பக்கம் எண் :

943
 

வறிவுடையார் நெஞ்சத்து மும்மையுலகத்துக்கும் அம்மையாகிய திருவருள் எனப்படும் ஆதி எழுந்தருள்வள். பகவனாகிய சிவபெருமானும் அந் நல்லார் நெஞ்சத்தின்கண் தங்கியருள்கின்றனன். மும்மை யுலகம் 'அவன், அவள், அது என்னும் அவை'.

(9)

2324. மாயனு மாகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுத லானவன்
சேயன் அணியன் தித்திக்குந் தீங்கரும்பு
ஆயமு தாகிநின் றண்ணிக்கின் 1றானே.

(ப. இ.) காத்தற்குரிய மாயனும், படைத்தற்குரிய மலரோனும், துடைத்தற்குரிய இறையும் ஆக விளங்குபவன் சிவபெருமான் ஒருவனே. இறை - அரன். ஆருயிர்கட்கு உடம்புகளைப் படைத்தளிக்கும் வினைமுதற் காரணனும் அவனே. அவன் அன்பரல்லாதார்க்குச் சேயனாக நிற்கின்றான். அன்பர்நல்லார்க்கு அண்ணியனாகவிருக்கின்றான். சேயன் - தொலைவிலுள்ளவன். அண்ணியன் - அருகிலுள்ளவன். மிகஇனிக்கும் கரும்பாவானும் அவனே. அமுதாகத் திகழ்பவனும் அவனே. உயிர் தொறும் ஓவாது அண்ணிக்கும் நுண்ணியானும் அவனே.

(அ. சி.) காயநன்னாடு - உடல். கரு - பிள்ளைக்கரு. அண்ணிக்கின்றான - சேர்ந்து இருக்கின்றான்.

(10)

2325. என்னை யறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை யறிந்திட் டிருந்தலுங் கைவிடாது
என்னைவிட் டென்னை உசாவுகின் றானன்றே.

(ப. இ.) ஒருவன் விளக்கில்லாத இருட்டு வீட்டில் பொருளேயன்றித் தன்னையும் காணமாட்டாத் தன்மைபோல், சிவபெருமானின் நல்லுணர்வாம் முற்றுணர்வு விளக்கு ஏற்றப்படாமையால் ஆருயிர்க்கிழவன் தன்னை அறியும் தன்மையிலாதவனாகின்றனன். அதனால் வருந்தி இத்தனை காலமும் என்னை அறிந்திலேன் என ஓதப் பெற்றது. கருவிகளுடன் கூடி உயிர் தானுண்டென அறிவது அவ் வுயிரின் பொது நிலையும் நிலையில் நிலையுமாகும். கருத்தாவாகிய சிவபெருமான் உடன் கூடி உடனாய் நின்று உணர்வது சிறப்பு நிலையும் மாறா நிலையுமாகும். திருவருளால் என்னை யறிந்தபின் உலகியலில் யான் நிற்பினும் உலகியற் பொருள்கள் ஒன்றும் அறிந்திலேன். ஆருயிரின் தன்மை ஒன்றில் அழுந்தி அதுவதுவாய் நிற்குங்கால் வேறொன்றும் அறியாமையாகும். அது, சார்ந்தொன்றில் தானழுந்த வேறறியாத் தன்மையுயிர், ஆர்ந்த சிவத்தாரறியார் வேறு என்பதனால் உணர்க. என்னை யறிந்திட்டுச் சிவனிறைவில் அடங்கியுள்ளேன். சிவனும் என்னைக் கைவிடாது ஆண்டு கொண்டனன். சிவன் என்னைத் திருவருளிலிட்டு என்னையே உசாவுகின்றனன். உசாவுதல் - புலன்வினாதல். மாறாநிலை - நினைப்புள்நிலை. இதன்கண் நம் மூலர் தம்முன்நிலையருள்கின்றனர்.

(11)


1. ஆலைப் அப்பர், 6. 52 - 2.

" கனியினும். " 5. 10 - 14.