பக்கம் எண் :

திருவாசகம்
155


கடலில் வீழ்ந்து, எவ்வம் - துன்பங்களாகிய, தடம் திரையால் - பெரிய அலைகளால், எற்றுண்டு - அலைக்கப்பட்டு, பற்று ஒன்று இன்றி - ஆதாரம் சிறிதுமின்றி, கனியை நேர் - கொவ்வைப் பழத்தை ஒத்த, துவர் வாயார் என்னும் காலால் - சிவந்த வாயினையுடைய மகளிராகிய காற்றால், கலக்குண்டு - கலக்கப் பட்டு, காமம் - காமமாகிய, வான் - பெரிய, சுறவின் வாய்ப்பட்டு - சுறாமீனின் வாயிலே அகப்பட்டு, உய்யும் ஆறு - பிழைக்கும் வழி, இனி என்னே என்று என்று எண்ணி - இனி யாதோ என்று பலகாலும் எண்ணி, அஞ்செழுத்தின் புணை பிடித்து - திருவைந்தெழுத்தாகிய தெப்பத்தைப் பிடித்துக்கொண்டு, கிடக்கின்றேனை - கிடக்கின்ற என்னை, மூர்க்கனேற்கு - முரண் குணமுடைய எனக்கு, முதல் அந்தம் இல்லா - முதல் ஈறுகளில்லாத, மல்லல் - வளப்பம் பொருந்திய, கரை காட்டி - முத்தியாகிய கரையைக் காட்டி, ஆட்கொண்டாய் - அடிமை கொண்டருளினாய் (உன் கருணை இருந்தவாறென்னே!)

விளக்கம் : கடலில் வீழ்ந்தோர் கரை ஏறுதல் அரிது; பிறவியில் வீழ்ந்தோறும் முத்திக்கரையில் ஏறுதல் அரிது. அதனால் பிறவியைக் கடல் என்றார். 'பிறவிப் பெருங்கடல்' என்றார் திருவள்ளுவரும். கடலில் அலை ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அது போல, வாழ்வில் துன்பம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அதனால் துன்பத்தை அலை என்றார். புயற்காற்று, கலக்கத்தைச் செய்யும், மகளிரின் தோற்றமும் கண்டாரைக் கலங்கச் செய்யும், அதனால் மகளிரைப் புயற்காற்று என்றார். சுறாமீன், தன் வாயிற்பட்டாரை உள்ளே விழுங்கும்; ஆசை வயப்பட்டோரும் அல்லலில் அழுந்துவர். அதனால் காமத்தைச் சுறாமீன் என்றார்.

தெப்பத்தைக்கொண்டு கடலைக் கடக்கலாம்; திருவைந் தெழுத்தாகிய மந்திரத்தைக்கொண்டு பிறவியைக் கடக்கலாம். அதனால், ஐந்தெழுத்தைப் 'புணை' என்றார். 'வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் யஞ்செழுத்து' என்றார் சேக்கிழார் சுவாமிகள். மீகாமன் தெப்பத்தால் மக்களைக் கரையில் சேர்க்கிறான்; இங்கு முதல்வன் அஞ்செழுத்தால் அடிகளை முத்தியில் சேர்த்தான் என்பார், 'முனைவனே முதலந்தம் இல்லா மல்லற்கரைகாட்டி ஆட்கொண்டாய்' என்றார். 'அஞ்செழுத்தின்' என்பதிலுள்ள 'இன்' சாரியை.

இதனால், பிறவியாகிய கடலைக் கடந்து முத்திக்கரையை ஏறுவதற்கு அஞ்செழுத்தாகிய தெப்பம் சாதனமாகிறது என்பது கூறப்பட்டது.

27