஆகி வரு தன்மை சொல்லுக!ய என, மன்னர்
                மன்னன் இது சொன்னபின்,
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய்
                தாரவனும் உரைசெய்வான்;

108
உரை
   


யசூதினால் அரசு இழந்து, நின் துணைவர் சொன்ன
                சொல்லும் வழுவாது போய்,
ஏதிலார்கள் என நொந்து, தண் நிழல் இலாத
                கானினிடை எய்தியே,
தீது இலாவகை குறித்த நாள் பல கழித்து,
                வந்தனர்; செகத்தினில்
கோது இலாத குருகுல மகீப! அவர் உரிமை
                நண்பொடு கொடுத்தியே.

109
உரை
   


'சொல் அவாவு உரக துவச! நின் உரிய துணைவர்
                தங்களை அழைத்து, நீ
வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்தம்முடன்
                கெழுமி வாழ்தியேல்,
'நல்ல வாய்மை நிலை உடையை" என்று, அரசர்
                நாள்தொறும் புகழ்வர், நண்பு கொண்டு;
"அல்ல ஆம்" என மறுத்தியேல், அறமும், ஆண்மையும்,
                புகழும், அல்லவே.'

110
உரை
   


'ஈ இருக்கும் இடமும் கொடேன்!' எனத்
துரியோதனன் மறுத்தல்

என்று கேசவன் இயம்ப, அங்கு எதிர் இராசராசனும்
                இயம்புவான்;
'அன்று சூது பொருது, உரிமை யாவையும் இழந்து
                போயினர்கள், ஐவரும்;
இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின், நான்
                அவரில் எளியனோ?
சென்று, கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி!'
                என்று நனி சீறியே,

111
உரை
   

'நீ வெறுக்கில் என்? இருந்த மன்னவர் திகைக்கில் என்?
                பல நினைக்கில் என்?
போய் நகைக்கில் என்? 'உரைத்த உண்மை மொழி
                பொய்த்தது' என்று அமரர் புகலில் என்?
வேய் மலர்த் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெஞ்
                சமர் விளைக்கில் என்?
இருக்கும் இடம் எனினும் இப் புவியில் யான் அவர்க்கு
                அரசு இனிக் கொடேன்!'
112
உரை
   


'ஐந்து ஊரேனும் வழங்குக!' என்று கண்ணன்
மீண்டும் வேண்ட, துரியோதனன் அதனை மறுக்கவே,
அவனுக்கு அறிவுரை கூறுதல்

கார் வழங்கு உரும் எனச் சினத்தினொடு கண்
                இலான் மதலை கழறவும்
'பார் வழங்க நினைவு இல்லையேல், அவனி
                பாதிஆயினும் வழங்குவாய்!
தார் வழங்கு தட மார்ப!' என்ன, அதுதானும்
                மன்னவன் மறுக்க, 'ஐந்து
ஊர் வழங்குக!' என உற்று இரந்தனன், இவ் உலகு
                எலாம் உதவும் உந்தியான்.

113
உரை
   


'மாடு அளிக் குலம் நெருங்கு பைந் துளப
                மாலையாய்! மகர வேலை சூழ்
நாடு அளித்திடவும், ஐந்து பேருடைய நகர்
                அளித்திடவும், வேண்டுமோ?
காடு அளிக்க, அதனிடை திரிந்து, உறை கரந்து
                போயினர்கள் காண, ஓர்
வீடு அளிக்கினும் வெறுப்பரோ? இதனை விடுக!'
                என்று எதிர் விளம்பினான்.

114
உரை
   


'தந்தை காதலுறு தன்மை கண்டு, இளைய தாய்
                பயந்த இரு தம்பியர்க்கு
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து
                ஒருவன் இங்கு உளான்;
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர்
                முறைமையால் உரிய அரசருக்கு
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின், என்னதாகும்
                உனது அரசியல்?

115
உரை
   


'ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து,
                உரிமை எய்தினால்,
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எக்
                குலத்தினும் இயற்கையே;
பொரு குலக் களிறு வளர் திசைக்கண் மிகு புகழ்
                பரப்பி, எழு புவி பெறும்
குருகுலத்தவர் இயற்கை நன்று!' என மொழிந்தனன்,
                கரிய கோவலன்.

116
உரை
   


துரியோதனன் சினத்துடன் மறுத்து மொழிய,
கண்ணன் போர் வேண்டுதல்

பேர் அரா-அணை துறந்த மாயன் இவை பேச,
                வன்பினொடு பின்னையும்,
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி
                செயிர்த்து உளே,
போர் அரா நிருபன், 'மணி நெடுஞ் சுடிகை
                ஆயிரம்கொடு பொறுத்த பார்
வீரர் ஆனவரது அல்லவோ? உரிமை வேண்டுமோ?'
                என விளம்பினான்.

117
உரை
   


பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற
                பின்பு, 'புய வலியினால்
ஐவர் தங்கள் அரசும் கொடாமல், அடல் ஆண்மை
                கொண்டு எதிர் அடர்த்தியேல்,
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து, வெஞ்
                சமர் விளைக்கவே
கை வழங்குக!' என, நின்ற தூணிடை அறைந்து,
                உரைக்கும் இவை காவலன்:

118
உரை
   


'போருக்குக் கை அறை' என்பது கேட்டு, துரியோதனன்
சினந்து, கண்ணனை இகழ்தல

' புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில்
                ஆன் நிரை புரந்திடும்
உன் பிறப்பும், உரலோடு கோவியர் உனைப்
                பிணித்ததும், மறந்து நீ,
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்தம் வாய்மைதானும்,
                ஒரு மாசு இலா
என் பிறப்பும், உணராமலோ, சபையில் இந்த
                வாசகம் இயம்பினாய்?

119
உரை
   


'ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில், யான்
                அயர்ந்து எளிது இருப்பனோ?
கோ விலங்கு பொர அஞ்சுமோ, கரட குஞ்சரங்கள்
                பகை கொண்டகால்?
மேவில், அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும்
                என்றது நின் மேன்மையோ?
நா விலங்கும் என எண்ணியோ? மிகவும் நன்று,
                அரசர் ஞாயமே!

120
உரை
   


'அளி வரும் குழல் பிடித்து, மன்அவையில் ஐவருக்கும்
                உரியாளை நான்
எளிவரும் துகில் உரிந்தபோது, அருகு இருந்து,
                கண்டவர்கள் அல்லவோ!
துளி வரும் புனல் பரிந்து அருந்தி, இடு சோறு தின்று,
                உயிர் சுமந்து, தோள்
எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான
                நிலை உணர்வரோ!'

121
உரை
   


'அன்னை ஆனவரும் இருவர் ஆம்! முதல் அளித்த
                தந்தையர்கள் ஐவர் ஆம்!
பின்னை, ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர்
                ஆம்! ஒரு பிறப்பில் ஓர்
மின்னை ஆம், அவர்கள் ஐவரும் பரிவினொடு
                தனித்தனி விரும்புவார்!
என்னை, யாம் அவரொடு ஒரு குலத்து அரசன்
                என்பது? அம்ம! இவை என் கொலாம்!'

122
உரை
   


கண்ணன் அவையை நீங்கி, விதுரன் மனைக்கு மீளுதல்

ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட, நகைத்து,
                வண் துவரை நாதனும்,
'சால முற்றும் இனி அவர் கருத்து!' என நினைந்து,
                பேர் அவை தணந்து போய்,
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில்
                சென்று நனி குறுகினான்-
சீலம் அற்றவர் சினந்த போதும், ஒரு தீது இலாதவர்
                செயிர்ப்பரோ?

123
உரை
   


கண்ணனுக்கு விருந்து செய்தது பற்றி, விதுரனைத்
துரியோதனன் பழித்து உரைத்தல

கரிந்து மாலை சருகு ஆகவும், புதிய கமல
                வாள்முகம் வெயர்க்கவும்,
திருந்து கண் இணை சிவக்கவும், கொடிய செய்ய
                வாய் இதழ் துடிக்கவும்,
இருந்த பேர் அவையின் நெடிது உயிர்த்திடும்
                இராசராசன், 'அவனுக்கு இவன்
விருந்து செய்த உறவு என்கொல்?' என்று அரசர் எதிர்
                விதூரனை விளம்புவான்:

124
உரை
   


'வன்பினால் அவனி வௌவ என்றுகொல், என்
                மனையில் உண்டியை மறுத்தவன்
தன் பதாகினியொடு இனிது அருந்தும்வகை தன் இல்
                இன் அமுது இயற்றினான்?'
என் பிதாவொடு பிறந்தும், இன்று அளவும் என்
                கைஓதனம் அருந்தியும்,
அன்புதான் உடையன்அல்லன்; என் பகைதனக்கும்
                உற்ற பகை அல்லனோ?

125
உரை
   


'முதல் விழைந்து, ஒருவன் உடன் இயைந்த பொருள்
                பற்றி, இன்புற முயங்கினும்,
அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின்,
                அவனையே ஒழிய அறிவரோ?
பொது மடந்தையர் தமக்குமண்ணில் இது புதுமை அல்ல;
                அவர் புதல்வனாம்
விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர்
                வியப்பை என் சொலி வெறுப்பதே!'

