பக்கம் எண் :

944
 

2326. மாய விளக்கது நின்று மறைந்திடுந்
தூய விளக்கது நின்று சுடர்விடுங்
காய விளக்கது நின்று கனன்றிடுஞ்
சேய விளக்கினைத் தேடுகின் 1றேனே.

(ப. இ.) மாயாதனு விளக்காதலின் மாய விளக்கது என்றார். அஃதாவது மாயாகாரியமாகிய உடல் கலன் உலகு ஊண் முதலிய பொருள்கள் விளக்குப்போல் நம் வாழ்க்கைக்குத் துணையாகவும், அதன்கண் காணப்படும் எண்ணெய் அகல் திரி தீ முதலியன போல நுகர்வாகவும் இருக்கின்றன. ஆனால் அது காலவரையறைக்கு உட்பட்டு மாயும். அதனால் அதனை நின்று மறைந்திடும் என்றனர். என்றும் ஒன்றுபோல் நின்று ஒளிரும். தூய விளக்காகிய சிவன் திருவடி விளக்கு ஆருயிர்களுக்கு முற்றுணர்வினை உற்றுவிளக்கி முற்றுவிக்கும். உடம்பாகிய விளக்கு அடம்பண்ணி 'உன்னோடு வாழ்தல் அரிதென்று' அலறி அழும்படி வருத்தும். இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட திருவடிப் பேரின்பப் பெருவாழ்வென்னும் செம்மையான விளக்கு அம்மையினை அருள்வதாகும். அம்மை - திருவடிப்பேறு. அத் திருவிளக்கினை அருளால் நாடுகின்றேன். சேய - செம்மையான.

(அ. சி.) மாயவிளக்கு - மாயையாகிய விளக்கு. தூய விளக்கு - ஞான விளக்கு. காய விளக்கு - உடலாகிய விளக்கு. சேய விளக்கு - செம்மையாகிய விளக்கைப் போன்ற சிவன்.

(12)

2327. தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டையும்
நாடுகின் றெனல மேயுடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

(ப. இ.) பத்துத் திசையின்கண்ணும் பரம் பொருளைப் பரிந்து தேடுகின்றேன். பொலம் ஒரு சிறிதும் இல்லா நலமே நிறைந்த சிவபெருமானைக் குறித்து அவன் திருவடியை நாடுகின்றேன். சிவபெருமானே நமக்கு வழித்துணையும் விழுத்துணையும் என்று பழுதில் செந்தமிழால் பாடிப் பரவுகின்றேன். அச் சிவபெருமானே பரம்பொருள்; அவனே ஆருயிர்த்துணை என்னும் உண்மை கண்டு அவன் திருவடியிற் கூடுகின்றேன். அதுவே நிறைமன வழிபாடாகும். அத் திருக்குறிப்புக் 'குறையாமனம்' என்பதனால் பெறப்படும். திசை - புலம். பொலம் - தீமை.

(13)

2328. முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தாள்
மன்னிச் சிவமாக2 வாரா பிறப்பன்றே.


1. மாயாதனு. சிவஞானபோதம், 4. 2 - 1.

" இல்லக. அப்பர், 4. 11 - 8.

2.எவரேனும். " 6. 61 - 3.