பக்கம் எண் :

1329
 

ஆதலின், திருமூலர் காலம் இற்றைக்கு ஏறக்குறைய 8000 ஆண்டுகள் ஆகின்றன.

திருமூலர் காலம் இராமாயண காலம், அஃதாவது 6000 B. C. என்று கொண்டால், திருமூலர் தம் நூலின்கண் கூறிய திரிபுராதிகளும், பொதியமலை அகத்தியரும், சலந்தரனும், தக்கனும், அந்தக அசுரனும், மார்க்கண்டேயரும் திருமூலருக்கு முற்பட்டவர்கள் ஆகின்றார்கள்.

வசிட்டர் - வியாக்கிரமர் - மன்று தொழுத பதஞ்சலி - உபமன்னியு - கோதமர் - சதாநந்தர் - இராவணன் - பஞ்சவடி அகத்தியர் தசரத இராமர், சனகர் முதலியவர்கள் சம காலத்தவர்கள் ஆகின்றார்கள்.

(எ) அகத்தியர் பலர் என்பது

அகத்தியர் என்ற பெயர் உடையவர்கள் பலபேர். அவர்கள் எல்லாரும் பலகாலங்களில் இருந்தவர்கள். அவர்களிற் சிலரை ஈண்டுத் தருகின்றேன் :

(1) திரிபுராதிகள் காலத்தில் இருந்த பொதியமலை அகத்தியர் அல்லது குற்றாலமுனி அல்லது குறுமுனி.

(2) செங்கோவின் காலத்தில் இருந்த பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் முத்தூர் அகத்தியர்.

(3) சூரபன்மன் காலத்தில் இருந்த வாதாபி அகத்தியர்.

(4) பரசுராமர் காலத்தில் இருந்த குடகுமலை அகத்தியர் அல்லது குடமுனி.

(5) இராமாயண காலத்தில் தசரத இராமருக்கு உதவியாயிருந்த பஞ்சவடி அகத்தியர்.

(6) பாரத காலத்தில் இருந்த உலோபா முத்திரையை மணந்த துவராபதி அகத்தியர்.

(7) பவுத்த மதத்தைச் சேர்ந்த அகத்தியர்.

(8) சித்தர் குழாஅத்தைச் சேர்ந்த சித்த அகத்தியர்.

(9) வைத்திய முறையில் கைதேர்ந்த அகத்தியவேள்.

(10) காம்போதி நாட்டு (Cambodia) யசோமதியை மணந்த அகத்தியர்.

என எத்துணையோ பேர் அகத்தியர் நாமம் படைத்தவர்கள் ஆவார்கள்.