பக்கம் எண் :

திருவாசகம்
152


அடியார்கள் தமக்கு நன்மை வரினும், தீமை வரினும் இறைவனது திருப்பெயரையே சொல்லி வாழ்த்துவார். ஆகையால், 'போற்றி எம்பெருமானே என்று, என்றார். "வழுக்கி வீழினும் திருப் பெயரல்லால் மற்று நான் அறியேன் மறுமாற்றம்," என்பது சுந்தரர் திருவாக்கு. 'உன் அடிமையாகிய என்னைச் சுதந்தரனாகவும், உனது உடைமையாகிய உடல் முதலியவற்றை என்னுடையனவாகவும் கருதுகின்றேன்' என்பார். 'கள்வனேன்' என்றார். அவா எல்லா உயிர்க்கும் பிறப்பைத் தருகின்ற வித்து. அங்ஙனமிருந்தும், அவாக்கடலில் அலைப்புண்டு வருந்தும் தம்மைப் பிறப்பிலிருந்து நீக்கி ஆட்கொண்டது அதிசயம் என்பார், 'அவா வெள்ளக் கள்வனேனை - ஆட்கொண்ட வண்ணந்தான் என்னை!' என்று இரங்குகிறார்.

இதனால், திருநீறு நிறையப் பூசி, இறைவனது நாமத்தை எப்பொழுதும் சொல்லி, யான் எனது என்னும் பற்றுகளை யறுப்பார் இறைவனால் ஆட்கொள்ளப்படும் தகுதியுடையார் என்பது கூறப்பட்டது.

24

வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்ற
நேகனேகன் அணுவணுவில் இறந்தா யென்றங்
கெண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமா றறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தான் அதுகாட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே.

பதப்பொருள் : இமையோர் கூட்டம் - தேவர் குழாம், வண்ணந்தான் - உனது நிறந்தான், சேயதன்று - சிவப்பன்று; வெளிது அன்று - வெள்ளையன்று; அநேகன் - நீ பலவாயிருப்பவன்; ஏகன் - ஒருவன்; அணு அணுவில் இறந்தாய் - அணுவாயிருப்பவன், அணுவினையும் கடந்த அதிநுட்பமுடையாய், என்று - என்று பேசி, அங்கு - அவ்வாறே, எண்ணந்தான் தடுமாறி - நினைவுதானும் தடுமாறப்பெற்று, எய்தும் ஆறு - உன்னை அடையும் நெறியை, அறியாத - அறியவொண்ணாத, எந்தாய் - எந்தையே, உன்றன் வண்ணம் காட்டி - உன்னுடைய நிறத்தைக் காட்டி, வடிவு காட்டி - நீ ஆட்கொள்ளவந்த திருமேனியையுங் காட்டி, மலர்க்கழல்கள் காட்டி - தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டி, வழி அற்றேனை - உய்யும் வகையில்லாத என்னை, திண்ண - உண்மையாக, பிறவாமல் - பிறவாதிருக்கும்படி, காத்த ஆட்கொண்டாய் - தடுத்தாட் கொண்டருளினை, எம்பெருமான் - எந்தலைவனே, என் சொல்லி - உன்