126
உரை
   


விதுரன் சினந்து மறுமொழி கூறி, தன் வில்லை
முறித்து, சபையை விட்டு நீங்குதல்

இன்னவாறு இவன் உரைத்தபோது, அவன் எழுந்திருந்து,
                'வசை என்னை நீ
சொன்ன வாய் குருதி சோர, வாள்கொடு துளைத்து,
                நின் முடி துணிப்பன் யான்;
மன்னவா! "குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர்
                உயிரை வௌவினான்"
என்ன, வானவர் நகைப்பரே! எனை உரைத்த
                நாவுடன் இருத்தியோ?

127
உரை
   


'ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு,
                உலகம் எங்கணும்
நீண்டவற்கு, உதவி ஆயினேன் என நினைத்து, நீ
                எனை அடர்த்தியோ?
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும், இசையும்,
                ஆண்மையும், வளர்த்திடும்
பாண்டவர்க்கு உதவி ஆகில், என்னை முடி மன்னர்
                ஆனவர் பழிப்பரோ?

128
உரை
   


'சொல் இரண்டு புகலேன்; இனி, சமரில் நின்று வெங்
                கணை தொடேன்' எனா,
வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனை வேறு
                இரண்டுபட வெட்டினான்-
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த
                காள முகில் வந்து, தன்
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண்
                இலாத தவம் எய்தினான்.

129
உரை
   


விதுரன் வில் முறித்தது குறித்து வேந்தர்கள் வருந்த, வீடுமன்
துரியோதனனைக் கடிந்து உரைத்தல்

அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம்
                புகுத, 'அச்சுதன்
சந்த வில்லும், அரன் வில்லும், ஒப்பது ஒரு தாம
                வில்லினை முறிப்பதே!
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன்
                வந்து அமரில் முடுகினால்,
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி, இனி!' என்று
                காவலர் இரங்கினார்.

130
உரை
   


'கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள்
                ஏவி, அமர் கருதும் வில்
வீரனைப் பழுது உரைத்த நீ, பகையை எங்ஙனே,
                தனிகொல், வெல்லுவாய்?
பார் அனைத்தும் இனி ஐவர் ஆளும்வகை
                பண்ணுவித்தனை; அழிந்தது, உன்
பேர் அனைத்தும்' என உள் அழிந்து, சில பேசினான்,
                உயர் பிதா மகன்.

131
உரை
   


விதுரன் அன்றி வில் வீரர் பிறர் இல்லையோ?'
எனத் துரியோதனன் மொழிதல்

பிதாமகன் பரிவுடன் முனிந்து, சில பேச, நாசம்
                உறு பேரன்ஆம்
விதார பொய்ம்பனும், விதுரன் அல்லது வில் வல்ல
                வீரர் பிறர் இல்லையோ?
உதார சீலன், உயர் அங்கர் கோன், வரி வில் ஒன்றுமே
                அமையும், உற்று எழும்
பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட,
                பரணி பாடவே.

132
உரை
   


'நீ இருக்க, நெடு விற் கை ஆசிரியன் அவன் இருக்க,
                நிகர் அற்றவன்
சேய் இருக்க, விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க,
                எதிர் சென்று, நீள்
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து
                செய்தவன் வெறுக்கில் என்?
போய் இருக்கில் என்? முறிக்கில் என, சிலை? மலைந்து,
                நம்மொடு எவர் போர் செய்வார்?

133
உரை
   


கன்னன் தனது ஆண்மை எடுத்துரைத்தல்

என்று கூற, விறல் அங்கர் பூபதியும், 'யான் இருக்க,
                'இகல் விசயனைச்
சென்று சீறி, உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர்?''
                என்று, நனி செப்புவீர்!
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று, தேர்
                நனி கடாவினும்
அன்று போரினிடை காணல் ஆகும், எனது ஆடல்
                வெஞ் சிலையின் ஆண்மையே!

134
உரை
   


'அம்பரத்தவர் உடன்று சீறினும், ஒர் அம்பிலே
                அழிவர் திண்ணம்; யான்
வெம் பணிப் பகழி ஏவில், ஆவியுடன் மீளுவான்
                அமரில் விசயனோ?
இம்பரில் புகல, இரு தளத்தினும் எனக்கு நேர்
                ஒருவர் இல்லை' என்று,
உம்பர் கற்பகமும் நாண, வண்மையில் உயர்ந்த
                வீரன் இவை உரைசெய்தான்.

135
உரை
   


'விசயனுக்கு நிகர் நீயோ?' என்று வீடுமன் கன்னனை
இகழ, அவனும் வீடுமனைப் பழித்தல்

'திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி
                வந்தது ஒரு திசையின்வாய்,
நிசை எனப் பொருது, வானவர்க்கு அரசு அளித்து,
                வந்த விறல் நீர்மையான்
விசையனுக்கு நிகர் நீ கொலோ? கடவுள் வெண்
                மதிக்கு நிகர் வெள்ளியோ?
அசைவு இல் வில்-தொழிலும் வல்லையோ?' என
                ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன்.

136
உரை
   


அவன் மொழிந்த மொழி தன் செவிப் படலும், 'அருகு
                இருந்து அமுது அருந்தும் நீ,
இவனுடன் சிலர் பகைக்கின், மற்று அவர்தம் இசையும்,
                ஆண்மையும், இயம்புவாய்;
புவனம் ஒன்றுபட வரினும், என்தனொடு பொருவர்
                ஆயின், எதிர் பொர விடாய்!
சிவனும் என் கணையை அஞ்சும்!' என்று, நனி சீறினான்,
                இரவி சிறுவனே.

137
உரை
   


துரியோதனன் யாவர்க்கும் விடை கொடுத்தனுப்புதல்

இரவி மைந்தனொடு கங்கை மைந்தன் எதிர் வாய்மை
                ஒன்றையும் இசைத்திலன்;
'பொர, அறிந்திடுதும், அன்று வெஞ் சமரில்' என்று
                எழுந்து தனி போயினான்;
அரவ வெங் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு
                விடை நல்கினான்.
விரவு பைந் துளப மாலையான் விதுரன் மனையில்
                உற்றது விளம்புவாம்;

138
உரை
   


வில் முறித்தமை குறித்து விதுரனைக் கண்ணன்
வினாவ, அவன் மறுமொழி கூறுதல்

பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து, நேமிக்
குரிசிலை வணங்கி, ஆங்கண் இருப்ப, அக் குரிசில் நோக்கி,
'இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து
                இயம்பும் வில்லின்
ஒரு சிலை முறித்த சீற்றம் என்கொலோ? உரைசெய்!' என்றான்.

139
உரை
   


'ஆவது கருதான் ஆகில், அமைச்சர் சொல்
                கேளான் ஆகில்,
வீவது குறியான் ஆகில், விளைவதும் உணரான் ஆகில்,
நாவது காவான் ஆகில், அவனுக்கா நடந்து போரில்
சாவது, பழுது!' என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார்?

140
உரை
   


'செல்வம் வந்து உற்ற காலைத் தெய்வமும் சிறிது பேணார்;
சொல்வன அறிந்து, சொல்லார்; சுற்றமும் துணையும் நோக்கார்;
வெல்வதே நினைவது அல்லால், 'வெம் பகை வலிது"
                என்று எண்ணார்;
வல் வினை விளைவும் ஓரார்;-மண்ணின்மேல் வாழும் மாந்தர்.

141
உரை
   


'நினைக்கவும் தொழவும் எட்டா நீ எழுந்தருளப் பெற்றும்,
'தனக்கு இது தகுதி" என்று தமருடன் வாழ எண்ணான்,
மனக் கடுங் கனலினான் தன் மனத்தினால் உரைத்த
                வெஞ் சொல்
எனக்கு இசையாமல், யானும் இருஞ் சிலை இறுத்தது' என்றான்.

142
உரை
   


விதுரன் ஆண்மையைக் கண்ணன் புகழ்ந்து,
'துரியோதனன் மொழிந்தனவற்றைப் பொறுத்தி' என்று
கூறி, பின் குந்தியின் மாளிகை செல்லுதல்

மாயனும் மகிழ்ந்து நோக்கி, 'மாசுணம் உயர்த்த மன்னன்
போய், அருஞ் சேனையோடு, போர்க் களம் குறுகும்போது,
நீ அவன் அருகு நில்லாது ஒழியின், உன் நேய மைந்தர்,
தாயமும், செல்வம் முற்றும், தரணியும், பெறுவர் அன்றே!

143
உரை
   


'ஏற்றிய நறு நெய் வீசி இந்தனம் அடுக்கினாலும்,
காற்று வந்து உறாதபோது, கடுங் கனல் கதுவ வற்றோ?
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில்,
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம்.

144
உரை
   


'பன்னிய புரை இல் கேள்விப் பயன் நுகர் மனத்தாய்! நின்னை
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி!'
                என்றுஅருளி, மாயோன்
அந் நகர்தன்னில், வண்மை, அருள், அழகு, ஆண்மை, பேசும்
கன்னனைப் பயந்த காதல் கன்னிதன் கோயில் புக்கான்.

