ஞானம் உண்டான பின்னரே பிறவியறுமாதலின், 'பிறவா மற்காத்தாண்டான்' என்றார். காட்டாதன காட்டுதலும் கேளாதன கேட்பித்தலும் மாயவித்தையாதலின், 'எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே' என்றார். இதனால், இறைவன் அருளினாலன்றிச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பதரிது என்பது கூறப்பட்டது. 28 விச்சைதான் இதுவொப்ப துண்டோ கேட்கின் மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கி அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுத மூறி அகநெகவே புகுந்தாண்டான் அன்பு கூர அச்சன்ஆண் பெண்அலிஆ காச மாகி ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற செச்சைமா மலர்புரையும் மேனி யெங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே. பதப்பொருள் : அச்சன் - எமது தந்தையும், ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி - ஆண் பெண் அலி ஆகாயம் என்பவையாகி, ஆர் அழல் ஆய் - நிறைந்த நெருப்பாகி, அந்தமாய் - இவையாவற்றிற்கும் முடிவாகி, அப்பால் நின்ற - அதற்கும் அப்பாற்பட்டு நின்ற, செச்சை மாமலர் புரையும் - வெட்சியின் சிறந்த மலரையொத்த, மேனி - திருமேனியையுடைய, எங்கள் சிவபெருமான் - எங்கள் சிவபெருமானும், எம்பெருமான் - எம்முடைய தலைவனும், தேவர் கோ - தேவர்பெருமானும் ஆகிய இறைவன், மிகு காதல் - மிக்க அன்பினையுடைய, அடியார்தம் அடியன் ஆக்கி - தன்னடியார்க்கு அடியனாக்கி, அச்சம் தீர்த்து - பயத்தைத் தவிர்த்து, ஆட்கொண்டான் - என்னைத் தடுத்தாட் கொண்டான்; அமுதம் ஊறி - அமிர்தம் சுரந்து, அகம் நெக - நெஞ்சம் உருகவும், அன்பு கூர - அன்பு மிகவும், புகுந்து ஆண்டான் - என்னுட்புகுந்து ஆண்டருளினன்; கேட்கின் - கேட்கு மிடத்து, இது ஒப்பது - இதனை நிகர்ப்பதாகிய, விச்சை உண்டோ - வித்தையொன்று உளதோ! விளக்கம் : அத்தன், அச்சன் எனப் போலியாயிற்று. இறைவன் உயிர்த்தொகுதியாயும் ஐம்பூதமாயும் இருக்கிறான் என்பதைக் குறிப்பிட, 'ஆண் பெண் அலியாகாசம் ஆகி ஆரழலாய்' என்றார். பூதங்களில் இரண்டைக் கூறி மூன்றை உள்ளடக்கினார். ஆயினும், அவற்றை இறுதி செய்பவனாயும், அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கிறான் என்பதைக் குறிப்பிட, 'அந்தமாய் அப்பால்' என்றார். செச்சை மலர் சிவப்பு நிறமுடையது. இறைவன் செம்மேனியம்மான் ஆதலின், செச்சை மலரை உவமை கூறினார். மெய்யன்பர்கட்கு இன்பத்தைத் தருபவன் என்பதைக்
|