பக்கம் எண் :

774
 

அருளுகின்றனன். அச் சிவபெருமானே உடலுயிர்களுடன் வேறற விரவி நின்றருள்கின்றனன். அச் சிவபெருமானே எல்லாவற்றுக்கும் புகலிடமாகவுள்ள வெளியாகவும் நின்றருள்வன். எல்லா வொளிகளையும் தொழிற்படுத்தும் மாறாப் பேரொளியாகவும் சிவபெருமான் நின்றருள்வன். அம்மட்டோ? இருளுக்கு ஓராற்றான் நிலைக்களமாய் நீக்கத் தொழிற்றுணையாய் நிற்பவனும் சிவனே. மருத்துவமனை உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான் என்னும் நால்வர்க்கே யுரியது. ஆனால் உற்றவனைப் பற்றிநிற்கும் நோய்க்கும் மருத்துவமனையே இடமாக நிற்கின்றது. அதுபோல் தூய சிவபெருமானும் மாறுபட்ட தீய இருளுக்கும் புகலிடமாக இருக்கின்றான். அப் புகலிடம் நீக்கப் புகலிடமேயாம். ஆடையில் தோயப்பெற்ற சாயத்துக்கு ஆடை நீங்காப் புகலிடம். ஆடையில் ஏறிய அழுக்கினுக்கும் ஆடை தாங்காப் புகலிடம். தாங்காப் புகலிடமெனினும் நீக்கப் புகலிடமெனினும் ஒன்றே. இவற்றை உடம்பிற்பட்ட சந்தனமும் சாணகமும் போன்றும் கருதலாம். ஒருபுடை யொப்புமையாக இக் குறிப்பினைச் சிவபெருமானின் திருநீலகண்டம் விளக்குவதாகும். விண்ணோர் இருள்முனைப்பால் மிக்கெழுந்த நஞ்சு நெற்றிக், கண்ணோன் கறைமிடற்றிற் காண் என நினைப்போமானால் நன்கு புலனாகும்.

(29)

1967. தெய்வச் சுடரங்கி ஞாயிறுந் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகஞ்
சைவப் பெரும்பதி தாங்கிய 1பல்லுயிர்
ஐவர்க் கிடமிடை யாறங்க மாகுமே.

(ப. இ.) தெய்வத் திருவருளால் ஒளிபெற்றுத் திகழ்ந்து சுடரும் தீ, ஞாயிறு, திங்கள், நிலம், புனல், அனல், மாருதமாகிய காற்று, வானம், சித்தாந்த சைவப்பெரு முதல்வனாகிய சிவபெருமானால் தாங்கப் பெறும் பலவுயிர், ஆகிய எட்டும் சிவபெருமான் தன்னை நினைக்கும் மெய்யன்பர்கட்கு வெளிப்பட்டு நின்றருளும் நிலைக்களங்களாகிய திருவுருவங்களாகும். மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் ஐம்புலனிகழ்ச்சிக்கு உடம்பு நிலைக்களமாகும். இவையனைத்தும் உடம்பகத்துக் காணப்பெறும் மூலமுதலாக எண்ணப்பெறும் ஆறு நிலைக்களங்களின் இடையுமாகும். இடையென்பதற்கு முச்சுடர்க்குப் பின்னால் ஓதப்படும் ஆறுறுப்பு என்றலும் ஒன்று.

(அ. சி.) ஐவர் - பஞ்சேந்திரியம். இடை ஆறங்கம் - அங்கத்தின் நடுவேயுள்ள ஆறு ஆதாரங்கள்.

(30)