பக்கம் எண் :

திருவாசகம்
165


விளக்கம் : தேவலோகம் முதலியவற்றுக்குச் சென்றால் மீளவும் பிறப்பு உண்டு. சிவலோகம் சென்றால் பிறப்பு இல்லை; ஆதலின், புகத்தக்கது சிவலோகமே என்பார், 'புகுவதாவது' என்றார். போதரவு - மீளுதல். உகுவது - பற்றுகள் கழன்று ஒழிவது. அமுதம் முதலியவற்றுள் ஒன்றும் பேரின்பத்திற்கு நிகராகாது என்பார், 'அமுதொடு தேனோடு பால் கட்டி மிகுவது' எனப் பலவற்றையும் சேர்த்துக் கூறினார். உகுவது முதலிய மூன்றும் இல்லை என்று தம் நிலையை நொந்துகொள்வார் 'என் செய்கேன் வினையேனே' என்றார்.

இதனால், இறைவன் திருவடி மலருக்கு அன்பு செய்தற்கும், அம்மலரிலுள்ள தேனை உண்டு இன்பம் அனுபவித்தற்கும் தவம் செய்திருக்க வேண்டும் என்பது கூறப்பட்டது.

36

வினையென் போலுடை யார்பிறர் ஆர்உடை
யான்அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்
பன்றுமற் றதனாலே
முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்
முட்டிலேன் தலைகீறேன்
இணையன் பாவனை யிரும்புகல் மனம்செவி
இன்னதென் றறியேனே.

பதப்பொருள் : என்போல் - என்னைப் போல, வினை உடையார் - தீவினை உடையவர், பிறர் ஆர் - பிறர் யாருளர்? உடையான் - என் முதல்வன், அடி நாயேனை - நாய் போன்ற அடியேனை, தினையின் பாகமும் - தினையளவும், பிரிவது - நீங்கியிருப்பது, திருக்குறிப்பு அன்று - அவனது திருக்குறிப்பு அன்று; அதனாலே - ஆதலால், முனைவன் பாதம் - இறைவனது திருவடியாகிய, நல்மலர் - நல்ல மலரை, நான் பிரிந்திருந்தும் - நானே நீங்கியிருந்தும், தலை முட்டிலேன் - தலையைக் கல் முதலியவற்றில் முட்டிக்கொள்கிலேன், கீறேன் - பிளந்து கொள்ளேன்; இனையன் - இத்தன்மையேனாகிய என்னுடைய, பாவனை - கருத்து, இரும்பு - இரும்பாகும்; மனம் கல் - மனமானது கல்லாகும்; செவி இன்னதென்று அறியேன் - காது இன்ன பொருள் என்று அறியேன்.

விளக்கம் : தம்மையாட்கொண்ட பின்னர்ப் பிரிந்திருப்பது இறைவன் திருக்குறிப்பு அன்று. ஆகவே, அப்பிரிவிற்குக் காரணம் தம் வினைதான் என்பார், 'வினை என் போலுடையார் பிறரார்' என்றார், பிறர் ஆர் என்பது, ஒருவரும் இல்லை என்றபடி. தினை - சிறுமைக்குக் காட்டுவதோர் அளவை.