145
உரை
   


குந்தி கண்ணனை எதிர்கொண்டு, அவன்
அத்தினாபுரி வந்த காரியம் வினாவுதல்

மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும்,
திண் திறல் மருகன்தன்னைச் சென்று,
                எதிர்கொண்டு, கண்டு,
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும்
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசுந்
                தோகை போன்றாள்.

146
உரை
   


'யான் உறை இல்லின் வந்தது, என்ன மா தவம்!'
                என்று எண்ணி,
கான் உறை மைந்தர்தம்மைக் கண்டனள் போன்றாள் ஆகி,
தேன் உறை துளவினான்தன் செய்ய மா முகத்தை நோக்கி,
'வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி'? என்றாள்.

147
உரை
   


கண்ணன் தான் தூது வந்ததும், போர் நேர்ந்துள்ளமையும்
குந்திக்குக்கூறி, கன்னன் பிறப்பு வரலாற்றையும்
அவளுக்கு உரைத்தல்

'நின் பெரும் புதல்வர் சொல்ல, நெடும் புனல் நாடு வேண்டி,
வன் பணி உயர்த்த கோமான் மனக் கருத்து அறிய வந்தேன்;
'தென் புல வேந்தன் வெஃகச் செருத் தொழில்
                புரிவன்' என்றான்;
என், பல சொல்லி? நாளை எதிர்க்கவே இசைந்தது' என்றான்.

148
உரை
   


'தன்மை நான் உரைப்பக் கேள்: நின் தந்தைதன்
                மனையில் நீயும்
கன்னியாய் இருந்து வாழும் காலை, ஓர் முனிவன் வந்து
சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால், சூரன்தன்னை
முன்னினை; அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான்.

149
உரை
   


'கதிரவன் அருளினால் ஓர் கணத்திடைக் காதல் கூர,
மதலை அங்கு ஒருவன்தன்னைப் பயந்தபின், "வடு"
                என்று அஞ்சி,
மிதவை அம் பேழைதன்னில் பொதிந்து நீ விட,
                அப்போது, அந்
நதியும் அம் மகவைக் கங்கை நதியிடைப் படுத்தது அன்றே.

150
உரை
   

'காதல் நின் புதல்வன்தன்னைக் கண் இலா அரசன்
                பொன்-தேர்ச்
சூதன் வந்து எடுத்துக்கொண்டு, சுதன் என
                வளர்த்த காலை,
ஆதபன், 'இவனை யாரும் கன்னன் என்று
                அழைக்க' என்றான்;
தாதையும், 'விசும்பில் சொன்ன நாமமே
                தக்கது' என்றான்.

151
உரை
   


'பண்புடைக் குமரன் கற்ற படைத் தொழில்
                பலவும் கண்டு,
நண்புடை உரிமை எல்லாம் நல்கி, மா
                முடியும் சூட்டி,
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு
                அளித்தான்; மற்றைத்
திண் பரித் தேர் வல்லோரில் அவனை யார்
                செயிக்க வல்லார்?

152
உரை
   


கன்னனை ஐவருடன் கூட்டுமாறும், வர மறுத்தால் வரம்
வேண்டுமாறும் குந்திக்குக் கண்ணன் மொழிதல்

'அந்த நின் மைந்தன்தானே அருஞ் சிலை விசயனோடு
வந்து, எதிர் மலைய நின்றான்; உறவு மற்று அறியமாட்டான்;
சிந்தையின் ஐயம் தீர, இதனை நீ தெளியச் சொல்லி,
கொந்து அவிழ் அலங்கலானைக் கூட்டுக, விரைவின் அம்மா!

153
உரை
   


'தம்பியர் ஐந்து பேரும் தனித்தனி ஏவல் செய்ய,
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி,
அம் புவி முழுதும் நீயே ஆளலாம்; வருக!' என்றால்,
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தான்ஆகில்,

154
உரை
   


'எரி அமுது அருந்த, கானம் எரித்த நாள், அகன்று போன
அரவினை அங்கர் கோமான் ஆசுகமாகக் கொண்டான்;
வரி சிலை விசயன்தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம்
ஒரு வரம் வேண்டுக!' என்றான்-உற்றவர்க்கு உறுதி சூழ்வான்.

155
உரை
   


அது கேட்டு, குந்தி வருந்த, கண்ணன் தேற்றுதல்

'மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என்
                 மைந்தன் என்பது
அன்று எனக்கு உரைத்தாய் ஆகில், அவனுடன்
                 அணுக ஒட்டேன்;
சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து, பின்னை
இன்று எனக்கு உரைத்தாய்; ஐயா! என் நினைந்து,
                 என் செய்தாயே?

156
உரை
   


'கான் பட்ட கனலில் பாயும் கடுங் கணை விலக்கினேனேல்,
வான் பட்ட புரவித் தேரோன் மகன் படும்; மகவான் மைந்தன்-
தான் பட்டு மடியும், சென்று தடாது இனி இருந்தேன் ஆகில்;
யான் பட்ட கொடுமை நன்று!' என்று என் பட்டாள்?
                 இரங்கி வீழ்ந்தாள்!

157
உரை
   


தேக்கு உந்தி, அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி
                 சூழ் செல்வக்
கோக் குந்தி அரசன் பாவை குலைந்து அழும்
                 கொடுமை கண்டு,
மீக் குந்தி உறிகள்தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட
வாக்கு, உந்தி மலரோன், பின்னும், மனத் தளர்வு
                 அகற்றினானே:

158
உரை
   


'பை வரும் தலைகள் ஐந்து படைத்த பன்னகமே போல
ஐவரும் படுதல் நன்றோ? அங்கர்கோன் படுதல் நன்றோ?
உய்வு அருஞ் சமரில் ஆவி ஒருவர் போய்,
                 ஒருவர் உய்யார்;
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை' என்றான்.

159
உரை
   


கண்ணன் விதுரன் மாளிகைக்கு மீள, சூரியன்
மறைய, அந்திமாலை தோன்றுதல்

காளமா முகிலின் மேனிக் கரிய நாயகனும் தேற்றி,
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த,
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன்-
                 வருணன் திக்கில்,
நீள மால் யானை நெற்றி நிறத்த செந் திலகம் போன்றே.

160
உரை
   


நால்-திசை உலகுதன்னில், நான் மறை உணர்ந்தோர்தாமும்
போற்று இசை மாலை என்னும் பொற்புடை
                 அணங்கு வைக,
மாற்று இசைவு இலாத செம் பொன் மண்டபம்தன்னில் ஆதி
மேல்-திசைக் கடவுள் இட்ட வெயில் மணிப்
                 பீடம் போன்றான்.

161
உரை
   


கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு
                 இடம் கொடாமல்
முண்டகக் குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப,
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவக் கணிகை மாதர்
வண் துறை நின்று, தங்கள் வாய் மலர்ந்து,
                 அழைக்கலுற்றார்.

162
உரை
   


கான் எலாம் மலர்ந்த முல்லை ககனமீது எழுந்ததென்ன
வான் எலாம் வயங்கு தாரை நிரை நிரை மலர்ந்து தோன்ற,
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன,
தூ நிலா மதியம் வந்து, குண திசைத் தோன்றிற்று அம்மா!

163
உரை
   


தூ இயல் நிலவு தோன்ற, துணைவரைப்
                 பிரிந்தோர் கண்கள்
காவியும், ஆம்பலும், பைங் கருவிள மலரும், போன்ற;
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும்,
தாவு இயல் உழையும், காதல் சகோரமும்,
                 போன்ற மாதோ!

164
உரை
   


இரவில் துரியோதனன் செய்த சூழ்ச்சி

அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர
விரவிய அமளி எய்தி, வீதி மா நகரி எங்கும்
பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்தபின், பரித்
                 தேர் வேந்தன்
இரவிடைச் சூழ்ந்த வண்ணம் இன்னது என்று
                 இயம்புகின்றாம்:

165
உரை
   


'தனி வந்த கண்ணன் திறத்துச் செய்வது என்'' எனத் துரியோதனன் வினாவுதல்

தந்தையும், தம்பிமாரும், கன்னனும், சகுனிதானும்,
சிந்தையில் தெளிந்த கல்விச் செழு மதி அமைச்சர் தாமும்,
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால், முழுதும் எண்ணி,
மந்திரம் இருப்பான் வந்து, ஓர் மண்டபம் குறுகினாரே.

166
உரை
   


தீது அறு மதி வல்லோரைச் செழு மதிக்குடையான்
                 நோக்கி,
'பாதப வனத்தில் போன பாண்டவர்தம்மை மீண்டும்
மேதக அழைத்து, "நாடு வேண்டுமின்" என்று மூட்டும்
யாதவன் தனித்து வந்தான்; என் செய்வது?
                 இயம்பும்!' என்றான்.

