பக்கம் எண் :

182
 

பருகிக் கருக்கொண்ட கருமுகிலாய் நின்றனன். அம் முகிலால் பொய்யாது பெய்யப்படும் நீர் நிறை வானாகவும் நின்றனன். இவை அனைத்தினும் இடையென்று சொல்லப்படும் உள்ளுறைபவனாய் நிற்பவனும் அவனே. என்றும் ஒருபடித்தாய் அழிவின்றி நிற்பவனும் சிவனே. எங்குந் தானாகி நிற்பவனும் அவனே. தன் திருவடியைப் புகலிடமாக் கொண்டு வந்து சாரும் மெய்யடியார்கள் என்றும் இன்புற்று வாழும் வண்ணம் அவனருளால் பெருவழி வகுத்தருளினன். பெருவழி - சித்தாந்தச் சைவத் திருநெறி. அவனே யாவர்க்கும் யாவைக்கும் அண்ணலாகிய முழுமுதல்வனாய் நின்றருளினன்.

(3)

401. தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்
தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்
தானொரு காலந்தண் மாயனு மாமே.

(ப. இ.) சிவபெருமான் ஒரு காலத்து ஒப்பில்லாத பேரறிவுப் பெருஞ்சுடராய் நிற்பன். ஒருகாலத்துப் பெருங்காற்றாகவும் நிற்பன். ஒருகாலத்துக் குளிர்ந்த பெருமழையாய் நிற்பன். ஒரு காலத்துத் தொழிலின் பொருட்டுத் தலைக்குணத்தை மேற்கொண்ட குளிர்ந்த மாயவனுமாய் நிற்பன். தலைக்குணம் - அமைதிக்குணம்; சாத்துவிககுணம். இத் திருப்பாட்டான் சிவபெருமான் எல்லாமாய் இயைந்து நின்று அவற்றை இயக்கும் எழில் ஓதப்படுகின்றது.

(4)

402. அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்1
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில அமர்ந்துநின் றானே.2

(ப. இ.) அனைத்துயிர்கள் மாட்டுங்கொள்ளும் அன்பால் ஒருவர்க்கு உண்மையறிவு உண்டாகும். அவ்வுண்மை அறிவினால் ஒழுக்கத் தனிச் சிறப்பாம் அடக்கமுடைமை உண்டாகும். எனவே அப் பண்புகளினிடமாக நின்றருள்பவன் சிவபெருமான். அதனால் அப் பண்புகளே சிவபெருமான் என ஓதப்பட்டன. அதுபோல் நல்லறக் காதலர் தம்முள் சிவநினைவுடன் எய்தும் இன்பமும், அவ் வின்பத்தின் பொருட்டுக் கூடும் கூட்டத்துணையும், சிவபெருமானே யாவன். பேரூழிப்பின் உலகங்களனைத்தையும் திருவருளால் ஒருங்கு தோற்றுவிக்கும் பெரும் பொருள் சிவபெருமானே. அங்ஙனம் தோற்றுவித்து பெரும் பொருள் சிவபெருமானே. அங்ஙனம் தோற்றுவித்து நிலைநிறுத்திப் பின் பேரொடுக்கம் செய்யும் ஊழிப் பெருமானும் சிவனே. இது 'தொல்லூழி தடுமாறித் தொகல் வேண்டுங் காலத்தால், பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்' (கலித்தொகை, 129) என்பதனால் விளங்கும். யாவரும் எண்மையாக வழிபட்டு ஈடேறும் பொருட்டு அன்பு செய்தல் வேண்டும். அதற்கேற்றவாறு ஐம்பெரும் பூதவுருவாய் அமர்ந்து நிற்பவனும் சிவனே. ஆய்நிற்கும் - காதலர்தம் கூட்டம் நிகழ்


1. தென்பால். 8. திருச்சாழல். 9.

2. படைப்ப. உண்மை விளக்கம், 9.

" போகியா. சிவஞானசித்தியார், 1. 2 - 30.