(ப. இ.) ஞானாதித்தன் என்பது அறிவுச்சுடர் என்பதாகும். இவ்வறிவுச்சுடர் மூலத்திடமாக நின்று ஓசைவடிவாய்த் தோன்றும். அவ்வோசை மேல்நிலை நாதத்தின் செயல் எனக் கூறுப. நாதவடிவின் நிறம் செம்மை எனக் கூறுப. அக் குறிப்புத் தோன்றவே அருணம் என்றனர். இவை வள்ளலாகிய சிவபெருமானால் நிகழ்வன. இந்த மேல்நிலை விந்துவிலிருந்து செவியோசை முதலிய ஓசைகள் தோன்றும். அதுபோலவே ஐங்கலைகளும் தோன்றும். ஐங்கலைகள் (1956) மேலோதப்பட்டன. இவ்வோசை நான்கும் ஐங்கலைகளுக்குட்பட்டன. அவையும் ஐவகையாகக் குறிக்கப்பெற்றன. அவ்வோசை ஐந்தும் வருமாறு: நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை, தன்செவிக்குக் கேட்கும் ஓசை, பிறர் செவிக்கும் கேட்கும் ஓசை என்ப. இவற்றை முறையே, சூக்குமை, பைசந்தி., மத்திமை. வைகரி-அ, வைகரி-ஆ என்ப. உதயம் - தோன்றுமிடம். வைகரி - அ, தன்செவிக்குக் கேட்பது. வைகரி - ஆ, பிறர் செவிக்குக் கேட்பது. (அ. சி.) உள்ள - உள்ளத்தில். அருணோதயத்து-சிவந்த சிவசூரிய ஒளி வீசுதலால். (20) 1958. தேவர் பிரான்திசை பத்துத யஞ்செய்யும் மூவர் பிரானென முன்னொரு காலத்து நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும் மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.1 (ப. இ.) தேவர்கள் அனைவர்கட்கும் முழுமுதலவனாக என்றும் விளங்குபவன் சிவபெருமான். சிவபெருமான் திருவருளால் பத்துத் திசையும் அதன்கட்படும் பொருள்களெல்லாமும் மூலப்பகுதியினின்றும் தோற்றுவிக்கப்பட்டன. அவை தோன்றுதற்கு இயற்றுதற் கருத்தாவாக நிற்பவர் மூவர். அவர்கள் சிவபெருமானின் திருவாணைவழியாகவே இயற்றுகின்றனர். இவர்கட்குத் தனிப்பட்ட ஏதொரு முதன்மையும் கிடையாது. இவர்கள் முக்குணம்படைத்த உயிரினத்தவரே யாவர். இவர்களே அயன் அரி அரன் என அழைக்கப்படுவர். இவர்கள் மூலப் பகுதிக்கு உட்பட்டவர். இவர்களுக்கும் முதல்வன் சிவபெருமானே. இம் மூவர்க்கும் காலத்தால் முற்பட்டவரும் சிவபெருமான் திருவாணையால் இம் மூவர்கட்கும் கண்காணியாக நின்று தொழிற்படுத்துவோரும் மூவர் உளர். அவர்களும் உயிரினத்தவரேயாவர். ஆயினும் அவர்கள் கட்டுநீங்கிய சிறப்புயிரினத்தவராவர். இவர்கட்கு உறைவிடம் தூமாயையின்கண் காணப்படும் முப்பத்திரண்டாம் மெய்யாகிய ஆசான்மெய் என்க. ஆசான்மெய் - சுத்தவித்தை. இம் மூவரும் அயன் அரி அரன் என்னும் காரணத் தொழிற்பெயரே பெறுவர். இவர்களும், முப்பத்து மூன்றாம் மெய்யின் கண்ணுள்ள ஆண்டானும் ஆகிய நால்வரும் ஒரு வகையினர் என்று மறைசொல்லாநிற்கும். இந் நால்வர்க்கும் பொதுவாம் முதன்மையன் சிவபெருமானே. இம் முறையான் யாவர்க்கும் யாவற்றிற்கும் இயற்கை முழுமுதல்வனாக விளங்குபவன் சிவபெருமானே என்று மண்ணவரேயன்றி விண்ணவரும் நண்ணி எண்ணிக் கண்ணி வழுத்தா நிற்பர். (அ. சி.) நால்வர் - அயன், அரி, அரன், ஈசன். (21)
1. தேவர்கோ. 8. திருச்சதகம், 30.
|