167
உரை
   


திருதராட்டிரன், 'கண்ணனைக் கொல்ல வேண்டும்'
என, விகருணன் தடுத்து மொழிதல்

பொரும் படை மைந்தன் கூற, தந்தையும்
                 பொருந்தச் சொல்வான்:
'இரும் புலி வலையில் பட்டால், விடுவரோ,
                 எயினர்ஆனோர்?
வரம்பு இல் வெஞ் சேனையோடும் வளைந்து,
                 இனி மாயன்தன்னைக்
கரும்பொழுது அகலும்முன்னே கொல்வதே
                 கருமம்' என்றான்.

168
உரை
   


கண் இலான் உரைத்த மாற்றம் கேட்டலும், 'காவலோரில்
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை
                 வளைந்து கொன்றார்?
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழிக் கற்றது'? என்று,
வெண் நிலா முறுவல் செய்து, விகன்னனும்
                 விளம்பலுற்றான்:

169
உரை
   


'மூத்தவர், இளையோர், வேத முனிவரர்,
                 பிணியின் மிக்கோர்,
தோத்திரம் மொழிவோர், மாதர், தூதர், என்று
                 இவரைக் கொல்லின்,
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனில்
                 இல்லை;
பூத் தெரி தொடையாய்! பின்னும் நரகினும்
                 புகுவர்!' என்றான்.

170
உரை
   


"பழியுடைப் பகைஞரேனும், தன் பெரும் பதியில் வந்தால்,
அழிவுறக் கோறல் பாவம்; ஆண்மையும் அல்ல" என்பார்;
கழி கடற் சேனை சூழக் கங்குலின் வளைந்திட்டாலும்,
எழிலுடைக் கொண்டல் வண்ணன் அகப்படான்,
                 எவர்க்கும்' என்றான்.

171
உரை
   


துச்சாதனன் விகருணனை முனிந்து, 'போர்
செய எழுவோம்' என்றல்

'வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன்,
தம்பியை முனிந்து சீறி, தமையனை நோக்கிச் சொல்வான்:
'வம்பு அவிழ் அலங்கல் மார்ப! மந்தணம் உரைக்கலுற்றால்,
இம்பர் மற்று யாது சொல்ல, இளைஞரை
                 அழைத்தது?' என்றான்.

172
உரை
   


'அதிர தர் முதலா உள்ள அவனிபர் வளைந்து நிற்ப,
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி,
விதுரனும் அவனும் சேர வெந்திட, மலைவது அல்லால்,
மதி பிறிது இல்லை; இன்னே, வல் விரைந்து
                 எழுமின்!' என்றான்.

173
உரை
   


கன்னன், 'அம்பு ஒன்றினாலே அவனை வெல்வேன்!' எனல்

'செங் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ?
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான்?
வெங் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன்;
கங்குலின் எழுமின்!' என்று கன்னனும் கனன்று சொன்னான்.

174
உரை
   


சூழ்ச்சியால் கண்ணனைச் சிறைப்படுத்தலே தக்கது எனச்
சகுனி உரைத்தல

'பதிப் பெயர்ந்து ஏகி, நாளைப் பகைவரைக் கூடும்ஆயின்,
விதிப் பயன் என்ன, நம்மை வெஞ் சமர் வெல்ல ஒட்டான்;
மதிப்பது என் வேறு? கள்ள மாயனை மனையில் கோலி,
சதிப்பதே கருமம்!' என்று, சௌபலன் பின்னும் சொல்வான்:

175
உரை
   


'கொல்லுவது இயற்கை அன்று; குழி பறித்து, அரக்கரோடு
மல்லரை இருத்தி, மேல் ஓர் ஆசனம் வகுத்து, நாளை
எல்லிடை அழைத்து, வீழ்த்தி, இகலுடன் விலங்கு பூட்டி,
சொல்ல அருஞ் சிறையில் வைத்தல் தூதருக்கு
                 உரிமை' என்றான்.

176
உரை
   


துரியோதனன் நிலவறை அமைத்து, அதனுள் அரக்கர்
முதலியோரை மறைத்து வைத்தல்

மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து, கங்குல்
போதிடை, 'அநேக மல்லர் வருக!' எனப் புகன்று, தானும்
நீதியின் இருந்து, தாழ நிலவறை சமைத்த பின்னர்,
ஆதி நூறாயிரம் போர் அரக்கரை அதனுள் வைத்தான்.

177
உரை
   


மல்லர் பப்பரவர் தம்மை மற்று அதின் இரட்டி வைத்தான்;
வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான்;
பல் படை வல்லோர்தம்மைப் பதின் மடங்கு
                 அதனில் வைத்தான்;-
அல்லில் ஓர் கடிகைதன்னில், அறிவனை அழைக்க என்றே.

178
உரை
   


பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி,
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன்மேல் ஆக்கி,
சுரும்பு இமிர் மாலை தூக்கி, தொழிலுடை விதானம் ஏற்றி,
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலா வண்ணம் செய்தான்.

179
உரை
   


சூரியன் உதித்தல்

அடியவர் மனத்தில் உள்ள ஆர் இருள்-கங்குல் தீர்க்கும்
நெடியவன் இருக்க என்று, நிலவறை விரகின் செய்த
கடியவன் இயற்கை அஞ்சி, கங்குலும் கடிதின் போக,
படியவர் துயிலும் போக, பரிதியும் உதயஞ்செய்தான்.

180
உரை
   


சிரம் தரு சுடிகை நாகத் திரள் மணி பலவும் சிந்தி,
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதயக் குன்றில்,
பரந்து எழும் அருக்கன், சூழ்ந்த படர் இருள்-
                 கங்குல் கண்டு,
புரந்தரன் கோயில் இட்ட, பொங்கு ஒளித்
                 தீபம் போன்றான்.

181
உரை
   


தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற, நெருங்கி,
                 மேன்மேல்
அடர்ந்து, அரி பரந்து, காமன் ஆகம வேதம் பாட,
தடங் கயல் மலைந்து உலாவ, தாமரை முகமும், காதல்
மடந்தையர் முகமும், சேர மணம் பெற, மலர்ந்த மாதோ!

182
உரை
   


அரசர்கள் துரியோதனன் அவைக்கு வருதலும்,
கண்ணன் எழுந்து காலைக்கடன் முடித்தலும்

இருந் துயில் உணர்ந்து, வேந்தர் யாவரும்,
                 இரவில் சற்றும்
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெருங்
                 கோயில் புக்கார்;
பெருந் துயில் அநந்த போகப் பேர் அணை
                 துறந்த மாலும்
அருந் துயில் எழுந்து, காலை அருங் கடன்
                 முறையின் செய்தான்.

183
உரை
   


தூதுவர் அழைக்க, கண்ணன் அரசவைக்குச் செல்லுதல்

மாதவன் இருந்த கோயில் வந்து, அடி வணங்கி, மன்னன்
தூதுவர், 'ஆழி அம் கைத் தோன்றலே! துளப மாலே!
யாதவ குலத்தோர் ஏறே! "எழுந்தருள்க!" என்றான், இன்று எம்
மேதகும் அரசன்' என்றார்; முகுந்தனும் விரைந்து சென்றான்.

184
உரை
   


துரியோதனன் கண்ணனை மட்டும் அவையில் விடுமாறு
காவலர்க்குப் பணித்தல்

கந்து அடு களிற்று வேந்தன், கண் இலா அரசும், கங்கை
மைந்தனும், முதலா உள்ள மன்னரும், மதி வல்லோரும்,
தந்திர வகையும், ஏனை இளைஞரும், தன்னைச் சூழ,
இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு இனிது இருந்தான்.

185
உரை
   


'நாம வேல் அரசரோடும், நால் வகைச் சேனையோடும்,
மா முகில் வண்ணன் வந்தான்!' என்றனர், வரவு கண்டோர்;
வீ மலர்த் தொடையினானும் வேத்திரத்தவரை நோக்கி,
'தாமரைத் தடங் கண் மாயன் தன்னையே விடுமின்!' என்றான்.

186
உரை
   


துரியோதனன் பொய் ஆசனத்துக் கண்ணனை இருக்கச் செய்ய,
அது முறிந்து நிலவறையில் புக, கண்ணன் பெரு வடிவு
கொண்டு, அங்குள்ள வீரரை அழித்தல்

தன் பெருஞ் சேனை நிற்க, தண் துழாய் அலங்கலானும்,
இன்புற நகைத்து, வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த,
மின் புணர் துவச நாக விடம் நிகர் மனத்தினானும்
அன்பொடு திகிரியானை, 'அதன்மிசை இருக்க!' என்றான்.

187
உரை
   


இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே,
நெறுநெறெனக் கொடு நிலவறையில் புக, நெடியவன் அப்பொழுதே,
மறலி எனத் தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா,
முறுகு சினத்துடன், அடி அதலத்து உற, முடி ககனத்து உறவே.

188
உரை
   


'அஞ்சினம், அஞ்சினம்!' என்று விரைந்து, உயர்
                 அண்டர் பணிந்திடவும்,
'துஞ்சினம், இன்று!' என வன் பணியின் கிளை
                 துன்பம் உழந்திடவும்,
'வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை
                 நன்று இது!' எனா,
நெஞ்சில் வெகுண்டு, உலகு ஒன்றுபடும்படி
                 நின்று, நிமிர்ந்தனனே.

