பக்கம் எண் :

திருவாசகம்
150


ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர்
பேயனேன் இதுதான்நின் பெருமை யன்றே
எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே.

பதப்பொருள் : ஆய - சிறந்த நூலாகிய, நான்மறையவனும் - நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்ட பொருளாய மிக மேலானவனும், நீயே ஆதல் அறிந்து - நீயேயாகியிருத்தலைத் தெரிந்துகொண்டு, யான் - நான், யாவரினும் கடையன் ஆய - எல்லாரினும் கடைப்பட்டவனாகிய, நாயினேன் ஆதலையும் - நாய்போல்பவனாயிருத்தலையும், நோக்கிக் கண்டு - ஆராய்ந்து பார்த்து, நாதனே - இறைவனே, நான் - அடியேன், உனக்கு - தேவனாகிய உனக்கு, ஓர் அன்பன் என்பேன் ஆயினேன் - ஓர் அன்பன் என்று நினைப்பேனாயினேன்; ஆதலால் - ஆகையால், ஆண்டுகொண்டாய் - ஆட்கொண்டருளினை; ஓர் பேயனேன் அன்றி - நீ ஆட்கொள்வதற்கு ஒப்பற்ற பேயின் தன்மையுடைய வனாகிய என்னையன்றி, மற்று அடியார்தாம் இல்லையே - வேறு அடியார்கள் இல்லையோ? - (பலர் இருக்க என்னையாண்ட) இச்செய்கை, நின் பெருமை அன்றே - உன் பெருந் தன்மையே யன்றோ? எம்பெருமான் - எம்பெருமானே, என் சொல்லிப் பேசுகேன் - உன் பெருமையை என்னென்று சொல்லிப் புகழ்வேன்!

விளக்கம் : மறைகள் போற்றப்படுபவன; போற்றப்படும் மறைகளாலும் போற்றப்படுபவன் இறைவன் என்று இறைவனது சிறப்புக் கூறுவார், ‘ஆயநான் மறையவனும் நீயேயாதல் அறிந்தும்’ என்றார். மக்களைக் காட்டிலும் விலங்கு இழிபிறப்புடையது; விலங்கில் மிக இழிந்தது நாய். நாய் போன்ற இழி பிறப்புடையவன் யான் என்பார், ‘யாவரினுங் கடையனாய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு’ என்றார். ஆயினும், அத்துணைச் சிறப்புடைய இறைவன் இத்துணை இழிவுடைய தம்மையாண்டது தாம் அவனை அடைய விரும்பிய ஓர் ஆர்வத்தால்தான் என்பார், ‘அன்பன் என்பன் ஆயினேன்; ஆதலால், ஆண்டுகொண்டாய்’ என்றார். அடியார் பலர் இருக்கத் தம்மை ஆண்டது இறைவனது பெருந்தன்மை என்பார், ‘இதுதான் நின் பெருமையன்றே’ என்றார். ‘இவ்வளவு வியத்தகு செயலைச் செய்த இறைவனை என் சொல்லி வாழ்த்துவேன்!’ என இறுதியில் இரங்குகிறார்.

இதனால், இறைவனது பெருமையும் உயிர்களது சிறுமையும் கூறப்பட்டன.

23