புரிந்த என் தலைவனை' என்றார். தலைவனைப் பிரிந்த பெண்கள் உயிர் வாழ விரும்பாது தீயில் குதித்தலும் மலையினின்று வீழ்தலும் பண்டைய மரபு. தலைவனைப் பிரிந்த தாம் உயிர் வாழ விரும்பாது இச்செயல்களைச் செய்ய வேண்டும். அம்மாதிரி செய்யவில்லை' என்பார், 'தீயில் வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன்' என்றார். இவ்விரண்டும் செய்வதற்கு வைராக்கியம் வேண்டும். அது தம்மிடத்து இல்லை. கடலிலாவது பாய்வேனா? அதுவும் செய்யமாட்டேன் என்பார், 'செழுங்கடற்புகுவேனே' என்றார். இதனால், சிவபோகத்தை விரும்புவார் உலகத்தைத் துறந்து உயிரை விடத் துடிப்பர் என்பது கூறப்பட்டது. 39 வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினையாதே மானி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேனி லாவிய திருவருள் புரிந்தஎன் சிவனகர் புகப்போகேன் ஊனில் ஆவியை யோம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. பதப்பொருள் : வேனில் வேள் கணை - வசந்த காலத்து மன்மதனுடைய பாணங்கள், கிழித்திட - உடம்பு முழுதும் துளையாநிற்க, மதி சுடும் அதுதனை - சந்திரன் சுடுதலாகிய அத்துன்பம் உண்டாகும் என்பதை, நினையாதே - சிந்தியாமலே, மான் நிலாவிய - மான் பார்வை போன்று விளங்குகின்ற, நோக்கியர் - பார்வையுடையவராகிய மாதரது, படிறிடை - வஞ்ச ஒழுக்கத்தில், மத்து இடு தயிராகி - மத்திட்டுக் கடையப்படும் தயிர் போல நின்று மனம் கலங்கி, தேன் நிலாவிய - தேனின் இனிய தன்மை தங்கிய, திருவருள் புரிந்த - திருவருளை என்னிடத்துச் செய்த, என் சிவன் - என் சிவபெருமானது, நகர் - சிவபுரத்துள், புகப்போகேன் - புகப்போகின்றிலேனாகி, ஊனில் ஆவியை - உடம்பினுள் உயிரை, ஓம்புதற் பொருட்டு - பாதுகாத்தற்பொருட்டு, இனும் - இன்னமும், உண்டு உடுத்து இருந்தேன் - உண்டும் உடுத்தும் இருக்கின்றேன். விளக்கம் : மலர்க்கணையும், முழுமதியும் காமுகர்க்குத் துன்பந்தரும். 'கணை கிழித்திட மதி சுடும்' என்று தாம் படும் துன்பத்தை விளக்கினார். மருண்ட பார்வையுடையது மான். மாதரும் அத்தன்மையுடையராதலின், 'மானிலாவிய நோக்கியர்' என்றார். மத்தினால் கடையப்பட்ட தயிர் கலங்கும்; மகளிரால்
|