189
உரை
   


மல்லர், அரக்கர் குலத்தொடு பப்பரர், வாளினர்,
                 வேலினர், போர்
வில்லினர், இப்படி துற்ற நிலத்து அறை மேவிய
                 வீரர் எலாம்,
தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு சுடிகை
                 அரா எனவே,
கல்லென உட்கினர், தத்தம் உடல், பல கால்கொடு
                 உதைத்திடவே.

190
உரை
   


அற்புத பங்கய நற் பதம் உந்தலின், அக் குழியின்
                 புடையே,
சற்ப தலந்தொறும் அற்று விழுந்தன, தத்தம் நெடுந்
                 தலை போய்;
முன் பவனன் பொர, முக் குவடும் துணிபட்டு,
                 முடங்கிய பொன்
வெற்பு என நின்றனர், வெற்று உடலம்கொடு,-விற்
                 படை கொண்டவரே.

191
உரை
   


மேல் வலி உற்று, எதிர் வீசி, எழில் கரு மேக நிறத் திருமால்
கால் விசையில் பட மோதுதலின், பொரு காமர் புயத் துணைபோய்,
நீல நிறக் கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர்
மால் வரை ஒத்தனர்-வாகை பெறக் கதிர் வாள்கள் எடுத்தவரே.

192
உரை
   


வெயில் விடு பைத் தலை அமளிமிசைத் துயில்
                 விபுதர்களுக்கு-அரியோன்
பயில உதைத்தலின், அவர்கள் உரத்திடை பதமலர்
                 பட்டு உருவா,
மயில் கடவிக் கடவுளர் பகையைக் கதிர் மகுடம்
                 முருக்கிய வேள்
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர்-அயில்கள்
                 எடுத்தவரே.

193
உரை
   


மின் சுடிகைப் புயகங்கள் வெருக்கொளும் வெங்
                 கருடக் கொடியோன்
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து, உயர் வண்
                 ககனத்து இடலால்,
முன்பு வனத்திடை வந்து, கவிக்கு இறை மொய்ம்பு
                 உணரப் புகல்போது
என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர்-எஞ்சிய
                 பப்பரரே.

194
உரை
   


மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த
                 மலர்க் கழலால்
உந்தி, உதைத்து, உடலம் புதையப் பிலம்
                 ஒன்றி ஒளித்திடலால்,
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட, அஞ்சி,
                 நிலத்திடை வீழ்
விந்தமொடு ஒத்தனர்-வன் குழியில் திகழ் வெங்
                 கண் அரக்கருமே.

195
உரை
   


அந்த இடத்து, எறி பம்பரம் ஒத்து, உடலம் சுழலச் சுழல,
குந்தி உறித் தயிர் உண்டவர், பொற் கழல் கொண்டு
                 சுழற்றுதலால்,
முந்து அமரர்க்கு அமுதம் தர மைக் கடல் முன்
                 சுழலச் சுழலும்
மந்தரம் ஒத்தனர்-குந்தம் எடுத்து, எதிர் வந்து மலைந்தவரே.

196
உரை
   


முட்டிய தொல் குருதிக் கடல் மல்கலின், முட்டி
                 கொள் பல் விரலால்
நெட்டுடல் பல் வகிர்பட்டு, அதனுள் விழ, நித்தர்
                 செய் கொல் வினையால்,
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி, மைக்
                 கடல் எல்லையிலே,
இட்டன கல் வரை ஒத்தனர்-வெல் கழல் எக்
                 குல மல்லருமே.

197
உரை
   


'எப் புவி நிற்பன' எக் கிரி நிற்பன? எக் கடல்
                 நிற்பன? என்று,
இப் புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர்,
                 எய்த்து இமையோர்!-
மைப் புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க
                 மலர்க் கழலால்,
ஒப்பு அற மட்குழி உற்றவரைப் பட, ஒத்தி மிதித்தலுமே.

198
உரை
   


கொண்டல் முழக்கு என, அம் புவியைக் கடல்
                 கொண்டு எழுதற்கு எதிரும்
சண்ட முழக்கு என, வன் பவனக் கிளை தந்த
                 முழக்கு எனவே,
வண்டுஇனம் மொய்த்து எழு வண் துளபத் தொடை
                 வண் துவரைத் திருமால்
அண்ட முகட்டுற நின்று, சிரித்தனன், அம் கண்
                 நெருப்பு எழவே.

199
உரை
   


ஒன்றுபடக் கடல் அம்பு முகப்பன, உம்பர்
                 குலத் தருவும்
சென்று முறிப்பன, எண் திசையில் குல சிந்துரம்
                 எற்றுவ, எண்
குன்றம் உடைப்பன, பைம் பொன் உரக் கிரி
                 கொண்டு திரிப்பனவால்-
அன்று தனித்தனி நின்று, மலைத்தருள், அம்
                 கைகள் பற்பலவே.

200
உரை
   


துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின,
                 தொடர் சில கைத்தலமே;
அகிலம் வெருக்கொள, அரி மழு எற்றின,
                 அடு சில கைத்தலமே;
புகலும் வடிக் கணை உதணம் எடுத்தன, பொரு
                 சில கைத்தலமே;
திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன, சில
                 சில கைத்தலமே.

201
உரை
   


வெங் கணையத் திரள், குந்த நிறப் படை, வெம்பும்
                 உலக்கைகள், போர்
பொங்கிய வச்சிரம், உந்து கலப்பைகள், புன்
                 கழுவர்க்கம், அயில்,
எங்கும் மலைத்து எழு செஞ் சுரிகைத் திரள்,
                 தண்டம், இவற்றினொடும்
தங்கிய சக்கர பந்தி தரித்தன-தண் பல கைத்தலமே.

202
உரை
   


மேல் எழு பூங் கதிர் வாள் உறை போம்படி வீசின;
                 வான் புடையே,
தோல்இனம் ஏந்தின; நீள் கவண் ஏந்தின;
                 சோரிகள் சோர்ந்திடவே,
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின; நா ஒரு
                 மூன்றனவாம்
சூலமொடு ஓங்கின; பாசமொடு ஓங்கின;-சூழ் சில
                 பூங் கரமே.

203
உரை
   


சில சில கைத்தலம் அடு கழலில் பல செறி
                 கழல் கட்டினவே;
சில சில கைத்தலம் இறுகு புயத்திடை செறி
                 தொடை இட்டனவே;
சில சில கைத்தலம் அணிகொள் உரத்திடை
                 பணிகள் திருத்தினவே;
சில சில கைத்தலம் விரல்கொடு சுட்டின, செறுநர்
                 திகைத்திடவே.

204
உரை
   


மா இரு ஞாலம் எலாம் வெயில் போய், ஒரு மரகத
                 சோபை உற,
போய் இரு பாலும் வளைந்து, வளைந்து, எதிர் பொரு
                 முனை வெம் படையோடு,
ஆயிரம் ஆயிரம் அம் கை புறப்பட, அண்டரும்
                 மா தவரும்,
பாயிர நான்மறை பாடி, வியந்து, பணிந்து, புகழ்ந்தனரே.

205
உரை
   


தேவர் முதலிய யாவரும் கண்ணனைத் துதித்து வேண்ட,
அவன் தன் பெரு வடிவைச் சுருக்கிக்கொள்ளுதல்

'ஆரணனே, அரனே, புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்
காரணனே, கருணாகரனே, கமலாசனி காதலனே,
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே,
நாரணனே! முனியேல், முனியேல்!' என, நாகர் பணிந்தனரே.

206
உரை
   


'மாதவனே, முனியேல்! எமை ஆளுடை வானவனே, முனியேல்!
யாதவனே, முனியேல்! இதயத்தில் இருப்பவனே, முனியேல்!
ஆதவனே, முனியேல்! மதி வெங் கனல் ஆனவனே, முனியேல்!
நீதவனே, முனியேல்! முனியேல்!' என நின்று பணிந்தனரே.

207
உரை
   


கங்கை மகன், கதிரோன் மகன், அம்பிகை காதல்
             மகன், தனயர்,
அங்கு அவையின்கண் இருந்த நராதிபர், அடைய
             எழுந்து, அடைவே
செங் கை குவித்த சிரத்தினர் ஆய், உணர்வு ஒன்றிய
             சிந்தையர் ஆய்,
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள்!'
             என்று பணிந்தனரே.

208
உரை
   


'கண்ண, பொறுத்தருள்! வெண்ணெய் அருந்திய கள்வ,
             பொறுத்தருள்! கார்
வண்ண, பொறுத்தருள்! வாம, பொறுத்தருள்! வரத,
             பொறுத்தருள், நீ!-
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த
             பெரும் பிழை' என்று,
அண்ணல் மலர்க்கழல் சென்னியில் வைத்து, எதிர்
             அன்று துதித்தனரே.

209
உரை
   


தேவரும், வாசவனும், தவரும், திசைமுகனும்,
             நராதிபரும்,
யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணி,
             இறைஞ்சுதலால்,
மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும், முனிவு
             தவிர்ந்தருளா,
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன்,
             மீளவுமே.

210
உரை
   


சிறிதும் சலித்தல் இன்றி இருந்த துரியோதனனை
நோக்கி, அவனை அழியாமைக்குக் காரணம் கூறி,
கண்ணன் வெளியேறுதல்

தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில்
             சதுர் மறையின்படியே
எந் நிலமும் திருவடியில் மறைந்திட, இப்படி
             நின்றிடவும்,
பின்னையும் அஞ்சி அயர்ந்திலன், நெஞ்சு;
             பெயர்ந்திலன், ஆசனமும்;
சென்னியிலும் கரம் வைத்திலன்; வண் புகழ்
             சிறிதும் மொழிந்திலனே.

211
உரை
   


'தொல் அவையின்கண் இருந்த நராதிப! துன்
             மதியால், எனை நீ
கொல்ல நினைந்தது, நன்று!' என வன் திறல்
             கூறினன், எம்பெருமான்;
'ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட, உற்று
             மலைந்து, ஒர்கணத்து
எல்லையின் வெஞ் சமர் நூறுவன்; யாவரும்
             ஏறுவர், வான் உலகே.

212
உரை
   


'அஞ்சினம், நின்னை அழித்திட-நின்னுடன் அன்று,
             "பெருஞ் சமர்வாய்
வெஞ் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம்"
             என்று விளம்பியதும்,
'எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும்"
             என்று, தனித்தனியே
பஞ்சவர் கூறிய வஞ்சின வாசகமும், பழுது
             ஆம் எனவே.'

213
உரை
   


உடன் வந்த மன்னர்களைக் கண்ணன் நிறுத்தி,
கன்னனுக்கு அவன் பிறப்பு வரலாற்றை உணர்த்தி,
ஐவருடன் கூடுமாறு கூறுதல்

என்று உரையாடி, நெடுங் கடல்வண்ணன்
             எழுந்தருள, பிறகே
சென்றனர், எம் முடி மன்னவரும், பணி சேர்
             கொடியோனை அலார்;
நின்று, உபசாரம் உரைத்து, அவர்தம்மை
             நிறுத்தி, அனந்தரமே
வன் திறல் அங்கர் பிரானொடு கூறினன்,
             மற்று ஒரு வாசகமே:

214
உரை
   


'வண்மையினால் உயர் அங்கர் குலாதிப! மதி
             குலம் வாழ்வுற வந்து,
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும், உன்னில்,
             உனக்கு இளையோர்;
பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை,
             பெருமையினால், இதயத்
திண்மையினால், உயர் நின்னையும், அன்பொடு
             தினகரன் நல்கினனே.

215
உரை
   


'ஏயும் நெடுங் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே,
வாயு வழங்கினன், வீமனை; நல்கினன் விசயனை, வாசவனும்;
ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர், செந்
தேயு எனும் திறல் நகுலனையும், சகதேவனையும் பெரிதே.

216
உரை
   


'அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில்
             அறுவரையும் கடவுள்-
குந்தி பயந்தனள்; யான் இனி என் பல கூறுவது?
             உங்களில் நீர்
இந்த நிலம் பெறுவீர்; தவிர்கின், பெற யார் இனி
             வேறு உரியார்?
வந்து, இனி நும்பியர் தம்மொடு சேர்க!' என
             மாயன் மொழிந்தனனே!

217
உரை
   


'ஐவரை இன்று அடுப்பின், அது செய்ந்நன்றி
கொன்றதாகும்' எனக் கன்னன் மறுத்தல்

'கன்றால் விளவின் கனி உகுத்தும், கழையால் நிரையின்
             கணம் அழைத்தும்,
குன்றால் மழையின் குலம் தடுத்தும், குலவும்
             செல்வக் கோபாலா!
'இன்றால், எனது பிறப்பு உணர்ந்தேன்' என்று அன்பு
             உருகி, எம்பியர்பால்
சென்றால், என்னை நீ அறியச் செகத்தார்
             என்றும் சிரியாரோ?

218
உரை
   


'ஆர் என்று அறியத் தகாத எனை அரசும் ஆக்கி,
             முடி சூட்டி,
சீரும், திறமும், தனது பெருந் திருவும், எனக்கே
             தெரிந்து அளித்தான்;
பார் இன்று அறிய நூற்றுவர்க்கும், பழி தீர் வென்றிப்
             பாண்டவர்க்கும்,
போர் என்று அறிந்தும், செய்ந்நன்றி போற்றாதவரின்
             போவேனோ''

219
உரை
   


கன்னனை அனுப்பிவிட்டு, கண்ணன் அசுவத்தாமனை
அருகில் அழைத்து, 'துரியோதனன
வேண்டினும் நீ
சேனாதிபதி ஆதல் கூடாது' எனல்

இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க,
             இசை வண்டு
விரவிப் பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர்
             மொழியும் விளம்பாமல்
உர வில் தடந் தோள் உரவோனை, 'ஏகு!' என்று
             அருளி, ஒரு சார் வெம்
புரவித்தாமா நின்றானை 'வருக!' என்று அழைத்து,
             புகல்கின்றான்

220
உரை
   


'போயே கானம் பல திரிந்து, புகன்ற விரதம்
               பொய்யாதோர்-
ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட,
               மறுத்ததற்கு,
சேயே அனைய சிலை முனிவன் சேயே! நாளைச்
               செருக் களத்தில்
நீயே கரி' என்று எடுத்துரைத்தான், நெடியோன்
               துளப முடியோனே.

221
உரை
   


'ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில்
               வேறு உண்டோ?
ஞானாதிபனே! போர்க்களத்தில் நாகக்கொடியோன்
               பணிந்து உன்னை,
'சேனாபதி ஆகு" என்றாலும், "செலுத்தேன்"
               என்று, நீ மறுத்தி-
ஆனால் உய்வர், ஐவரும்; மற்று அவன்பால் உனக்கும்
               அன்பு உண்டே!'

222
உரை
   


கண்ணன் தன் மோதிரத்தை வீழ்த்த, அதனை அசுவத்
தாமா எடுக்கும்போது, 'வானில் ஊர்கோள் உற்றது'
என, அவனும் வான் நோக்க, அவையோர்,
'அசுவத்தாமன் சூளுற்றான்' எனல்

ஆயோதனத்தில் அடல் அரிஏறு அனையான்தன்னை
               இவ்வாறு
மாயோன் உரைத்து, தன் விரலின் மணி ஆழியை
               மண்ணிடை வீழ்த்தான்;
சேயோன் அதனை எடுத்து, அவன் தன் செங் கை
               கொடுக்க, வாங்காமல்,
'தூயோய்! ஊர் கோள் பரிதிதனைச் சூழ்ந்தது அகல்
               வான்மீது' என்றே,

223
உரை
   


வரித் தாமரைக் கண் திரு நெடுமால் வான்வாய் நோக்க,
               வரி விற்கைப்
பரித்தாமாவும் ஆழியுடன் பரிதி வடிவம்தனைப் பார்த்தான்;
'கிரித் தாழ் கவிகைக் கருங் கள்வன் கிளர் நூல்
               முனிவன் மைந்தனையும்
பிரித்தான்; அவனும் சூளுற்றான்' என்றார், இருந்த
               பேர் அவையோர்.

224
உரை
   


'அசுவத்தாமனை இனித் தெளியலாகாது' என்று
துரியோதனன் அவையில் கூற, அது
அறிந்து அசுவத்தாமன் வருந்துதல்

தனி வந்து அகலும் தூதனைப் போய், தானே அணுகி,
               தடஞ் சாப
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு, அருஞ் சூள்
               முன்னர் மொழிகின்றான்:
இனி வந்து உறவாய் நின்றாலும், எங்ஙன் தெளிவது,
               இவனை?' எனத்
துனி வந்து, அரசர் முகம் நோக்கிச் சொன்னான்,
               இடிஏறு அன்னானே.

225
உரை
   


துளி ஆர் மதுவின் வலம்புரித் தார்த் துரியோதனன்தான்
               சொல்லியதும்
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கு
               ஒருவர் உரைத்தனவும்,
களி யானை அனான் செவிப்படலும், கலங்கி, 'சித்தம்
               இவர் என்னைத்
தெளியாவண்ணம் பேதித்தான், திருமால்!' என்றே
               சிந்தித்தான்.

226
உரை
   


விதுரன் மாளிகை சென்றபின், கண்ணன் இந்திரனை அழைத்து,
கன்னனிடமுள்ள கவச குண்டலங்களை வாங்குமாறு கூறுதல்

தண் அம் துளப முடியோனும், தனித்து அங்கு இருந்து,
               தன் மனத்தில்
எண்ணம் பலித்தது, என மகிழ்ந்தே, இளையோன்தனக்கு
               விடை நல்கி,
விண் நின்று, அமரர் மிகத் துதிக்க, விதுரன் மனையில்
               மேவிய பின்,
திண்ணம் கடவுட் குல அரசன் வருமாறு
               அறிந்து, சிந்தித்தான்.

227
உரை
   


அந்தக் கணத்தில் வந்து இறைஞ்சும், ஆகண்டலனைத்
               தழீஇக்கொண்டு,
கந்தத் துளப முடியோனும், கண்ணும் கருத்தும் களி கூர,
தந்தத் தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி,
முந்தக் கருதுகின்ற வினை முடிப்பான், உபாயம் மொழிகின்றான்:

228
உரை
   


'கிரியின் சிறகை அரி படையாய்! கேண்மோ:
               ஆண்மைக் களமீதில்
வரி வெஞ் சிலைக் கை விசயனுக்கு மாறாய்
               முனிந்து வருகின்ற,
எரியும் கனல்வாய் விட அரவு ஒன்று இவனுக்கு
               உற்ற பகையான
அரியின் புதல்வன்தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது
               ஆர் அறியாதார்?

229
உரை
   


'கன்னன் விசயன்தனைக் கொல்லின் கடற் பார் முழுதும்
               கண் இல்லா
மன்னன் புதல்வன்தனக்கே ஆம்; ஒழிந்தோர் தாமும்
               மடிந்திடுவார்;
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின்,
               அவர்க்கு அன்று;
நின் நெஞ்சு அறிய, யான் அறிய, நினக்கே வசையும்
               நிலையாமே.

230
உரை
   

'கவசம் கனக குண்டலம் என்று இரண்டு புனையின்,
               கற்பாந்த
திவசம் பொரினும், கன்னன் உயிர் செகுப்பார், மண்ணில்
               சிலர் உண்டோ?
அவசம் கிளைஞர் உற, துணைவர் அரற்ற, களத்தில்
               அடு குரக்குத்
துவசம் படைத்தோன் படும்; பயந்த துணைவா!
               இன்னே சொன்னேனே.
231
உரை
   

'வல்லார் வல்ல கலைஞருக்கும், மறை நூலவர்க்கும்,
               கடவுளர்க்கும்,
இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தோர்தமக்கும்,
               துறந்தவர்க்கும்,
சொல்லாதவர்க்கும், சொல்பவர்க்கும், சூழும்
               சமயாதிபர்களுக்கும்,
அல்லாதவர்க்கும், இரவி மகன் அரிய தானம்
               அளிக்கின்றான்.
232
உரை
   

'மைந்தற்கு உறுதி நீ வேண்டின், வல்லே முனிவர்
               வடிவு ஆகி,
சந்தப் பனுவல் இசைமாலைத் தானாகரனை
               விரைந்து எய்தி,
"அந்தக் கவச குண்டலங்கள் அளிப்பாய்' என்றால்,
               அவன் ஒன்றும்
இந்தப் புவியில் மறுத்து அறியான்; உயிரே எனினும்,
               ஈந்திடுவான்!
233
உரை
   

'இரண்டும் அவன்பால் நீ கவரின், இருந் தேர் ஊர்ந்து,
               இப் படி அரசர்
திரண்டு வரினும், வெஞ் சமரில் திண் தேர் விசயன்
               எதிர் நில்லார்.
முரண்டு பொரு வில் கன்னனும், தன் முன்னே எய்தி,
               முடி சிதறி,
புரண்டு மறியும'' என, வணங்கி, புத்தேள்-அரசன்
               போகின்றான்.
234
உரை
   


இந்திரன் கன்னனிடம் கிழ முனி வடிவம் கொண்டு வந்து,
அவனது கவச குண்டலங்களைப் பெறுதல்

தண்டு தாள் எனக் குனிந்து உடல் அலமர, தாள்
               இணை தளர்ந்து தள்ளாட,
கண்டு யாவரும் கைதொழ, கவித்த கைக் குடையுடன்,
               கங்கை நீர் நுரையை
மொண்டு மேல்உறச் சொரிந்ததாம் என நரை திரையுடன்,
               மூப்பு ஒரு வடிவம்
கொண்டதாம் என, ஒரு முனி ஆகி, அக் கொற்றவன்
               வாயில் சென்று அடைந்தான்.

235
உரை
   

'அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன்
               முற்பகல் அளவும்
கொடுத்து, நாயகன் புகுந்தனன்; நாளை நீர் குறுகுமின்'
               என்று, அவன் கோயில்
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின், தலைவனும்,
               'தருக!' என, விரைவின்
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும், வேந்தனும்,
               தொழுது, அடி வீழ்ந்தான்
236
உரை
   

'என்ன மா தவம் புரிந்தனன், பரிந்து நீ ஈண்டு
               எழுந்தருளுதற்கு!' என்று,
பொன்னின் ஆசனத்து இருத்தி, மெய் அன்புடன் பூசையும்
               முறைமையில் புரிய,
அன்ன வேதியன், 'தளர்ந்த என் நடையினால் ஆனதே
               பிற்பகல்' என்று,
சொன்ன வேலையில் நகைத்து, 'உனக்கு அளிப்பன், நீ
               சொன்னவை யாவையும்' என்றான்.
237
உரை
   

'அருத்தி ஈதல் பொற் சுர தருவினுக்கும் மற்று அரிது!
               நீ அளித்தியோ?' என்று,
விருத்த வேதியன் மொழிந்திட, நகைத்து, 'நீ மெய் உயிர்
               விழைந்து இரந்தாலும்,
கருத்தினோடு உனக்கு அளித்திலேன்எனின், எதிர் கறுத்தவர்
               கண் இணை சிவப்ப,
உருத்த போரினில், புறந்தரு நிருபர்போய் உறு பதம்
               உறுவன்!' என்று உரைத்தான்.
238
உரை
   

வந்த அந்தணன், 'கவச குண்டலங்களை வாங்கி நீ
               வழங்கு, எனக்கு!' என்ன,
'தந்தனன் பெறுக!' என அவன் வழங்க, விண் தலத்தில்
               ஓர் தனி அசரீரி,
'இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான்;
               வழங்கல் நீ!' எனவும்,
சிந்தையின்கண் ஓர் கலக்கம் அற்று, அளித்தனன், செஞ்
               சுடர்த் தினகரன் சிறுவன்.
239
உரை
   


இந்திரன் தன் உண்மை வடிவு காட்டி, கன்னனுக்கு
வேல் ஒன்று கொடுத்தல்

அண்டர் யாவரும் மலர் மழை பொழிந்தனர்; அந்தர
               துந்துபி ஆர்ப்ப,
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து, தன் கோல
               மெய்யுடன் வெளிநின்றான்;
கண்டு, மா மனம் உருகியே, களித்திடும் கன்னனுக்கு,
               அந் நெடுங் கடவுள்,
'மண்டு போரினில் வயம் தரும் இது' என, மற்று ஒரு
               கொற்ற வேல் எடுத்தே,

240
உரை
   

'வெலற்கு அருந் திறல் விசயன்மேல் ஒழித்து, நீ வெஞ்
               சின மடங்கல்போல், நெஞ்சில்
கலக்கம் ஒன்று அறப் பொரு திறல் புனைந்திடு கடோற்கசக்
               காளைதன் உயிரே
இலக்கு, வந்து எதிர் மலைந்தபோது இதற்கு, என ஏவு!'
               என மறையையும் இயம்பி,
சொலற்கு அரும் புகழ்ச் சுரபதி கொடுப்ப, அத் தோன்றலும்,
               தொழுது கைக் கொண்டான்.
241
உரை
   


இந்திரன் கண்ணனிடம் மீண்டு வந்து நிகழ்ந்தன கூற,
அவன் இந்திரனுக்கு விடை கொடுத்தல்

நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து,
               அவண் நிறுத்தி,
புரந்தரன் பசுந் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன்
               இருந்துழிப் போந்தே,
இரந்து சென்று தான் மொழிந்ததும், அவ்வளவு ஈந்ததும்,
               ஆங்கு அவற்கு இசைத்தான்;
வரம் தரும் திருமால் அதை வினவி, அவ் வாசவன்
               தனக்கு உரைவழங்கும்:

242
உரை
   

'உண்மை ஆக வெஞ் சமர்முகத்து எறி படை ஒன்றும்
               வந்து உடல் உற ஒட்டா,
திண்மையால் உயர், கவச குண்டலங்களைச் சென்று
               இரந்தவற்கு இவன் கொடுத்தான்!
எண்மை ஆயினும், கிளைஞரே ஏற்பினும், ஈவு இலாப்
               புன் செல்வர் ஈயார்;
வண்மையாளர் தம் ஆர் உயிர், மாற்றலார் கேட்பினும்,
               மறுக்கிலார் அன்றே!'
243
உரை
   


குந்தியைக் கண்ணன்துண்ட, அவள் கன்னனிடம் செல்லுதல்

வாசவன் தனக்கு விடை கொடுத்ததன்பின், வந்த
               காரியம்தனை முடிப்பான்,
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர்
               தெரிவையைக் கிட்டி,
'தேசவன் தந்த குரிசில்பால் விரைவில் செல்க!' என,
               பயந்த சேயிழையும்
பாசம் முன்னுற, மால் ஏவலால், தனது பாத
               பங்கயம் சிவப்பித்தாள்.

244
உரை
   


கன்னன் குந்தியை எதிர்கொண்டு உபசரிக்க, அவள்
அவனுக்குத் தான் தாய் என்பதை மெய்ப்பித்தல்

'வந்து குந்தி நின் கோயில் எய்தினள்' என வாயிலோர்
               உரைத்திட, மைந்தன்
முந்தும் அன்புடன் தொழுது, எதிர்கொண்டு, நல் முறைமையால்
               ஆசனத்து இருத்தி,
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி, வான்
               கரை கடந்து, ஏறும்
சிந்து வெண் திரைச் சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு
               உரை சில செப்பும்:

245
உரை
   

'அன்னை வந்தது என் அருந் தவப் பயன்!' என, அன்பினால்
               இன்புற வணங்கி,
'என்னை வந்தவாறு?' என்ன, மற்று அவளுமே, 'ஈன்ற தாய்
               யான் உனக்கு' என்று,
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும்,
               கதிரவன் அருளால்,
பின்னை வந்ததும், பேழையில் விடுத்ததும், பிழை இலாது
               உரைத்திட, கேட்டே,
246
உரை
   

'மாயனார் விரகு இது' என மனத்தினில் மதித்து, உவந்து
               அளித்திடும் வள்ளல்,
'நீ அ(ந்) நாள் எனைப் பயந்தவள் என்னினும், நின் மொழி
               நெஞ்சுறத் தேறேன்;
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால், பெற்ற
               தாய் எனக்கு என வந்து,
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால், துன்பம் உற்று,
               என்பு உரு ஆனார்.
247
உரை
   

'அடாது செய்தவர் படாது பட்டனர்' எனும் அங்கர்கோன்
               அருள் மொழி கேட்டு,
தடாத அன்புடைக் கெடாத தூ மொழி பகர் தையலும்
               மையலின் தவிர்ந்து,
'படாமது என் கையில் தருக!' என, வருதலும், 'பயந்திலேன்எனில்
               எனை முனி' என்று,
எடா, விரித்து, அலைத்து, உடல் படப் போர்த்து, எதிர் ஈன்ற
               தாய் ஆம் என இருந்தாள்.
248
உரை
   

இருந்த தாய், ஈன்ற அன்றுபோல் உருகி, இரு தடங்
               கொங்கை பால் சொரிந்தாள்;
அருந்துவான் போல இரவி சேய் விரும்பி, ஆதரத்துடன்
               புளகு ஆனான்;
புரிந்த தாய் அன்போடு இறுகுறத் தழுவி, பொன் முடி
               மோயினள், உயிரா,
பரிந்து, 'நான் அன்றே உனை வளர்த்து எடுக்கப் பாக்கியம்
               செய்திலேன்' என்றாள்.
249
உரை
   


'இளைஞர் ஐவருடனும் வந்து நீயே அரசாள வேண்டும்'
என்று குந்தி வேண்ட, கன்னன் அதற்கு ஏதுக்
காட்டி, மறுத்து மொழிதல்

'வருக என் மதலாய்! இளைஞர் ஐவரும் நின் மலர்
               அடி அன்பினால் வணங்கி,
உரிமையால் மனம் ஒத்து, ஏவலே புரிய, ஒரு தனிச்
               செய்ய கோல் ஓச்சி,
அரசு எலாம் வந்து, உன் கடைத்தலை வணங்க,
               ஆண்மையும் செல்வமும் விளங்க,
குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன்'
               எனக் குறித்தாள்.

250
உரை
   

'பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ?' அன்றி, பெரும்
               பழி நாணியோ? விடுத்தீர்;
அற்றை நாள் தொடங்கி, என்னை இன்று அளவும், ஆர்
               உயிர்த் துணை எனக் கருதி,
கொற்ற மா மகுடம் புனைந்து, அரசு அளித்து, கூட உண்டு,
               உரிய தம்பியரும்
சுற்றம் ஆனவரும், என் அடி வணங்க, தோற்றமும்
               ஏற்றமும் அளித்தான்.
251
உரை
   

'மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
               அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
               கோக்கவே?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
               சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,
               தருமமும்!' என்றான்.
252
உரை
   


குந்தி மிகவும் வருந்த, கன்னன் அவளைத் தேற்றி,
வந்த காரியத்தை வினவுதல்

பின்னையும் பற்பல் மொழிந்த பின், 'பலவும் பேசி என்?
               பூசலோ விளைந்தது;
உன்னி நீர் இங்கு வந்தது என்? கரவாது, உண்மையால்,
               உள்ளவாறு உரைமின்!'
என்ன மைந்தனும், இப் பரிசினால் உரைப்ப, ஈன்று அறத்
               துறந்த அன்றையினும்
அன்னை நெஞ்சு அழிந்தே, இரு கண் நீர் சொரிய, அலறி,
               வாய் குழறி, நொந்து அழுதாள்.

253
உரை
   

ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து, அவ்
               அன்னையைப் பன் முறை தேற்றி,
'மூண்ட வல் வினையின் பயன் அலாது, யார்க்கும் முயற்சியால்
               வருவது ஒன்று உண்டோ?
வேண்டும் யாவையுமே தருகுவேன்; நீரும் வேண்டிய
               வேண்டுக!' என்ன,
பாண்டுவின் திரு மா மனைவியும் அதற்குப் பண்பினால்
               இன்னன பகர்வாள்
254
உரை
   


குந்தி இரு வரம் வேண்ட, கன்னனும் மறாது கொடுத்தல்

'பார்த்தன் வெஞ் சமரில் நின்னுடன் மலைந்தால், பகைப்
               பெரும் பாந்தள் அம் பகழி
கோத்தலும், பிழைத்தால், மறித்தும், நீ விடுத்துக் கோறல்!'
                என்று ஒரு வரம் குறித்தாள்;
'வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று, அவரை மலையல்!'
                என்று ஒரு வரம் குறித்தாள்;
மூத்தவன், காதல் இளைஞர்தம் பொருட்டால் மொழிந்தமை
                கேட்டு இவை மொழிவான்:

255
உரை
   

'தெறு கணை ஒன்று தொடுக்கவும், முனைந்து செருச்
                செய்வோன் சென்னியோடு இருந்தால்,
மறு கணை தொடுப்பது ஆண்மையோ' வலியோ' மானமோ'
                மன்னவர்க்கு அறமோ'
உறு கணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன்; ஒழிந்துளோர்
                உய்வர்' என்று உரைத்தான்-
தறுகணர் அலர்க்கும், தறுகண் ஆனவர்க்கும், தண்ணளி
                நிறைந்த செங் கண்ணான்.
256
உரை
   


கன்னன் குந்தியிடம் இரண்டு வரம் வேண்டிப் பெறுதல்

பெரு வரம் இரண்டும் பெற்றபின், தன்னைப் பெற்ற
                தாயினைக் கரம் குவித்து,
'தரு வரம் எனக்கும் இரண்டு உள: உலகில் சராசரங்களுக்கு
                எலாம் தாயீர்!
வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது,
                அவனிபர் அறிய,
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து, உம்தம் மகன்
                எனும் வாய்மையும் உரைப்பீர்.

257
உரை
   

'உய்வு அருந் திறல் வெம் போர் முடிப்பு அளவும், உமக்கு
                நான் மகன் எனும் தன்மை
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர்; அல்லது, அங்கு
                அவர் சிறிது அறியின்,
மை வரும் கடற் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர்;
                வழங்கினால், யான் என்
கைவரும் துணைவன்தனக்கு அலால், வழங்கேன்; கடைப்பிடி,
                கருமம் ஈது' என்றான்.
258
உரை
   

என்றலும், அது கேட்டு, ஈன்ற தாய், 'ஒக்கும்!' என்று
                கொண்டு, இவ் வரம் நேர்ந்து,
'வன் துயர் மேன்மேல் வளர, யான் தளரா வகை, உயிர்
                உனக்கு முன் பெயர்வது
என்று இனி!' எனத் தன் கண்கள் நீர் சொரிய, இனைந்து,
                நைந்து, அழுது அழுது, இரங்கி,
என்று அருள் மதலைதனைத் தழீஇ, நிறுத்தி, யாதவன்
                இருந்துழிச் சென்றாள்.
259
உரை
   


குந்தி கண்ணனிடம் மீண்டு வந்து செய்தி உரைக்க,
கண்ணன் மகிழ்ந்து, பாண்டவரிடம் மீண்டு
வந்து, நிகழ்ந்தன கூறல்

கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம்
                திருத்தமாக் கேட்டு, ஆங்கு,
'எண்ணமும் முடிந்தது' என மகிழ்ந்து, அந்த அணங்கையும்
                இல்லிடை இருத்தி,
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறை
                முறை நிறுத்தி,
பண் அமை தடந் தேர்மீது கொண்டு, அன்றே, பாண்டவர்
                உறை நகர் அடைந்தான்.

260
உரை
   

தூது போய் அரவத் துவசனோடு உறுதி சொன்னதும்,
                மறுத்து, அவன் சினந்து
மோது போர் புரியத் துணிந்ததும், விதுரன் மூரி வில்
                இறுத்ததும், கங்குல்
போது போய் வஞ்சம் விளைத்ததும், கன்னன்
                புரந்தரற்கு ஈந்ததும், பயந்த
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய, மற்று எலாம்
                மைத்துனர்க்கு உரைத்தான்.
261
உரை